வண்ணங்களின் காதலன் இளையராஜா

வண்ணங்களின் காதலன் இளையராஜா

பெண்மையைப் பிரதானப்படுத்திய இவரது ஓவியங்கள் உலகப் புகழ்பெற்றவை. தூணில் சாய்ந்தபடி, அடுப்பூதும் பெண், பூத்தொடுக்கும் இளம்பெண், ஆடுகளை மேய்க்கும் சிறுமி, நிலைப்படி, குளத்தங்கரையில் அமர்ந்திருக்கும் பெண், குளத்தில் நீரோடு விளையாடும் பெண், கையில் குழந்தையை ஏந்தியபடி சிரித்திருக்கும் தாய், பூக்கூடையுடன், இறைவனை வணங்கியபடி என நமது பக்கத்து, எதிர்வீட்டுப் பெண்களைத் தத்ரூபமாக ஓவியமாக்கும் கலை வாய்க்கப்பெற்றவர்.

தத்ரூப ஓவியங்களின் அரசன் என அழைக்கப்படும் ஓவியர் இளையராஜா (வயது 43) கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளது அவரது ரசிகர்கள் மட்டுமில்லாது, அவரது ஓவியத்தை அறிந்த பலரது மத்தியிலும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் தனது உறவினரின் திருமணத்திற்காக கும்பகோணம் சென்று சென்னை திரும்பிய நிலையில் சளி தொந்தராவால் பாதிக்கப்பட்டுள்ளார். அதன்பிறகு ஊரில் அவரது உறவினர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதை அவர் அறிந்தார். இளையராஜாவின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சென்னை எழும்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் மாரடைப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி ஓவியர் இளையராஜாவின் உயிர் பிரிந்தது.

இளையராஜாவின் ஓவியங்கள் அனைத்தும் மிகத் தனித்துவமானவை, தமிழ்ப்பெண்களின் இயல்புகள், உணர்வுகள், அழகியல் தன்மைகள், முகபாவனைகள் அனைத்தையும் தனது தூரிகைகளால் தத்ரூபமாக கொண்டு வரும் ஆற்றல் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.

குடும்பம் மற்றும் ஓவிய ஆர்வம்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே செம்பியவரப்பு கிராமத்தில் தச்சுத்தொழில் செய்யும் குடும்பத்தில் பிறந்தவர் ஓவியர் .இவருக்கு மொத்தம் ஐந்து அண்ணன்கள் மற்றும் 5 அக்காக்கள் உள்ளனர். இவர்தான் அந்த குடும்பத்தின் கடைசி மகன்.

கும்பகோணம் ஓவிய கல்லூரியில் பட்டம் பெற்ற அவர் ஓவியத்தின் மீது தீராத காதல் கொண்ட இளையராஜா அதில் தனது ஆர்வத்தை வளர்த்துக் கொண்டு திறமையை மேம்படுத்தினார்.


நடிகர் பார்த்திபன் படத்தில் உதவி இயக்குனர்

ஓவியர் இளையராஜா ஒரு ஓவியராக மட்டும் அல்லாமல் இயக்குனர் ,நடிகர் பார்த்திபன் படமான இவன் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார்.இவரது திடீர் மரணம் சினிமா துறையினருக்கு மட்டும் அல்லாமல் அவரது ரசிகர்களுக்கும் பேர் அதிர்ச்சியாக இருந்தது .

பல பாராட்டுக்கள்

2003 ஆம் ஆண்டில் நடந்த ஓவியக் காண்காட்சியில் முதன்முறையாக இளையராஜாவின் ஒவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டது. 2009ஆம் ஆண்டில் திராவிட பெண்களின் அழகியல் குறித்த கண்காட்சி என்ற பெயரில் அப்ஸ்ட்ராக்ட் ஆர்ட் கேலரியில் நடந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட இவரது திராவிட பெண்கள் குறித்த ஓவியங்களை விகடன் இதழ் நிறுவனமே வாங்கி தனது இதழ்களில் வெளியிட்டது.

இவரது ஓவியங்கள் இயல்பாக இருப்பது மட்டும் இல்லாமல் தத்ரூபமாகவும் இருக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். இவரது எதார்த்தமான ஓவியத்திற்கு பல ரசிகர்களை இவர் பெற்றுள்ளார் .சினிமா துறையில் ஜாம்பவான்களாக திகழும் பலரிடம் பல பாராட்டுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

ஓவியர் இளைராஜா மறைந்தாலும், அவர் வரைந்த ஓவியங்கள் நம்மிடையே சுவாசித்துக்கொண்டுதான் இருக்கும்.
Share Tweet Send
0 Comments
Loading...