திருப்பங்கள் தரும் தீபங்கள் !

திருப்பங்கள் தரும் தீபங்கள் !

தீபம் ஏற்றுவதற்கு உகந்த நேரமாக கருதப்படுவது அதிகாலை பிரம்ம முகூர்த்தமான நான்கு மணி முதல் ஆறு மணி வரையும் (சூரிய  உதயதிற்கு முன்) மாலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை (சூரிய உதயதிற்கு பின்).

காலையில் ஏற்றி வழிபட்டால் அனைத்து செயல்களும் நன்மையைத் தரும், மற்றும் பெரும் புண்ணியம் உண்டாகும். முன்வினைப் பாவம்  விலகும்.

மாலையில் 4.30-6க்கு இடையே உள்ள பிரதோஷ வேளை சிவபெருமானுக்கும், நரசிம்ம மூர்த்திக்கும் மிகவும் உகந்தவை.  இவ்வேளையில் தீபமேற்றினால் திருமணத்தடை, கல்வித்தடை நீங்கும் என்பது ஐதீகம் மற்றும் வீட்டில் லெட்சுமி வாசம் செய்வாள்.

விளக்கு ஏற்றும் முறை: ஒரு முகம் ஏற்றினால் - நினைத்த செயல்கள் நடக்கும். இரு முகம் ஏற்றினால் - குடும்ப ஒற்றுமை கிட்டும். முன்று முகம் ஏற்றினால் - புத்திரதோஷம் நீங்கும். நான்கு முகம் ஏற்றினால் - பசு,பூமி,செல்வம், சர்வபீடை நிவர்த்தி ஆகும். ஐந்து முகம் ஏற்றினால் - சகலநன்மையும்,ஐஸ்வர்யம் பெருகும். நல்லெண்ணை எனப்படும் எள் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றிட, குடும்பத்தை ஆட்டிப் படைக்கும் எல்லாப் பீடைகளும் தொலைந்து போகும். நெய் ஊற்றி தீபம் ஏற்றினால் சகல வித சந்தோஷமும் இல்லத்தில் நிறைந்திருக்கும். விளக்கெண்ணை ஊற்றி தீபம் ஏற்றுபவர்களுக்கு புகழ்  அபிவிருத்தியாகும்.

தீபமேற்றப்படும் எண்ணெய்யின் பலன்கள்: நெய் - செல்வவிருத்தி, நினைத்தது கைகூடும். நல்லெண்ணெய் - ஆரோக்கியம் அதிகரிக்கும். தேங்காய் எண்ணெய் - வசீகரம் கூடும். இலுப்பை எண்ணெய் - சகல காரிய வெற்றி. விளக்கெண்ணெய் - புகழ் தரும். ஐந்து கூட்டு எண்ணெய்  (விளக்கெண்ணை, இலுப்பை எண்ணை, நெய், நல்லெண்ணை, தேங்காய் எண்ணெய்) - அம்மன் அருள், வேப்பெண்ணை - கணவன் மனைவி  உறவு நலம் பெறவும், மற்றவர்களின் உதவி பெறவும். ஆமணக்கு எண்ணெய் - அவரவர்கள் தங்கள் குல தெய்வத்தின் முழு அருளையும் பெற  வழி செய்வது.

கடலை எண்ணை, கடுகு எண்ணை, பாமாயில் போன்றவைகளைக் கொண்டு ஒருபோதும் விளக்கேற்றவே கூடாது. மனக்கவலையையும், தொல்லைகளையும், பாவங்களையுமே பெருக்க வல்லவை இந்த எண்ணெய்யின் தீபங்கள்.

எண்ணெய்க்கு உகந்த தெய்வங்கள்: விநாயகர் - தேங்காய் எண்ணெய். மகாலட்சுமி - பசுநெய். குலதெய்வம் - வேம்பு, இலுப்பை, பசுநெய் கலந்த  எண்ணெய். பைரவர் - நல்லெண்ணெய். அம்மன் - விளக்கெண்ணெய், வேம்பு, தேங்காய், இலுப்பை, பசுநெய் சேர்ந்த 5 கூட்டு எண்ணெய்.பெருமாள், சிவன், முருகன், பிற தெய்வங்கள் - நல்லெண்ணெய்

திரிகளின் வகைகளும் அவை தரும் பலன்கள்: திரிகள் புதிதாகவும், கெட்டியானதாகவும் இருக்க வேண்டும். திரிகளும், பயன்களும்  குத்துவிளக்கிற்கு பயன்படுத்தும் திரிகளாலும் பயன்கள் மாறுபடுகின்றன.

பருத்திப் பஞ்சு - குடும்பம் சிறக்கும், நற்செயல்கள் நடக்கும்.

வாழைத் தண்டின் நார் - முன்னோர் சாபம், தெய்வ குற்றங்கள் நீங்கி அமைதி உண்டாகும்.

தாமரைத்தண்டு நூல் - முன்வினைப் பாவங்கள் நீங்கி, நிலைத்த செல்வம் கிடைக்கும்.

வெள்ளை எருக்கம்பட்டை - செல்வம் பெருகும்.

புதிய மஞ்சள் துணி - நோய்கள் குணமாகும்.

புதிய சிவப்பு வண்ண துணி - குழந்தையின்மை தொடர்பான தோஷம் நீங்கும்.

புதிய வெள்ளை துணி திரி - அனைத்து நற்பலன்களும் கிடைக்கும்.

(துணியின் மீது பன்னீர் தெளித்து காயவைத்து பின்பு திரியாக்கி விளக்கேற்றுவது மிகவும் நல்லது.)

தீபமானது அகல் விளக்கு, காமாட்சி விளக்கு, குத்து விளக்கு, கிளியன் சட்டி என பல வடிவங்களில் ஏற்றப்படுகிறது.

தீபமானது வீட்டில் பூஜை அறை, சமையலறை, துளசி மாடம், முற்றம் போன்றவற்றிலும், கோவில்கள், தொழில் நிறுவனங்கள், கல்விகூடங்கள் என எல்லா  இடங்களிலும் ஏற்றப்படுகிறது. எல்லா செயல்களின் தொடக்கத்திலும் தீபம் ஏற்றப்பட்டே செயல்கள் ஆரம்பிக்கப்படுகின்றன.

கிழக்கு: இத்திசை நோக்கி தீபம் ஏற்றினால் வாழ்வின் துன்பங்கள் நீங்கும். கிரக தோசம் நீங்கி லட்சுமி கடாட்சம் கிட்டும். வீடு இல்லாதவர்கள்  வீடு வாங்குவார்கள்.

தென்கிழக்கு: இத்திசை நோக்கி தீபம் ஏற்றினால் குழந்தைகளுக்கு புத்தி கூர்மை உண்டாகும். குழந்தைகள் படிப்பில் கெட்டியாக விளங்குவர்.  இதற்கு தென்கிழக்கு திசையில் தீபம் ஏற்றி அதன் புகையை குழந்தைக்கு நெற்றியில் இடவேண்டும்.

தெற்கு: வீட்டில் இத்திசை நோக்கி தீபம் ஏற்றக் கூடாது. மரண பயம் உண்டாக்கும். வீட்டில் யாராவது இறந்து விட்டால் வசதி இல்லதவர்கள் கோவிலில் தெற்கு நோக்கி தீபம் ஏற்றி இறந்தவர்களுக்கு நல்ல அனுகிரகத்தைப் பெற்றுத் தரலாம்.

தென்மேற்கு: இத்திசையில் தீபம் ஏற்ற பெண்கள் மற்றும் ஆண்களால் வரும் துன்பம், கலகம் ஆகியன நீங்கும். திருமணத் தடங்கல்கள்  நீங்கும்.

மேற்கு: இத்திசையில் தீபம் ஏற்ற பணத்தால் வந்த பகைமை வளராமல் தீரும். கடன் தொல்லை நீங்கும். வடமேற்கு: இத்திசை நோக்கி தீபம் ஏற்றினால் சகோதர சகோதரி ஒற்றுமை நிலவும். குடும்பச் சண்டைகள் நீங்கும்.

வடக்கு: இத்திசை நோக்கி தீபம் ஏற்றினால் நல்ல காரியங்களில் வெற்றி பெறலாம். மாங்கல்யத்தைப் பேணி மதிக்காத பாவம் நீங்கும்.  திருமணம் கைகூடும்.

வடகிழக்கு: இத்திசை நோக்கி தீபம் ஏற்றினால் வீட்டின் தலைவர் வாழ்வில் உண்மையான கொடையாளியாக மாறுவார். அவரும் அவர்தம் பிள்ளைகளும் தம்மையும் அறியாமல் தானம் செய்வர்.

Share Tweet Send
0 Comments
Loading...