பொதிகை மலை

பொதிகை மலை


நெல்லை மாவட்டம் பாபநாசம் மலைக்கு மேலே முண்டந்துறை புலிகள் காப்பக வனப்பகுதியில் பொதிகை மலையின் உச்சியில் 6150 அடி உயரத்தில் தவமிருக்கும் அகத்தியரை வழிபட முண்டந்துறை, பாபநாசம், பாணதீர்த்தம் அருவியின் மேற்பகுதி வழியாக இஞ்சிக்குழி, கண்ணிகட்டி, பூங்குளம் வழியாக பக்தர்கள் சென்று வந்தனர். இந்த வழித்தடத்தில் பக்தர்கள் சென்று வர கடந்த 1998ம் ஆண்டு தமிழக வனத்துறை அனுமதி மறுத்து விட்டது. சில கட்டுப்பாடுகளுடன் மீண்டும் 1999ல் பொதிகை மலை செல்ல அனுமதி வழங்கியது. இந்நிலையில், 2009ல் தமிழக வனத் துறை தமிழகம் வழியாக பொதிகை மலைக்குச் செல்ல நிரந்தரமாக அனுமதி மறுத்ததுடன், கேரளா வழியாக அகத்திய மலைக்கு செல்ல அறிவுறுத்தியது. இதையடுத்து கேரள வனத்துறையினர் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள வனப்பகுதி வழியாக சூழலியல் சுற்றுலாவாக ஜனவரி முதல் ஏப்ரல் வரை அகத்தியர் மலைக்கு பக்தர்கள் சென்று வர அனுமதி வழங்குகின்றனர். இதற்காக கேரள மாநிலம் திருவனந்தபுரம்  வட்டியூர் காவு பிடிபி நகரிலுள்ள வனத்துறை அலுவலகத்தில் அகஸ்தியர் கூடம் செல்வதற்கு அனுமதி வழங்கப்படுகிறது.

திருவனந்தபுரத்தில் இருந்து நெடுமங்காடு - விதுரா - போனகாடு பஸ்சில் பயணிக்கலாம். காலை 6 மணி முதல் இரண்டு மணி நேரத்துக்கு ஒரு பஸ் இயக்கப்படுகிறது. இல்லாவிடில் நெடுமங்காடு சென்று அங்கிருந்தும் போனக்காடு செல்லலாம். பஸ் நிறுத்தத்தில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தூர பயணத்தில் வன இலாகா அலுவலகத்தை அடையலாம். போனக்காட்டிலுள்ள வனத்துறை சோதனை மையத்தில் அனுமதிச் சீட்டு பெற்று பயணம் துவங்கலாம். தனியாக யாரையும் இங்கு மலையேற அனுமதிப்பதில்லை. ஒவ்வொரு குழுவாகவே அனுமதி வழங்கப்படுகிறது. இதற்காக வனத்துறையினர் ஏற்பாடு செய்துள்ள வழிகாட்டியுடன் மூன்று நாள் பொதிகை மலை நடைப்பயணம் தொடங்கும்.
முதல் அரைமணி நேரப்பயணத்தில் முதலில் விநாயகர் கோயிலை அடையலாம். அங்கிருந்து சுமார் ஒரு மணி நேர பயணத்தில் கரமனையாறு என்ற இடத்தை அடையலாம். பகலையே இரவு போல் காட்டும் அடர்ந்த வனப்பகுதி இங்கிருந்துதான் தொடங்குகிறது. இந்த வழித்தடத்தில் சுமார் 6 மணி நேரம் நடந்து சென்றால் அதிருமலை எஸ்டேட் என்ற இடம் நம்மை வரவேற்கும்.

அங்கு கேரள வனத்துறையினர் பக்தர்கள் தங்குவதற்காகக் கட்டியுள்ள அதிருமலை கேம்ப் ஷெட்டில் முதல் நாள் இரவு தங்க வைக்கப்படுவர். மறுநாள் காலை  அதிருமலையின் காவல் தெய்வத்தை வணங்கி விட்டு மீண்டும் நடைபயணம் தொடங்குகிறது. சுமார் 1 மணி நேர நடைப்பயணத்தில் பொதிகை மலையின் அடிவாரத்தை அடையலாம். அங்கு சிறிது நேரம் ஓய்வு, அங்குள்ள தென் பொதிகை மானசரோவரில் சிறு குளியலை முடித்துவிட்டு மீண்டும் நடைபயணம் தொடர்ந்தால் 15 நிமிடத்தில் தமிழக வனப்பகுதி எல்லையான சங்கு முத்திரை என்ற இடம் வரவேற்கும்.  இது கடல்மட்டத்தில் இருந்து சுமார் 4,000 அடி உயரம் கொண்டது. சங்கு போன்ற அமைப்பை உடையதால் இப்பெயர். கேரளத்தினர் இப் பகுதியை பொங்காலைப்பாறை என்று கூறுகின்றனர். (கேரளத்தவர்கள் இங்கு வந்து பொங்கலிட்டு, அகத்தியரை வழிபடுவதால் இந்த இடம் பொங்காலைப்பாறை என்றழைக்கப்படுகிறது.

இச்சங்கு முத்திரை வனப்பகுதியின் மற்றொரு புறம் உள்ள கிடுகிடு பள்ளத்தாக்கில் வற்றாத ஜீவநதியான பொருநை என்று அழைக்கப்படும் தாமிரபரணி உற்பத்தியாகும் ‘பூங்குளம்’ என்ற சுனை தெரியும். நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் என 4 மாவட்ட மக்களின் குடிநீர், விவசாயத்திற்கு ஜீவநாடியாக விளங்கும் அகத்தியர் தந்த தாமிரபரணியின் பிறப்பிடத்தை கண் குளிர தரிசித்து வணங்கி விட்டு பொதிகை மலை பயணத்தை தொடர வேண்டும். செங்குத்தான பகுதியில் மலையில் கட்டப்பட்டுள்ள கயிறு  (ரோப்) பிடித்துக் கொண்டு  கவனத்துடன் ஏறிச் சென்றால் கடல்மட்டத்தில் இருந்து சுமார் 6350 அடி உயரமுடைய பொதிகை மலை சிகரத்தை அடையலாம்.
அங்கு சிறு சோலையில் குறுமுனிவர் அகத்தியரின் ஏகாந்த சிலையை தரிசிக்கும்போது, சிரமப்பட்டு மலை ஏறிவந்த எண்ணங்கள் எல்லாம் மறந்து, இந்த தரிசனத்துக்குத்தானா இப்பிறவி எடுத்தோம் என்ற பரவச நிலை பக்தர்களுக்கு ஏற்படும்.

ஆனைமலைத் தொடரின் ஒரு பகுதியாகவும், மகேந்திரகிரி மலை, முண்டந்துறை வனப்பகுதியின் தலையைப் போலவும் விளங்கும் பொதிகை மலை உச்சியில் திடீர், திடீரென வெயிலும் சில நேரங்களில் உடலை நடுங்கச் செய்யும் பலத்த குளிர்காற்றும், சில நேரம் மழையும், சாரலும் பெய்யும். மனம் நிறைந்த ஆனந்த அனுபவத்துடன் அகத்தியரை வழிபாடு செய்த பின் மீண்டும் பயணம் தொடங்குகிறது. மலை ஏற்றத்தைப் போலவே மிகவும் கவனமாக கீழே இறங்கத் தொடங்கி, மூன்று மணி நேரம் நடந்தால் மீண்டும் அதிருமலை கேம்ப் ஷெட்டை அடையலாம். அங்கு உணவருந்தி விட்டு, அன்று இரவும் அங்கேயே தங்கி விட்டு, மூன்றாம் நாள் காலையில் அதிருமலை காவல் தெய்வத்தையும், பொதிகை சிகரத்தையும் வணங்கிவிட்டு சுமார் 5 மணி நேரம் நடந்தால் போனக்காடு பிக்கெட் ஸ்டேஷனில் பொதிகை மலை பயணம் நிறைவு பெறும்.

இந்த மூன்று நாள் பயணத்தின்போதும் சுத்தமான காற்று, மூலிகை கலந்த நீர், இவையெல்லாம் விட செல்போன் தொந்தரவே இல்லாமல் பார்க்கும் இடங்கள் எல்லாம் பசுமை நிறைந்து மனதைக் கவரும்.  உடலும், உள்ளமும் புத்துணர்வு பெறும். ஒவ்வொரு ஆண்டும் தமிழ் முனியை தரிசிக்க ஜனவரி முதல் ஏப்ரல் வரை அனுமதி வழங்கப்படுகிறது. ஆன்லைனிலும் இதற்கான அனுமதியைபெறலாம்.  இதற்காக உள்ள இணைய தளத்திலோ அல்லது வட்டியூர் காவுவனத்துறை அலுவலகத்திலோ பதிவு செய்து சென்று வரலாம். 10 நபர்கள் அடங்கிய குழுவாகவும் சென்றுவர அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. பதிவு செய்பவர்கள் கண்டிப்பாக போட்டோவுடன் கூடிய அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். இதே அடையாள அட்டையைத்தான் பயணத்தின்போதும் வைத்திருக்க வேண்டும்.  அற்புதங்கள் நிறைந்த, அரிய பொக்கிஷங்களை காணக்கிடைக்கும் ஒரு புதிய பயண அனுபவத்தை பெற விரும்புகிறீர்கள் என்றால் நீங்கள் பொதிகைக்கு கிளம்பி விடலாம்.

உயிரினங்களின் வகைகள்

6 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்டது, பொதிகை மலை. இதில் அகத்திய மலையின் உயரம் 1868 மீட்டர் (சுமார் 6150 அடி). நீரிலும், நிலத்திலும் வாழும் உயிரினங்கள் தமிழ்நாட்டில் 76 உள்ளன. ஆனால் பொதிகை மலையில் 121 உள்ளன. 27 வகை மீன், 9 வகை தவளைகள் பொதிகையில் மட்டுமே காணப்படுகின்றன. 177 வகை ஊர்வனவற்றில் 157 வகைகள் பொதிகை மலையில் மட்டும் உள்ளன. அதிலும் 39 வகை இங்கு மட்டுமே வாழ்கின்றன. கரும்பு, சோளம், கம்பு, ராகி போன்ற உணவு தானியங்கள் 260ல் 60க்கு மூலவித்து இங்குள்ளது. நாமறிந்த மீன் வகை 165. ஆனால் பொதிகையில் வசிப்பதோ 218.

நுண்ணுயிர் முதல் மந்தி வரை

புவிப்பரப்பில் முதலில் தோன்றிய நுண்ணுயிர் முதல் மனிதனுக்கு முந்தைய மந்தி வரை பொதிகையில் உள்ளன. இந்த பிரபஞ்சத்தில் 1300 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த பெருவெடிப்பில் விழுந்த சிறு துண்டாகிய பூமி 500 கோடி வருடங்களுக்கு முன் குளிர்ச்சியடைந்து பூமியானது. அதில் 300 கோடி வருடங்களுக்கு முன்பு உயிர்த்தோற்றம் உண்டானது என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள். பூமி குளிர்ந்து ஒருவித வடிவத்துக்கு வந்து உயிர்கள் உருவான காலத்திலேயே பொதிகை மலையும் தோன்றியிருக்கலாம்.

ரகசிய மூலிகைகள்

பசிக்கவே செய்யாத மூலிகை, நீண்ட ஆயுள் தரும் மூலிகைகள் என பல ரகசிய மூலிகைகள் இங்கு ஏராளமாக வளர்ந்து கிடக்கின்றன. இந்த மூலிகைகளைக் கொண்டுதான் அகஸ்தியர் கடுமையான நோய்களுக்கும் மருந்து கண்டுபிடித்தார் என்று கூறப்படுகிறது.

மூலிகைகளின் மூல ஸ்தானம்


பொதிகை மலைதான், மூலிகைகளின் மூல ஸ்தானம். மூட்டு வலியை போக்கும் பளிங்கு காய், தாமிரத்தை பஸ்பமாக்கும் கல் தாமரை, விஷம் முறிக்கும் கீரிக்கிழங்கு, சர்க்கரை நோயை போக்கும் பொன்கொரண்டி என பல்வேறு மூலிகைகள் பொதிகையில் உள்ளன. 7 வகை பனைகள், 10 ஆண்டுகளில் காய்த்து, காயில் உள்ள விதையால் கர்ப்பப்பை புற்றை அகற்றும் கல்வாழை, பட்டையால் பாம்பின் நஞ்சை இறக்கும் ஞாறவாழை உள்ளிட்ட 7 வகை வாழைகள் இங்கு வளர்கின்றன.

கொழித்துக் கிடக்கும் குலவு, புலவு உலகில் உள்ள பூக்கும் தாவரங்கள் 5640ல் 2654 வகை இங்கு உள்ளன. 600க்கு மேற்பட்ட மூலிகைகள் இங்கு மட்டுமே வளர்கின்றன என்கிறார்கள் ஆய்வாளர்கள். வார்னிஷ் தயாரிக்க உதவும் குலவு, விஷக்கடி வீரியத்தை போக்கும் புலவு, சிறுநீர்ப்பை கல்லடைப்பை நீக்கும் சர்க்கரை வேம்பு மற்றும் செருப்படை போன்ற மூலிகைகள் இங்கு கொழித்துக் கிடப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

பொதிகைமலை...
இந்தப் பெயரைக் கேட்டவுடனே நம் நினைவில் வருவது தாமிரபரணியும், தமிழும், அதைத் தோற்றுவித்த அகத்தியரும் தான்.

சிவாய நம..... திருச்சிற்றம்பலம்..... எம் பெருமான்  ஈசனுடைய திருமண காட்சியை அகஸ்திய மகரிஷிக்கு அளித்த பொதிகை மலை யாத்திரை பற்றி செய்தி   அகஸ்தியர் கூடத்திற்கு  அனுமதி ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருவதால் அகஸ்தியரை தரிசிக்க நினைப்பவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி எம்பெருமான் ஈசன் அகஸ்தியருக்கு காட்சியளித்த பொதிகை மலை யை தரிசித்து கொள்ள வேண்டுகிறேன்.   பொதிகை மலைக்கு யாத்திரை செல்ல www.forest.kerala.gov.in என்ற முகவரியில் அகஸ்தியர் கூடம்  புக் செய்யலாம்.


Share Tweet Send
0 Comments
Loading...