திரிகூடமலை - குற்றாலம்

திரிகூடமலை - குற்றாலம்

திகட்டாத இயற்கை எழில் கொஞ்சும் மலைகளின் வசிகர சிகரம் இந்த திரிகூடமலை.


குற்றாலதின் அழகை வர்ணிக்க திரிகூடராசப்பகவிராயர் மீண்டும் வந்தாலும் வருவார் போல!!!!
இன்றும் இயற்கை அழகு கொஞ்சும் எங்கள் திரிகூடமலை.

குற்றாலநாதர்  திருக்கோயில்

திருமாலின் சங்குவடிவில் அமைந்த சிவன் கோயில்.
திருமாலின் கோயிலாக இருந்து சிவன் கோயிலாக மாற்றப்பட்டிருக்கலாம்.
அதுவே இக்கோயிலின் தல வரலாறாகவும்சொல்கிறார்கள்.


இக்கோயில் பராசக்தியின் சக்திபீடங்களில் ஒன்றாகும்.

கோயிலின் முதல் கல்வெட்டில், ‘திருக்குற்றாலப் பெருமாள்’ என்று திருமாலைக் குறிப்பிடும் தகவல்கள் உள்ளன. அதையடுத்து வைக்கப்பட்ட கல்வெட்டுகளில், குற்றாலதேவன் என்றும் மகாதேவன் என்றும் சிவனாரைக் குறித்தே தெரிவிக்கப்பட்டு உள்ளன.
அதையடுத்து வந்த காலகட்டத்தில் கோயில் சிதிலம் அடைந்த நிலையில் இருக்க... முதலாம் ராஜராஜ சோழ மன்னன், பழுதான ஆலயத்தைப் புனரமைத்து, புதுப்பித்துள்ளார் எனும் கல்வெட்டுகளும் இருக்கின்றன.

சோழ மன்னன் பரகேசரிவர்மன் என்ற முதலாம் பராந்தகன் காலத்தில் (கி.பி.907-953) எழுதப்பட்ட 10 கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன.
“திருக்குற்றாலப் பெருமாள்” என்று குற்றாலத்துறை ஆண்டவனை முதல் கல்வெட்டு கல்வெட்டு மட்டும் கூறுகிறது. பின் எழுந்த கல்வெட்டுக்கள் ‘குற்றாலத்தேவன்’ ‘மாதேவன்’ என்று குறிக்கின்றது. மேலும் இம்மன்னன் காலத்துக் கல்வெட்டுக்களில் சூரிய கிரகண நாள் குறிக்கப்பட்டிருப்பதால் அதன் அடிப்படையில் அம்மன்னனின் ஆட்சிக் காலத்தை வரலாற்று அறிஞர்கள் கணக்கிட்டுள்ளனர்.


நிவந்தங்கள்....

கோயில் விளக்கெரிப்பதற்குத் தானமாகப் பசு, கொடுத்தது போல பொன் ,பணம், ஆடு, எருமை போன்றவற்றை வழங்கிய செய்திகளும் இக்கல்வெட்டுக்களில் காணப்படுகின்றன. இம்மன்னன் காலத்துக் கல்வெட்டில் மட்டும் பெருமாள் என்ற பெயர் காணப்படுவதால் அக்காலத்தில் பெருமாள் சன்னதியும் ,சிவன் சன்னதியும் இருந்தன என்ற செய்தியை அறிய முடிகிறது.

சங்க இலக்கியங்களில் பொதிகைமலைப் பற்றிய செய்திகள் காணப்படுவதாலும் குற்றால நகர் சங்க கால நகரங்களில் ஒன்றாகக் கணக்கிடப்பட்டு ஆய் ஆண்டிரன் ஆட்சிக்குட்பட்டிருந்ததாலும் சோழமன்னன் கோச்செங்கண்ணனால் தல விருட்சம் உருவாக்கப்பட்டிருப்பதாலும் திருக்குற்றாலநாதர் கோயில் வழிபாடு சங்க காலத்தில் இருந்தது எனக்கருத முடிகிறது.


பல்லவர் காலத்தில் கபிலரால் எழுதப்பட்ட சிவ பெருமான் திருவந்தாதி என்னும் நூலில் “கோகரணங் குற்றாலம் கூற்றின் பொருள் முயன்ற குற்றாலம் “கொழுந்தேன் கமழ் சோலைக் குற்றாலம் என்று குற்றால நாதனின் பெருமையும் ,குற்றாலத்தின் சிறப்பும் வெளிப்படுவதால் அக்காலத்தில் குற்றாலமும், குற்றாலநாதர் கோயிலும் பெருமையுடன் விளங்கியிருத்தல் வேண்டும்.

பன்னிரெண்டாம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த பாண்டிய மன்னன் மாறவர்மன் ஸ்ரீ வல்லபனால் வெளிபுற கட்டுமானங்கள் கட்டப்பட்டது. பாண்டிய மன்னர்கள் இந்தக் கோவிலுக்கு மானியங்கள் அளித்துள்ளதாக கல்வெட்டுகள் எடுத்துரைக்கின்றன. ஸ்ரீ வல்லப பாண்டியனின் சிலையும் கோவிலில் உள்ளது.

பல்லவர் காலத்தில் எழுந்த இலக்கியமான தேவார பாடல்களில் மட்டுமே குற்றால நகரம்-இறைவன் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன.

சமயக் குரவர்கள் நால்வராலும் பாடப்பெற்ற சிறப்பு இத்திருக்கோயிலுக்கு உண்டு. அதில் திருஞான சம்பந்தர் திருக்குற்றாலநாதர் கோயிலுக்கு வந்து வழிபாடு செய்து இத்திருக்கோயிலின் தல விருட்சமான குறும்பலாவை பற்றி இரண்டாம் திருமுறையில் எழுபத்தி ஒன்றாம் பதிகமாக தனியாக ஒரு பதிகம் பாடியுள்ளார்.

நாயக்கர் காலத்தில் பட்டினத்தார், அருணகிரிநாதர் போன்ற முனிவர்களும் குற்றாலத்து இறைவனைப் பற்றி பாடியுள்ளனர்.

திரிகூட ராசப்பக் கவிராயர் குற்றாலநாதர்-குழல்வாய்மொழி அம்மையின் பெருமைகள் அடிப்படையில் 14 சிற்றிலக்கியங்கள் இயற்றியுள்ளார்.

கலை மற்றும் கட்டிடக் கலை:

கி.பி.7-ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலத்தில் தோற்றுவிக்கப்பட்ட இக்கோயில் முதன்மை நுழைவாயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. நுழைவு வாயிலின் முன்னர் இரண்டு குறிஞ்சி கோபுரமும் நுழைவு வாயிலின் முன் மண்டபத்தின் கைப்பிடியாக இரண்டு கல் யானைகளும் 100 தூண்களைக் கொண்ட திரிகூட மண்டபமும் இரண்டாவதாக வரவேற்பு மண்டபமும் அமைந்துள்ளது. இந்த மண்டபம் மரத்தூண்களால் அழகிய வேலைப்பாடுடன் அமைக்கப்பட்டுள்ளது. இம்மண்டபத்தின் தென்புறம் விநாயகரும். மற்றும் வடபுறம் ஆறுமுக நயினார் சந்நிதியும் அமைந்துள்ளன. நுழைவு வாயிலை கடந்ததும் நமஸ்கார மண்டபம் ,பலி பீடம், கொடி மரம் மற்றும் நந்தியும் அதன் வடபுறம் நாற்கால் மண்டபமும் அமைந்துள்ளது.

கொடி மர மண்டபத்தை அடுத்து சிவன் கோயில் திருச்சுற்று நுழைவு வாயில் மண்டபத்தில் முன் பகுதியில் நின்ற நிலை விநாயகர் முருகன் மற்றும் துவாரபாலகர்கள் அமைந்துள்ளனர்

மாணிக்கவாசகர்:

"சிவானந்த முதிர்வுஉற்றாரை யான்வேண்டேன் ஊர்வேண்டேன் பேர்வேண்டேன்கற்றாரை யான்வேண்டேன் கற்பனவு மினியமையுங்குற்றாலத் தர்ந்துறையுங் கூத்தாஉன் குரைகழற்கேகற்றாவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே."

திருஞானசம்பந்தர்:

"வம்பார் குன்றம் நீடுயர் சாரல் வளர்வேங்கைக்கொம்பார் சோலைக் கோலவண் டியாழ்செய் குற்றாலம்அம்பானெய்யோ டாடலமர்ந்தான் அலர்கொன்றைநம்பான் மேய நன்னகர் போலும் நமரங்காள்."


குற்றால குறவஞ்சி:

குற்றாலநாதரின் திருவுலா எழுச்சியைக் குறித்து முன்னரே கட்டியங்காரன் கூறுகிறான். திருவுலா தொடங்குகிறது மூவர் தமிழும் நான்மறைகள் முழங்க குற்றலாநாதர் வீதியில் உலா வருகிறார். குற்றாலநாதாரின் திருவுலாவைக் காண பெண்கள் எழுந்து வருகின்றனர். அப்பொழுது பந்து ஆடிக்கொண்டிருந்த வசந்தவல்லி (கதைத்தலைவி) என்பவளும் திருவுலாக்காண வருகிறாள். தோழியின் வாயிலாக இறைவனைப் பற்றி அறிந்த வசந்தவல்லி இறைவன் மீது காதல்கொண்டு தோழியைத் தூதனுப்புகிறாள். இந்நிலையில் குறிசொல்லும் குறத்தி தெருவழியே வருகிறாள். தோழி அவளைக் குறிசொல்ல அழைத்தவுடன் குறப்பெண் தன்நாட்டு மலைவளமும் தொழில்வளமும் சிறப்பாக எடுத்துக்கூறுகிறாள். பின் வசந்தவல்லி கையைப் பார்த்து அவள் குற்றாலநாதர் மீது காதல் கொண்டுள்ள செய்தியையும், (தலைவனின்) குற்றாலநாதரின் புகழ்பற்றியும் எடுத்துச்சொல்லி வசந்தவல்லியின் எண்ணம் நிறைவேறும் என்று குறி சொல்லி பரிசு பெறுகிறாள் குறத்தி சிங்கி. அவள் கணவன் சிங்கன் அவளைக் காணத் தேடிவருகிறான். குறத்தியைக் கண்ட சிங்கனிடம் குறத்தி நடந்ததைச் சொல்ல இருவரும் குற்றாலநாதரைப் பாடி இன்பம் அடைகின்றனர்.

செங்கையில் வண்டு கலின்கலின் என்று
செயம் செயம் என்றாட இடை
சங்கதம் என்று சிலம்பு புலம்பொடு
தண்டை கலந்தாடஇரு
கொங்கை கொடும்பகைவென்றனம் என்று
குழைந்து குழைந்தாடமலர்ப்
பைங்கொடி நங்கை வசந்த
சவுந்தார் பந்து பயின்றனளே......


Share Tweet Send
0 Comments
Loading...