தினசரி நடப்பு நிகழ்வுகள் 27.2.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 27.2.2021 (Daily Current Affairs)

இந்தியா

அயோத்தியில் பிரம்மாண்ட சர்வதேச விமான நிலையம் !!

🔷அயோத்தியில் சர்வதேச விமான நிலையம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்து, அதற்கு 250 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கியுள்ளது.

🔷உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக மத்திய அரசு ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை உருவாக்கியது.

🔷அந்த அறக்கட்டளை மூலம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜையில் பங்கேற்று பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

🔷இதைத்தொடர்ந்து ராமர் கோயில் கட்டுவதற்காக பொது மக்களிடம் நன்கொடைகளை அறக்கட்டளை பெற்று வருகிறது.

🔷இந்தநிலையில் அயோத்தியில் பிரமாண்ட சர்வதேச விமான நிலையம் அமைய உள்ளது.

🔷இதற்கான செலவுக்காக முதல்கட்டமாக மாநில அரசு 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. மத்திய அரசும் 250 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.

இந்திய பொம்மை கண்காட்சி !!

🔷இந்திய பொம்மை கண்காட்சி 2021-ஐ வரும் பிப்ரவரி 27-ஆம் தேதி காலை 11 மணிக்கு காணொளிக் காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்க இருக்கிறார்.

🔷பொம்மைகள், குழந்தையின் மன வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்காற்றுவதுடன், அவர்களின் உளவியல் இயக்கம் மற்றும் அறிவாற்றல் திறமைகளை மேம்படுத்தவும் உதவுகிறது.

🔷இந்த கண்காட்சி பிப்ரவரி 27 முதல் மார்ச் 2-ஆம் தேதி வரை நடைபெறும். நிலையான இணைப்புகளை உருவாக்கவும், பொம்மை தொழிலில் ஒட்டுமொத்த வளர்ச்சி குறித்த விவாதங்களை ஊக்குவிக்கவும் வாங்குவோர், விற்பனையாளர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், வடிவமைப்பாளர்கள் உள்ளிட்ட அனைத்து பங்குதாரர்களையும் காணொளி வாயிலாக இணைப்பதே இந்தக் கண்காட்சியின் நோக்கமாகும்.

தமிழ்நாடு

மாநகராட்சியுடன் இணைந்து ஐசிஐசிஐ வங்கி வழங்கும் நம்ம சென்னை ஸ்மார்ட் கார்டு திட்டம் !!

🔷சென்னையில் மாநகராட்சியுடன் இணைந்து ஐசிஐசிஐ வங்கி வழங்கும் `நம்ம சென்னை ஸ்மார்ட் கார்டு’ திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

🔷இந்த `நம்ம சென்னை ஸ்மார்ட் கார்டு’ அட்டையை மாநகராட்சியின் சேவைகள், வாகன நிறுத்தக் கட்டணம், நாடு முழுவதும் ரூபே அட்டை வழியே பணப் பரிவர்த்தனை செய்யும் உணவகங்கள், கடைகள், சில்லறை வணிகம் சார்ந்த இடங்கள், ஆன்லைன் பணப் பரிவர்த்தனை மற்றும் ஆன்லைன் விற்பனையகங்களில் பயன்படுத்தலாம்.

கோவையில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார் !!

🔷நெய்வேலியில்  1000 மெகாவாட் திறனுள்ள புதிய அனல் மின் திட்டம் மற்றும்  என்எல்சிஐஎல் நிறுவனத்தின் 709 மெகா வாட் சூரிய மின் சக்தி திட்டம் ஆகியவற்றை நாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி அர்ப்பணித்தார்.

🔷வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில்  5 மெகா வாட் திறனில்  மின் தொகுப்பு அமைப்பது மற்றும் கீழ் பவானி கால்வாய் திட்டத்தை  விரிவுபடுத்துதல், புதுப்பித்தல் மற்றும் நவீனமயமாக்கல் திட்டத்துக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.

🔷வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் 8 வழி கோரம்பள்ளம் பாலம் மற்றும் ரயில்வே பாலம் மற்றும் பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட குடியிருப்புகளையும்  பிரதமர் திறந்து வைத்தார்.

🔷இந்நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர், முதல்வர் மற்றும் துணை முதல்வர் மற்றும் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஆகியோர் பங்கேற்றனர்.

அறிவியல் தொழில்நுட்பம்

சூரிய சுழற்சிகளை கணிக்கும் முறைகளை விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு !!

🔷கடந்த நூற்றாண்டில் சூரியனின் சுழற்சி எவ்வாறு நிகழ்ந்தது என்பதை டிஜிட்டல் செய்யப்பட்ட பழங்கால படச்சுருள்கள், புகைப்படங்கள் வாயிலாக கண்டறியப்பட்ட தரவுகளின் மூலம் விஞ்ஞானிகள் மதிப்பிட்டுள்ளனர்.

🔷எதிர்காலத்தில் சூரியனின் சுழற்சிகளையும், அதன் மாறுபாடுகளையும் கணிப்பது உள்ளிட்ட பணிகளில் இந்த மதிப்பீடு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

🔷மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சி நிறுவனமான ஆரியபட்டா ஆராய்ச்சி கணிப்பு அறிவியல் நிறுவனத்தைச் சேர்ந்த முனைவர் பட்டப்படிப்பு பயிலும் மாணவரான திரு பிபூதி குமார் ஜா தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் குழு, ஜெர்மனியின் கோடிங்கேனில் உள்ள சூரிய மண்டலம் பற்றிய மேக்ஸ் பிளாங்க் கழகம், அமெரிக்காவின் பௌல்டர் நகரில் உள்ள தென்மேற்கு ஆராய்ச்சிக் கழகம் ஆகியவற்றின் பணியாளர்களுடன் இணைந்து டிஜிட்டல் செய்யப்பட்ட நூற்றாண்டு பழமை வாய்ந்த படச்சுருள்கள், புகைப்படங்களின் வாயிலாக சூரியனின் சுழற்சியை ஆய்வு செய்துள்ளனர்.

🔷அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் மற்றொரு தன்னாட்சி நிறுவனமான இந்திய வானியற்பியல் நிறுவனத்தின், கொடைக்கானல் சூரிய வான் ஆய்வகத்தில் இந்த பழங்கால படச்சுருள்களும், புகைப்படங்களும் எடுக்கப்பட்டன.

அல்சைமர் நோயைக் குணப்படுத்தும் தன்மையுடைய புதிய மூலக்கூறை விஞ்ஞானிகள் தயாரிப்பு !!

🔷அல்சைமர் நோயில் நரம்பணுக்களை செயலிழக்கச் செய்யும் வகையிலான சிறிய மூலக்கூறு ஒன்றை விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர்.  உலகளவில் அதிகரித்து வரும் டிமென்ஷியா நோயின் தடுப்பு மற்றும்  சிகிச்சையில், இந்த மூலக்கூறு சிறந்த மருந்தாக செயல்படும்.

🔷மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சி நிறுவனமான ஜவகர்லால் நேரு மேம்படுத்தப்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர் திரு டி கோவிந்தராஜு தலைமையிலான விஞ்ஞானிகள் குழு, டிஜிஆர்63 என்ற இந்த மூலக்கூறை வடிவமைத்து உருவாக்கி உள்ளனர்.

🔷அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட எலிகளின் சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்ட இந்த மூலக்கூறு சிறந்த பலனை அளித்தது.

🔷அல்சைமர் நோய்க்குத் தற்போது தற்காலிகமான நிவாரணம் மட்டுமே வழங்கப்படுவதுடன், இந்த நோயை நேரடியாக குணப்படுத்துவதற்கான மருந்துகளுக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. எனவே அல்சைமர் நோயை தடுப்பதற்கோ அல்லது முழுவதும் குணப்படுத்துவதற்கோ மருந்துகளின் தயாரிப்பு மிகவும் அவசியமாக உள்ளது.

டி.என்.ஏ மாற்றங்களை அளவிட விஞ்ஞானிகள் புதிய தொழில்நுட்பம் உருவாக்கம் !!

🔷புற்றுநோய், ஞாபகமறதி நோய் (அல்சைமர்)  மற்றும் நடுக்க வாதம் (பார்கின்சன்) நோய்கள் போன்ற பல நோய்களை முன்கூட்டியே கண்டறிவதில் டி.என்.ஏ மாற்றங்களை அளவிட விஞ்ஞானிகள் ஒரு புதிய நுட்பத்தை உருவாக்கியுள்ளனர்.

🔷டி.என்.ஏ.வில் ஏற்படும் மாற்றம், அவற்றின் வெளிப்பாடு மற்றும் செயல்பாடுகளை பாதிக்கிறது. டி.என்.ஏ,  மரபணு குறியீட்டின் மூலமாகவும் அதன் கட்டமைப்பில் மாற்றங்கள் மூலமாகவும் உயிரணுக்களின் வாழ்வைக் கட்டுப்படுத்துகிறது.

🔷டி.என்.ஏ கட்டமைப்புகளின் இத்தகைய மாற்றங்களை அளவிடுவதற்கும், அரிய நோய்களைக் கண்டறியவும் அதனுடன் தொடர்புடைய மூலக்கூறு வழிமுறைகளைக் புரிந்து கொள்வதற்கு மிக உயர்ந்த தெளிவுத்திறன் கொண்ட நுட்பங்கள் தேவைப்படுகிறது.

🔷விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டுள்ள  மிகச்சிறிய நுண்துளை அடிப்படையிலான  தொழில்நுட்பம் மூலம், அத்தகைய மாற்றங்களை அல்லது  டி.என்.ஏ. க்களின் பண்புகளை, ஒற்றை-மூலக்கூறு தெளிவுத்திறனுடன் நேரடியாக அளவிட முடியும்.

🔷இந்த தொழில்நுட்பத்தை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் தன்னாட்சி மையமான ராமன் ஆராய்ச்சி மைய பேராசிரியர் கவுதம் சோனி தலைமையிலான விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

🔷ஆராய்ச்சியாளர் சுமந்த் குமார், கவுசிக் மற்றும் டாக்டர் சோனி ஆகியோர் மேற்கொண்ட இந்த ஆய்வு ‘நேனோஸ்கேல்’ என்ற இதழில் வெளியாகியுள்ளது.


Share Tweet Send
0 Comments
Loading...