நவகைலாயம்-சேர்ந்தபூமங்கலம் கைலாசநாதர் கோயில்

நவகைலாயம்-சேர்ந்தபூமங்கலம் கைலாசநாதர் கோயில்

நவகயிலாயத்தில் ஒன்பதாவதாக விளங்கும் இத்தலத்தின் இறைவன் சுக்கிர அம்சமாக விளங்குகிறார். அகத்தியர் தனது சீடர் உரோமச முனிவருக்காகத் தாமிரபரணி ஆற்றில் விட்ட ஒன்பது மலர்களில் ஒன்பதாவது மலர் சேர்ந்த இடம். இதனால் இவ்வூருக்குச் சேர்ந்த பூமங்கலம் என்ற பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது தாமிரபரணி ஆறு கடலோடு சங்கமிக்கும் இடம் என்பதால் சேர்ந்தமங்கலம் என்ற பெயர் வந்ததாகவும் ஒரு சிலர் கூறுகிறார்கள். இரண்டும் சேர்ந்து “சேர்ந்தபூமங்கலம்” ஆயிற்று.

மூலவர் :   கைலாசநாதர்

அம்பிகை : சௌந்தர்யநாயகி

தீர்த்தம்: தாமிரபுஷ்கரணி

தலவிருட்சம்:      வில்வம்

ஆகமம்: காமிக ஆகமம்

கோயிலுக்கு கோபுரம் கிடையாது. கொடிமரம் உள்ளது. இக்கோயில் கல்வெட்டில் குடநாட்டு ஆத்தூர் சேர்ந்தமங்கலம் என்றும் அவனிய சதுர்வேதிமங்கலம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது இக்கோயில் முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியனால் கட்டப்பட்டிருக்கலாம் என்கிறார்கள் சிலர். சேந்தன் என்று குறிப்பிடப்பட்ட பாண்டியன் குலசேகரன் காலத்தில் கட்டப்பட்டது என்கிறார்கள் சிலர். நவகைலாயங்களுக்கும் சென்று வழிபட்டால் நவக்கிரக தலங்களுக்கும் சென்று வழிபட்ட பலன் உண்டு.

புராணச் சிறப்பு:

அகத்தியர் உரோமச முனிவரை அழைத்து தாமிரபரணி சங்கமிக்கும் இடத்தில் நீராடினால் வேண்டியது கிடைக்கும் என்றும் உன்னுடன் ஒன்பது மலர்களைத் தண்ணீரில் அனுப்புகிறேன் இம்மலர்கள் ஒவ்வொன்றும் எங்கு நிற்கிறதோ அவ்விடத்தில் சிவலிஙத்தை வைத்து வழிபடு என கூறியதில் கடைசியாக ஒன்பதாவது மலர் இத்தலத்தில் நிற்க இங்கு உரோமச முனிவர் சிவலிங்க வழிபாடு செய்த தலமாகும். நிறைவாக பூ சேர்ந்த மங்கலம் ஆனதால் சேர்ந்தபூமங்கலம் என இத்தலம் அழைக்கப்படுகிறது.வரலாற்றுச் சிறப்பு:

தாமிரபரணி ஆற்றங்கரையில் நவக்கிரகங்களுள் சுக்கிரன் தலமாக அமைந்துள்ள இத்தலத்தை குலோத்துங்க வர்ம பாண்டிய மன்னன் கட்டியதாக செவிவழிச் செய்தி கூறுகிறது. இவ்வூர் முற்காலத்தில் குடநாட்டு ஆத்தூர் சேர்ந்த மங்கலம் என்றும் அழைக்கப்பட்டு வந்ததாக கோயில் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. தனிச் சிறப்பு: நவ கைலாயத்தில் ஒன்பதாவது இடத்தைப் பெறும் இடம் சேர்ந்தபூமங்கலம். சுக்கிரனின் ஆட்சிப் பெற்ற கோயிலாகும். இந்த ஊரின் அருகில் தான் தாமிரபரணி ஆறு கடலில் சங்கமமாகிறது. எத்தனையோ இயற்கைச் சீற்றத்தால் இந்த பகுதி பாதிக்கப்பட்டிருந்தாலும் இத்திருக்கோயில் மட்டுமே கம்பீரமாக நிற்கிறது.

சுக்கிரதோஷம் விலகும்:

உரோமச முனிவருக்கு முக்தி கிடைத்த தலம் என்பதால், முன்னோர்களுக்காக இத்தலத்தில் மோட்ச தீபம் ஏற்றி வைத்து, நவலிங்கங்களை வலம் வந்து வழிபடுவது சிறப்பானதாக சொல்லப்படுகிறது.

இத்தல இறைவனை வழிபடுவது கஞ்சனூர் என்ற ஊரில் எழுந்தருளியுள்ள சிவபெருமானை வணங்குவதற்கு சமமாகும். சுக்கிரன் தலமாதலால் இங்கு வழிபடுவோருக்கு சுக்கிர தோஷம் நீங்கி தீமைகள் விலகும். திருமணம் நல்லபடி அமையும், இல்லறம் சுகம் பெறும், உடல் ஆரோஅகியம், மனநிம்மதி பெற்று மரண பயம் நீங்கி நன்மக்கட் பேறு பெற்று என்றும் இன்பமாக வாழலாம். தாமிரபரணி நதி கடலோடு சங்கமிக்கும் இப்பகுதியில் அகத்தியர் வந்து நீராடி சிவனை வழிபட்டுச் சென்றுள்ளனர்.

நடைதிறப்பு

காலை 7.30 மணி முதல் 10.00 மணிவரை
மாலை 5.00 மணி முதல் 7.30 மணிவரை

திருவிழாக்கள்

  • மாதாந்திர பிரதோஷம்
  • மகாசிவராத்திரி (பிப்ரவரி – மார்ச்)
  • ஐப்பசி அன்னாபிஷேகம் (அக்டோபர் – நவம்பர்)

அமைவிடம்

தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலையில் 20 கிலோமீட்டர் தொலைவில் ஆத்தூர் என்ற ஊரில் இருந்து கிழக்கே 2 கிலோ மீட்டர் தொலைவில் இத்திருக்கோயில் உள்ளது.


Share Tweet Send
0 Comments
Loading...