உலக சிட்டுக்குருவிகள் தினம் World Sparrow Day

உலக சிட்டுக்குருவிகள் தினம் World Sparrow Day

நம்முடைய நாட்டைப் பொறுத்தவரை, காகத்திற்கு அடுத்தபடியாக அனைவராலும் அறியப்பட்ட பறவையாக இருப்பது, சிட்டுக்குருவி தான். இதனை ‘வீட்டுக்குருவி’, ‘அடைக்கலக் குருவி’, ‘ஊர்க்குருவி’ போன்ற பெயர்களாலும் அழைப்பார்கள்.

இவை உருவத்தில் சிறியதாகவும், இளம் சாம்பல் கலந்த பழுப்பு நிறத்திலும் காணப்படும். இந்தப் பறவை 8 செ.மீ. முதல் 24 செ.மீ. வரை வளரக்கூடியவை. கூம்பு வடிவ அலகு கொண்ட இந்தப் பறவை சுமார் 27 கிராம் முதல் 40 கிராம் வரை எடை கொண்டதாக இருக்கும்.ஆண் பறவைக்கும், பெண் பறவைக்கும் சில வேறுபாடுகள் உண்டு. இந்த வகை பறவைகள் மரத்திலும், வீடுகளின் மறைவான இடங்களிலும் வைக்கோல் போன்ற மெல்லிய பொருட்களை வைத்து கூடு கட்டி வாழும். இவை தானியங்கள், புழு, பூச்சிகளை உணவாகக் கொள்ளும். முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் தன்மை கொண்ட இந்த வகைப் பறவை, 13 ஆண்டுகள் வரை வாழும் தன்மை பெற்றவை.
சுற்றுச்சூழல் மாற்றங் களின் காரணமாக, இந்தப் பறவைகள் அழிந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக செல்போன் டவர்களில் இருந்து வெளிப்படும் மின்காந்த அலைகளின் தாக்கம் காரணமாக, இந்த குருவிகளின் இனப்பெருக்க மண்டலம் பாதிக்கப்பட்டு, இவற்றின் இனப்பெருக்கம் குறைந்து வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில் இவற்றை அதிக அளவில் காணமுடியாத சூழல் உருவாகிவிட்டது. மனிதனின் பழக்க வழக்கங்களில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாறுதல்கள், நவீன தகவல் தொழில் நுட்பப் புரட்சி, இயற்கைக்கு மாறாக எடுக்கப்படும் சுற்றுச்சூழல் நடவடிக்கை போன்ற காரணங்களால், சிட்டுக்குருவி எனும் சிற்றினம் அழிவுப்பாதைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வெளிக்காற்று வீட்டிற்குள் வர முடியாதபடி, வீடு முழுவதும் குளிரூட்டப்பட்ட அறைகளை உருவாக்குவதால், அதில் குருவிகள் கூடுகட்டி குடியிருக்க இயலாமல் போனது.எரிவாயுக்களில் இருந்து வெளியேறும், மெத்தைல் நைட் ரேட் எனும் வேதியியல் கழிவுப் புகையால், காற்று மாசடைந்து பூச்சி இனங்கள் அழிகின்றன. மேலும் வீட்டு தோட்டங்கள், வயல்களில் பயிர் களுக்கு பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து பூச்சிகள் கொல்லப்படுகின்றன. இதனால் ஏற்படும் உணவுப் பற்றாக்குறையால், நகருக்குள் வாழும் குருவிகள் பட்டினி கிடந்தே அழிகின்றன. பலசரக்கு கடைகள் மூடப்பட்டு, பல்பொருள் அங்காடிகள் பெருகி வருகின்றன. இங்கு நெகிழிப் பைகளில் தானியங்கள் அடைத்து விற்கப்படுவதால், வீதிகளில் தானியங்கள் சிதற வாய்ப்பில்லை.
சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை அண்மைக் காலங்களில் குறைந்து வருவதன் காரணமாகவும், நாள்தோறும் தமது வாழ்வுக்காக அவை எதிர்நோக்கும் பிரச்சினைகளை மக்களுக்கு எடுத்துக்கூறி, அதன் வாயிலாக விழிப்புணர்வை ஏற்படுத்தவும் கடந்த 2010-ம் ஆண்டு முதல், மார்ச் 20-ந் தேதியை ‘உலக சிட்டுக் குருவிகள் தினம்’ என்ற பெயரில் கடைப் பிடித்து வருகிறோம். அரிய வகையாக மாறி வரும் சிட்டுக்குருவிகளைக் காக்க, தினமும் வீட்டின் முன்பாகவோ, மாடியிலோ, சிறிதளவு தண்ணீரும், உணவும் வைத்தாலே இவற்றின் வாழ்க்கையில் புத்துயிர் பிறக்கும்.


Share Tweet Send
0 Comments
Loading...