நெற்களஞ்சியம்

நெற்களஞ்சியம்

உலகம் முழுவதும் அறியப்பட்ட சோழர்களின் தலைநகராம் தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு விளங்கும் தஞ்சாவூர் மாவட்டம் ஆன்மீக சுற்றுலாவிலும் வரலாற்று சுற்றுலாவிலும் தமிழகத்திலேயே முதன்மை மாவட்டமாக விளங்குகிறது. தஞ்சாவூர் தமிழகத்தின் நெற்களஞ்சியம் ஆகும். தமிழகத்தில் நெல் உற்பத்தியில் தஞ்சாவூர் முதலிடம் வகிக்கிறது.தஞ்சாவூர் எட்டாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட ஒரு அழகிய நகரம் தஞ்சை. இந்த  பகுதியை ஆண்ட தனஞ்சய முத்தரையரின் பெயரையே கொண்டு இந்நகரம் "தனஞ்சய ஊர்"என்று அழைக்கப்பட்டு பின்பு அதுவே மருவி தஞ்சாவூர் என்று நிலைப்பெற்றதாக கூறப்படுகிறது. கன்னியாகுமரி, ராமேஸ்வரம் போலவே தஞ்சாவூரும் வெளிநாட்டு பயணிகள் மத்தியில் மிகவும் ஈர்க்கும் இடமாக விளங்குகிறது.

பெயர் வரக் காரணமாக சொல்லப்படும் புராணக்கதை. முற்காலத்தில் தஞ்சன் என்னும் அசுரன் இவ்விடத்தில் மக்களை துன்புறுத்திவந்தான். மக்களைக் காக்க அவனை சிவபெருமான் வதம் செய்த இடமாதலால் தஞ்சாவூர் என்று பெயரும், சிவபெருமான் இந்த ஊரில் தஞ்சபுரீஸ்வரர் என்ற திருப்பெயருடன் கோயில் கொண்டுள்ளார். இத்திருக்கோயில் தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில், பள்ளியக்ரஹாரத்திற்கு அருகில் இருக்கிறது. வைணவ சம்பிரதாயத்தில் இதே புராணம் சிறிது மாற்றப்பட்டு மஹாவிஷ்ணுவே தஞ்சனை அழித்தார் என்றும், அதனால் தஞ்சை மாமணி நீலமேகப்பெருமாளாய் கோயில் கொண்டு இருக்கிறார் என்று நம்பப்படுகிறது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம், மேற்கூறிய நீலமேகப்பெருமாள் கோயில் தஞ்சபுரீஸ்வரரின் கோயிலுக்கு நேரெதிரில் உள்ளது. காவிரி ஆற்றுப்படுகையில் குளிர்ச்சியான வளம் கொழிக்கும் பகுதி என்பதால் இந்த இடத்துக்கு ‘தண் – செய்யூர்’ என்ற பெயர் வழங்கி அது தஞ்சாவூர் ஆக திரிந்திருக்கலாம் என்பது மற்றொரு ஊகமாக முன் வைக்கப்படுகிறது.


பிரகதீஸ்வரர் ஆலயம்

தஞ்சையில் அமைந்துள்ள பெரிய கோயில் என அனைவராலும் அழைக்கப்படும் தஞ்சையில் அமைந்துள்ள பிரகதீஸ்வரர் ஆலயம் உலக பிரசித்தி பெற்றது.
18ம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து நாட்டின் முக்கியமான கலாச்சார மையமாக விளங்கும் தஞ்சாவூர் மாவட்டம் தென்னகத்தில் அதிகம் யாத்ரீகர்களும் பயணிகளும் விஜயம் செய்யும் மாவட்டமாக திகழ்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பிரகதீஸ்வரர் ஆலயம் வரலாற்று சிறப்புமிக்க உலக பிரசித்தி பெற்ற கோயிலாக உள்ளது.

சுந்தரசோழ மன்னன் , வானவமகாதேவியின் மகனான ராஜராஜ சோழனால் (கி.பி. 985-1012) உன்னதமான பிரகதீஸ்வரர் கோயில் கட்டப்பட்டது. கட்டட கலையின் சிறந்த எடுத்துக்காட்டாக இந்த கோயில் அமைந்துள்ளது. ராஜராஜசோழனின் 19வது வயதில் கோயில் பணிகள் துவங்கி, அவரது 25வது வயது முடியும் தருவாயில் கோயில் கட்டி முடிக்கப்பட்டது. கோயிலின் பிரதான கடவுளாக சிவபெருமான் வீற்றிருக்கிறார். இங்குள்ள சிவலிங்கம் மிகப்பெரியதாகும். இந்த கோயில் பெரிய கோயில் என்றே அழைக்கப்படுகிறது. கோயிலை சுற்றிலும் ஒரு பக்கம் அகழியும் , மறுபக்கம் அணைக்கட்டு ஆறும் உள்ளது. மற்ற கோயில்களை போலல்லாது இக்கோயிலின் கோபுரம் சிறப்பு வாய்ந்தது. கர்ப்பகிரகத்தின் மேலே உயரமான கோபுரம் உள்ளது. இதன் உயரம் 216 அடியாகும்.

கோயிலின் ஸ்தூபம் வெண்கலத்தால் ஆனது. சோழர்கள் மற்றும் நாயக்கர்களின் பெருமையை பறைசாற்றும் வகையில் கோயில் சுவற்றில் ஓவியங்கள் உள்ளன. இவை அஜந்தா குகை ஓவியங்களுக்கு இணையானதாகும்.
கோயிலில் உள்ள சிற்பங்களும், வேலைப்பாடுகளும் ஆயிரம் ஆண்டுகளை கடந்தவையாகும். வரலாற்று சிறப்புமிக்க இந்த கோயில் இன்றளவும் எப்படி கட்டப்பட்டது என்ற தெளிவான பார்வை கிடைக்கவில்லை. தற்போதுள்ள தொழில்நுட்பத்தை வைத்து கட்டினால் கூட பல ஆண்டுகள் ஆகும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இதற்கு முன்பு ராஜராஜேஸ்வரர் கோயில் என்றே அழைக்கப்பட்டது. தற்போது அழைக்கப்படும் இந்த பிரகதீஸ்வரர் எனப்படும் பெயரானது மராட்டியர்களால் வழங்கப்பட்டுள்ளது. இந்த கோவிலின் சிறப்பம்சம் என்னவென்றால் மதிய வேளைகளில் இந்த கோவிலில் உள்ள கோபுரத்தின் நிழல் ஆனது கீழே விழுவதில்லை என்பதாகும். அதே போல் கோபுரத்தின் மேல் உள்ள வைக்கப்பட்டுள்ள கலச வடிவிலான மேற்கூரை கல் சுமார் 80 டன் எடை கொண்ட ஒற்றை கல்லால் செய்யப்பட்டது என்பது பெரிய அதிசயம். அதை விட அதிசயமாக அதை எப்படி அவ்வளவு மேலே எடுத்துச் சென்றனர் என வியக்க வைப்பதாக உள்ளது.

கர்ப்பகிரகத்தில் உள்ள சிவலிங்கமானது அதிகப்படியான மின்காந்த ஆற்றலை வெளியிடுவதாகவும் அந்த ஆற்றலானது, இந்த ஒற்றை கல்லினாலான மேற்கூரைகள் எதிரொளிக்கப்பட்டு, ஒருமுகப்படுத்த படுவதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நேர்மறையான எண்ணங்களால் ஆன இந்த ஆற்றலானது, இங்கு வரும் பக்தர்களுக்கு அமைதியையும், சாந்தியையும், கொடுப்பதுடன், அவர்களையும் மனதளவிலும், உடலளவிலும் ஏற்படுத்துவதாக நம்பப்படுகிறது. இக்கோயில் யுனெஸ்கோ அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட பாரம்பரியச்சின்னம் எனும் பெருமையை பெற்றுள்ளது.

இங்கு சிவபெருமானுக்கு எதிரில் உள்ள பெரிய நந்தி சிலை ஒரே கல்லால் செதுக்கப்பட்டது. அதோடு ராஜராஜ சோழன் வைத்த நந்தி சிலை மாற்றப்பட்டு, மராட்டியர்களால் வைக்கப்பட்ட நந்தி சிலை தான் இப்போது உள்ளது. ராஜ ராஜன் வைத்த நந்தி சிலை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே சென்றதால், அந்த நந்தி சிலையை அகற்றிவிட்டு புதிய நந்தி சிலை வைத்துள்ளனர். இன்றளவும் அந்த பழைய நந்தி சிலை கோயில் பிரகாரத்தில் வைக்கப்பட்டுள்ளது. நந்தி மண்டபம் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தியாவின் சிற்பக் கலைக்கு தஞ்சைப் பெரிய கோயில்தான் முகவரி. 1006ம் ஆண்டு கட்டத் தொடங்கி 1010ம் ஆண்டு முடிக்கப்பட்ட இந்த கோயிலுக்கு 2010வது ஆண்டோடு 1000 வயது பூர்த்தியாகியது.

சுரங்கப்பாதை

இந்தப் பெரிய கோவிலானது பல சுரங்கப் பாதைகளை கொண்டுள்ளதாக ஒரு கருத்து நிலவுகிறது. பல்வேறு இடங்களை இணைக்கும் இந்த பாதைகளில் பெரும்பாலானவை மூடப்பட்டு விட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்த பாதையில அந்த காலத்தில் வாழ்ந்த முனிவர்கள், ராஜாக்கள், ராணிகள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு ரகசியமாக செல்ல பயன்படுத்தப்பட்டது. முக்கியமாக தீபாவளி மகா சிவராத்திரி, மகர சங்கராந்தி போன்ற பண்டிகை காலங்களில் இந்த பாதைகள்கள் பெருமளவு பயன்படுத்தப்பட்டுள்ளது. மற்றும் சிவகங்கைப் பூங்கா
தஞ்சை பெரிய கோயிலின் வடபுறமாக உள்ளது. அழகிய செடிகள், மலர்கள், பறவைகள் விலங்குகள் இன்றும் இங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

விஜயநகர கோட்டை

தஞ்சை பெரிய கோயிலிலிருந்து 2 கி.மீ தூரத்தில் வடக்கே இந்த விஜயநகர கோட்டை அமைந்துள்ளது. 16ம் நூற்றாண்டின் மத்தியில் நாயக்க மற்றும் மராட்டா மன்னர்களின் பங்களிப்பில் இக்கோட்டையின் வெவ்வேறு அங்கங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. தஞ்சை அரண்மனை, சங்கீத மஹால், தஞ்சாவூர் கலைக்கூடம், சிவகங்கைபூங்கா மற்றும் சரஸ்வதி மஹால் நூலகம் ஆகியவை இந்த கோட்டை வளாகத்தினுள் இடம் பெற்றுள்ளன.

தஞ்சாவூர் அரண்மனை

நாயக்கர்களால் பாதியும் மீதி மராட்டியர்களாலும் கட்டப்பட்டது. கிழக்குப் பிரதான வீதியில் உள்ள இந்த அரண்மனை வரிசைத் தொடராகக் கட்டங்களாக இருக்கும். இதன் நுழைவாயில் நான்கு கட்டுகள் கொண்டு அரசவைக்கு கொண்டுசெல்வதாக இருக்கிறது. அங்கிருந்து வடக்கு, கிழக்கு புறவாயில்களுக்குச் செல்லும் வகையில் சுற்றுச்சுவர்கள் பிரிக்கப்பட்டுள்ளன.

அரண்மனையின் கிழக்கு முக்கிய வீதியில் ஆங்காங்கே பெரிய மற்றும் சிறிய கட்டடங்கள் காணப்படுகிறது. இவை நாயக்க மற்றும் மராத்திய மன்னர்களால் கட்டப்பட்டது. நுழைவு வாயிலில் மிகப்பெரிய முற்றம் உள்ளது. சுற்றிலும் பெரிய சுற்றுச் சுவர் மற்றும் அதில் அமைக்கப்பட்டுள்ள பெரிய கதவுகளுடைய நுழைவாயில் உள்ளது. பெரிய முற்றத்தின் வழி சென்றால் அங்கு பல தூண்களை உடைய பெரிய கூடம் உள்ளது. தெற்கு பக்கத்தில் 190 அடி உயரமுடைய எட்டு அடுக்குகளை உடைய கூட கோபுரம் உள்ளது. இது கண்காணிப்பு கோபுரம் என அழைக்கப்படுகிறது. கி.பி., 1855ம் ஆண்டு வரை தஞ்சை மன்னர்களின் படைக்கல கொட்டிலாக இந்த இடம் இருந்தது. இந்த அரண்மனையில் நாயக்க, மராத்திய மன்னர்களின் தர்பார் மற்றும் ராஜா சரபோஜி சரஸ்வதி மகால் நூலகம் ஆகியவை பார்க்கத் தகுந்த இடங்களாகும்.

சரஸ்வதி மஹால் நூலகம்

ஆசியாவிலேயே மிகப்பழமையான நூலகம் என்ற புகழை பெற்றுள்ள சரஸ்வதி மஹால் நூலகம் தஞ்சாவூர் நகரத்தில் அமைந்திருக்கிறது. உலகில் உள்ள தொன்மையான நூலகங்களில் ஒன்றாக உள்ளது  தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம். இந்த நூலகம் சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு சோழர்கள் காலத்தில் உருவாக்கப்பட்டு பின்னர் நாயக்கர்  மன்னர்கள் மற்றும் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்களாலும் வளர்ச்சிப்பெற்றது. இந்தியாவில் கீழை நாட்டு ஆவணங்களின் மூலப்படிகள் பாதுகாக்கப்படுகின்றன.

கல்வெட்டுகளில் கிடைத்துள்ள ஆதாரங்களின் படி முதலில் இந்நூலகம் சரசுவதி பண்டாரகம், புத்தகப்பண்டாரம்  என அழைக்கப்பட்டுள்ளது. இந்நூலகத்தில் பணியாற்றிவர்களை சரசுவதி பண்டாரிகள் என அழைக்கப்பட்டனர்.
இங்கு மிகப்பழமையான ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாமல் தமிழ், மராத்தி, தெலுங்கு, ஆங்கிலம் போன்ற மொழிகளில் ஏராளமான நூல்களும் சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. இந்நூலகத்தில்  தமிழ், தெலுங்கு,சமற்கிருதம், ஆங்கிலம், பிரெஞ்சு,ஜெர்மன்,  இலத்தீன், கிரேக்கம் முதலிய பலமொழிகளிலுள்ள ஓலைச்சுவடிகளும்,கையெழுத்துப்பிரதிகளும்,அச்சுப்பிரதிகளும் உள்ளன.

இந்நூலகத்தில் சுமார் 25,000 சமஸ்கிருத நூல்கள் உள்ளன. அதுமட்டுமின்றி 400ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட'நந்திநாகரி' என்னும் எழுத்து வடிவத்தில் உள்ள சுவடிகளும் இங்கு உள்ளன. கி.பி. 1703-ல் ஓலைச்சுவடியில் எழுதப்பட்ட 'சீவகசிந்தாமணி' நூல் இங்கு பாதுகாக்கப்பட்டு வருகிறது.பிரெஞ்சு ஆசிரியர் ஒருவரால் எழுதப்பட்ட'சாமுத்திரிகா' என்ற அரியநூல் ஒன்றும் இந்நூலகத்தில் உள்ளது .தமிழ்நாட்டின் சிந்தனையாளர்களும், தமிழ் ஆர்வலர்களும், அறிவுஜீவிகளும் ஒருமுறையாவது விஜயம் செய்ய வேண்டிய நூலம் இது. இளைய தலைமுறைக்கு இந்த நூலகம் அறிமுகம் செய்யப்படவேண்டியதும் அவசியம்.

பூண்டி மாதா கோயில்

மிகவும் புகழ் பெற்ற கத்தோலிக்கத் தேவாலயம். 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இத்தாலிய நாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவ போதகரான அருட்தந்தை வீரமாமுனிவரின் முயற்சியால் கட்டப்பட்டது.பூண்டி மாதா பேராலயம் தஞ்சாவூரில் இருந்து சுமார் 35 கிலோ மீட்டர் வடமேற்கில் திருக்காட்டுப்பள்ளிக்கு அருகே பூண்டி என்னும் ஊரில் அமைந்துள்ளது. இவ்வாலயம் கொள்ளிடம் ஆற்றிற்கும், காவிரி ஆற்றிற்கும் நடுவில் அமைந்துள்ளது.

இராஜராஜன் மணி மண்டபம்

தஞ்சையில் உலகத் தமிழ் மாநாடு நடந்தபோது கட்டப்பட்டது. அழகிய பூங்காவுக்குள் இது அமைந்துள்ளது.

கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவு மண்டபம் ,இவர் விவசாயக் குடும்பத்தில் பிறந்து, தன் கவிதைகளை ஏழை எளிய பாட்டாளி மக்களுக்காகவே அர்ப்பணித்த மக்கள் கவிஞர் 13.4.1930 இல் பிறந்து 29 வயதிலேயே அமரர் ஆகிவிட்ட இந்த மகாகவியின் நினைவு மண்டபம் பட்டுக்கோட்டை - முத்துப்பேட்டை சாலையில் நாடியம்மாள்புரத்தில் அமைந்துள்ளது.

தஞ்சை தலையாட்டி பொம்மை:

தஞ்சாவூர் என்றதும் தலையாட்டி பொம்மை அனைவரது ஞாபகத்திற்கும் வரும். இந்த தலையாட்டி பொம்மை மூன்று பாகங்களாக உள்ளது. காற்றில் பொம்மை ஆடுவது பார்ப்பதற்கு ரம்மியமாக இருக்கும். விலையும் மலிவாக கிடைப்பதால் தஞ்சாவூர் வரும் அனைவரும் இந்த பொம்மையை வாங்காமல் செல்வதில்லை.
கலைகளுக்கு பெயர் பெற்ற தஞ்சையில் கி.பி. 19ஆம் நூற்றாண்டில் சரபோஜி மன்னரின் காலத்தில் உருவானதுதான் தலையாட்டி பொம்மைகள். தஞ்சையின் கலை மற்றும் பாரம்பரியத்தினை பறைசாற்றும் இப்பொம்மைகள் காவிரி ஆற்றின் களிமண் கொண்டு செய்யப்படுகிறது. இப்பொம்மைகளின் அடிப்பகுதி பெரியதாகவும் எடைமிகுந்ததாகவும் மேற்புறம் குறுகலாகவும் எடை குறைவானதாகவும் உருவாக்கப் படுகின்றன. இதனால் இப்பொம்மைகள் சாய்த்து தள்ளினாலும் கீழே விழாமல் மீண்டும் செங்குத்தாகவே நிற்கும் வகையில் உருவாக்கப்படுகின்றன. புவி ஈர்ப்பு விசை செயல்பாட்டிற்கேற்ப செங்குத்தாக இயங்கும் வகையில் இவை அமைகின்றன, முதலில் ராஜா ராணி பொம்மைகள் மட்டுமே வந்து கொண்டிருந்தன. பிறகு நடன மங்கை பொம்மை, தாத்தா, பாட்டி பொம்மை என காலத்திற்கு ஏற்ப மாறிக்கொண்டு வருகின்றன.

தஞ்சை ஓவியங்கள்:

ஆந்திராவின் ராயலசீமா பகுதியிலிருந்து தஞ்சாவூரில் குடியேறிய மூச்சிகள்  என்ற ஓவியத் தொழில் புரியும் சமூகத்தைச் சேர்ந்தவர்களே இத்தஞ்சை ஓவியத்தினை குலதொழிலாக கொண்டனர். தஞ்சை மராட்டிய மன்னரான சரபோஜி மன்னர் கலைகளின் மீது பெரும் பற்றுக் கொண்டவர் என்பதால் இவர்களுக்கு வேண்டுமளவிற்கு வாய்ப்புக்களை வழங்கி ஆதரித்து வந்தார்.கி.பி. 16 முதல் கி.பி.18ஆம் நூற்றாண்டு வரை, மராத்திய மன்னர்கள், விஜயநகர பேரரசின் நாயக்கர்கள்,  ஆகியோர் தஞ்சை ஓவியங்களுக்கு ஆதரவு தந்தனர். இதனால் தஞ்சை ஓவியங்கள் அரண்மனைகளின் உட்பகுதிகளை அலங்கரித்தன.மற்ற ஓவியப் பாணிகளைபோல இல்லாமல் தஞ்சாவூர் ஓவியப் பாணி ஓவியத்துடன் கைவினைக் கலையும் கலந்து ஒரு புதிய வடிவம் கொண்டதாக மலர்ந்தது. தஞ்சாவூர் ஓவியங்கள் மிகப் பிரபலமானவை. இந்து கடவுள்கள், ராமாயண, மகாபாரதம் போன்ற இதிகாச காட்சிகள் ஆகியவையே ஓவியத்தின் முக்கிய கரு பொருளாக இருக்கும். இந்த ஓவியக் கலை விலை மதிப்பற்ற கலையாக கருதப்படுகிறது. ஓவியங்கள் பெரும்பாலும் தங்க நிறத்தில் ஜொலிக்கும்.

தமிழ் பல்கலைக்கழகம்:

தமிழ் மொழி, பண்பாடு போன்ற துறைகளின் உயர் ஆய்வினை நோக்கமாகக் கொண்டு 1981 செப்டம்பர்15 ஆம் நாள்  தமிழ் மொழிக்கென்று 972.7ஏக்கர் நிலப்பரப்பில் நிறுவப்பட்ட பல்கலைக்கழகம். இப்பல்கலைக் கழகத்தில் தமிழில் உயர்கல்வி, மற்றும் ஆய்வுகள் இங்கு நடந்து வருகின்றன. பழைய நாணயங்கள், இசைக்கருவிகள் இங்குள்ள அருங்காட்சியகத்தில் உள்ளன. இப்பல்கலைகழகதின் முதல் துணைவேந்தர் மொழியியலாளர் திரு. வ.ஐ. சுப்பிரமணியம் ஆவார்.

தஞ்சை சமையல்

பழைய தஞ்சை மாவட்டம் தற்போது தஞ்சை, நாகை, திருவாரூர் என மூன்று மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு இருக்கின்றது. இந்த மூன்று மாவட்டங்கள் மட்டுமல்லாது திருச்சி உள்ளிட்ட பண்டைய சோழ அரசின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த மாவட்டங்களில் உள்ள மக்களின் உணவுப்பழக்கமும், உணவுத் தயாரிக்கும் விதமும் ஏறக்குறைய ஒரே மாதிரியாகவே உள்ளன. பிராமணர்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்பதால் இங்கு சைவ உணவுகள் மிகப்பிரசித்தம். தமிழகத்தின் நெற்களஞ்சியமாக இருப்பதால் அரிசி சார்ந்த உணவு வகைகள் இங்கு மிகுதியாய் பழக்கத்தில் உள்ளன.

பயண வசதிகள்
காவிரிப்படுகைப்பகுதியில் வீற்றிருக்கும் தஞ்சாவூர் 36 ச.கி.மீ பரப்பில் அமைந்துள்ளது. சென்னை, திருச்சி, ஈரோடு, வேலூர், கொச்சி, ஊட்டி போன்ற நகரங்களோடு நல்ல சாலை வசதிகளால் இணைக்கப்பட்டிருக்கிறது.
நகரத்திற்குள் பயணிக்க அரசுப்போக்குவரத்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் சென்னை, மதுரை, கோயம்புத்தூர் மற்றும் பெங்களூர் போன்ற நகரங்களிலிருந்து நவீன சொகுசுப்பேருந்து சேவைகளும் உள்ளன. தமிழ்நாட்டின் மற்ற நகரங்களுடன் தஞ்சாவூர் நல்ல முறையில் இணைக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் எல்லா முக்கிய நகரங்களிலிருந்தும் தஞ்சாவூர் நகருக்கு மாநில அரசுப்போக்குவரத்துக்கழக பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவை தவிர சென்னையிலிருந்து சொகுசுப்பேருந்து சேவைகளும் கிடைக்கின்றன. திருச்சி, மதுரை, சேலம், கோயமுத்தூர், பாண்டிச்சேரி போன்ற தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களிலிருந்து மிக எளிதாக பேருந்துகள் மூலம் தஞ்சாவூர் நகருக்கு வரலாம்.
தஞ்சாவூருக்கு அருகில் திருச்சி விமான நிலையம் 61 கி.மீ தூரத்தில் மிக முக்கியமான விமானப்போக்குவரத்து அமைந்துள்ளது. இது தவிர 322 கி.மீ தூரத்தில் சென்னை விமானநிலையமும் உள்ளன.

தமிழ்நாட்டின் எல்லா நகரங்களையும் போன்றே தஞ்சாவூர் நகரமும் உஷ்ணம் மற்றும் ஈரப்பதம் அதிகமாக காணப்படும் சூழலை கொண்டுள்ளது. தென்மேற்கு பருவ மழையை விடவும் வடகிழக்கு பருவமழைப்பருவம் இப்பகுதிக்கு அதிக மழைப்பொழிவை தருகிறது. மேலும் இப்பருவத்தில் காவிரி ஆற்றில் அதிக நீர் வரத்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தஞ்சாவூரில் தங்கும் வசதிகள் ஏராளம் உள்ளன.
மாநில அரசின் சுற்றுலாத்துறை மூலமாக சுற்றுலாப்பயணிகளுக்கு உதவும் அம்சங்களும் ஏராளம் உள்ளன. யாத்ரீகர்களும் பயணிகளும் தாம் விரும்பும் இடத்திற்கருகிலேயே தங்கிக்கொள்ளும் வகையில் பல தங்கும் விடுதிகள் பல்வேறு கட்டணங்களில் தஞ்சாவூரில் நிறைந்துள்ளன.


Share Tweet Send
0 Comments
Loading...