தமிழ் தேசிய போராளி தமிழரசன் பிறந்த தினம் இன்று ...

தமிழ் தேசிய போராளி தமிழரசன் பிறந்த தினம் இன்று ...

"நீங்கள் பொறியாளராக  வாழ்க்கையை அமைதிருந்தால் வசதியாக வாழ்ந்திருக்கலாமே?"

" என் நாட்டு மக்கள் பசியிலும் வறுமையிலும் வாடும் போது நான் மட்டும் எப்படி வசதியாக வாழ முடியும்"  - தோழர் தமிழரசன்.

இந்திய ஒன்றியத்தில் இருந்து தமிழ் தேசிய இனம் அரசியல் விடுதலை பெற வேண்டும் என்னும் கருத்தை  மாக்ஸிய லெனினிய வழியில்  முன் வைத்தவர் தமிழரசன்.

1945ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி   கடலூர் மாவட்டத்தில் மாணிக்கம் என்னும் சிற்றூரில் துரை சாமி - பாதுசாம்பாள் தம்பதியினருக்கு மூத்த ஆண்மகனாக தமிழரசன் பிறந்தார்.

தான் பிறந்த சிற்றூரில் இருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள பொன் பரப்பியில் தொடக்க கல்வியை தமிழரசன் பெற்றார். பின்னர் கோவை அரசுப் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து பொறியியல் கல்வி கற்றார்.

1967ஆம் ஆண்டு வசந்தத்தின் இடிமுழக்கமாய் மேற்கு வங்க மாநிலத்தில் நக்சல்பாரி என்னும் இடத்தில் விவசாயிகள் கிளர்ச்சி ஆரம்பமானது. இதன் தலைவரான சாரு மசூம்தார் அழைப்பை ஏற்று இந்தியா முழுவதும் பல மாணவர்கள் இப் போராட்டத்தில் இணைந்தனர். அப்போது கோவை பொறியியல் கல்லூரியில் மாணவராயிருந்த தோழர் தமிழரசனும் தனது படிப்பை பாதியில் நிறுத்தி விட்டுப் போராட்டத்தில் இணைந்தார்.

1975இல் அரியலூரில் தோழர் தமிழரசன் கைது செய்யப் பட்டார். இவர் திருச்சி சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த வேளை சிறையை உடைத்து தப்ப முயன்றார். பின்னர் 1983இல் ஒன்பது ஆண்டுகள் சிறைவாசத்தின் பின்னர் விடுதலையானார்.1984ஆம் ஆண்டு மே மாதம் 15, 16,ஆம் தேதிகளில் பெண்ணாடத்தில் "தமிழீழ விடுதலை ஆதரவு" இந்தியாவில் தேசிய இனங்களின் விடுதலை என்னும் தலைப்புகளில் மாநாடு ஒன்றை முன்னின்று நடத்தினார். பெண்ணாடம் மாநாட்டிற்கு பின்னர் தோழர் தமிழரசன் தமிழ்நாடு பொதுவுடமைக் கட்சியை தொடங்கிஅதன் கொள்கை அறிக்கையை வெளியிட்டார்.

”இந்தியா ஒருபோதும் தமிழீழத்தை ஆதரிக்காது. இந்திய அரசு போராளிகளுக்கு உதவுவது என்பது இலங்கை முழுவதையும் தனது ஆக்கிரமிப்பின் கீழ் கொண்டு வருவதற்கே. பங்களாதேசில் தனது நோக்கம் நிறைவேறியதும், எப்படி தான் பயிற்சி கொடுத்த போராளிகளை அழித்ததோ அதேபோன்று இலங்கையிலும் தனது நோக்கம் நிறைவேறியதும் ஈழப் போராளிகளை இந்திய அரசு அழிக்கும் ” என்று தமிழரசன் பதிவு செய்தார்.

1985ஆம் ஆண்டு மே மாதத்தில் அரியலூர் மாவட்டத்தில் மீன் சுருட்டி என்னும் ஊரில் தமிழக விவசாயிகள் சங்கம் மாநாடு நடைபெற்றது. இம் மாநாட்டில் சாதி ஒழிப்பு குறித்த தோழர் தமிழரசனின் அறிக்கை வெளியிடப்பட்டது.தமிழ்நாடு பொதுவுடமைக் கட்சியின் படைப்பிரிவாக தமிழ்நாடு விடுதலைப்படை தோழர் தமிழரசனால் உருவாக்கப் பட்டது. தமிழ்நாடு விடுதலைப்படையின் பெயரால் 1986இல் திருவையாறு இசைவிழாவிற்கு பிரதமர் ராஜீவ்காந்தி வருகை தந்த போது குடமுருட்டி பாலத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டது. அதன் பின்னர் தமிழீழ விடுதலையை அங்கீகரிக்குமாறு கோரி தமிழ்நாடு விடுதலைப்படையின் சார்பாக மருதையாற்று பாலம் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தோழர் தமிழரசன் மீதும், அவரது தமிழ்நாடு பொதுவுடமைக்கட்சியினர் மீதும் இந்திய அரசின் தேடுதல் வேட்டை தீவிரமடைந்தது.

1987ஆம் ஆண்டு செப்டெம்பர் முதலாம் தேதி  தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகாவின் காவேரி அணையை தகர்க்க திட்டமிட்டு அதற்கு தேவையான பணத்திற்கு  பொன்பரப்பியில் வங்கியில் பணப்பறிப்பு முயற்சியில் ஈடுபட்டவேளை தோழர் தமிழரசனும் அவருடைய தோழர்கள் நால்வரும் காவல்துறையின் திட்டமிட்ட சதியினால் கொல்லப்பட்டனர்.

பொதுமக்கள் வேடத்தில் இருந்த காவல்துறையினர் தமிழரசன் மற்றும் தோழர்களை தாக்கத் தொடங்கினர். கையில் நவீன ரக துப்பாக்கி வைத்திருந்த தமிழரசனும் அவரது தோழர்களும் தங்களை தாக்குவது பொதுமக்கள் என்று எண்ணி துப்பாக்கியை உபயோகிக்காமல் உயிர் துறந்தனர்


Share Tweet Send
0 Comments
Loading...