தினசரி நடப்பு நிகழ்வுகள் 6.4.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 6.4.2021 (Daily Current Affairs)

உலகம்

துபாயில் புதிய ஸ்மார்ட் நகரம்; ஆட்சியாளர் அறிவிப்பு !!

⚡துபாயில் புதிதாக ‘அல் கூஸ் படைப்புத்திறன் மாவட்டம்’ என்ற பெயரில் கலை மற்றும் கலாசாரத்திற்கான ஸ்மார்ட் நகரம் அறிமுகம் செய்யப்படுகிறது.

⚡படைப்புத்திறன் பொருளாதாரத்தின் தலைநகராக உலக அளவில் துபாயை உருவாக்கும் விதத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த படைப்புத்திறன் மாவட்டத்தில் துபாய் கலை மற்றும் கலாசார ஆணையத்தின் தலைவர் ஷேக்கா லத்திபா பிந்த் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் மேற்பார்வை பணிகளை மேற்கொள்வார்.

⚡இதன் மூலம் ஆக்கப்பூர்வமான படைப்புகளை தயாரிக்கும் அல்லது உருவாக்கும் 8 ஆயிரம் நிறுவனங்களின் எண்ணிக்கை 15 ஆயிரமாக உயர நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் அங்கு பணியாற்றும் 70 ஆயிரம் படைப்பாளிகளின் எண்ணிக்கை 1 லட்சத்து 50 ஆயிரம் பேராக உயரும்.

⚡அல் கூஸ் படைப்புத்திறன் மாவட்டமானது துபாயின் முன்னேற்றத்தின் புதிய படியாகும். மேலும் இது உலகம் முழுவதும் உள்ள படைப்பாளிகளுக்கான தளமாக செயல்படும்.

நியமனங்கள்

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பதவியேற்கிறார் என்.வி.ரமணா !!

⚡உச்ச நீதிமன்றதலைமை நீதிபதியாக உள்ள, எஸ்.ஏ.பாப்டே, வரும், 23-ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து, புதிய தலைமை நீதிபதியாக, மூத்த நீதிபதி, என்.வி. ரமணாவின் பெயரை, அவர் பரிந்துரைத்திருந்தார்.

⚡அது ஏற்கப்பட்டு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதலுடன், உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக, நீதிபதி, என்.வி. ரமணா நியமிக்கப்படுவதாக, மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

⚡மரபுபடி, பிரதமரின் முதன்மைச் செயலர், பி.கே. மிஸ்ரா, சட்டத் துறை செயலர் பரூன் மித்ரா ஆகியோர், நியமன உத்தரவை, நீதிபதி ரமணாவிடம் ஒப்படைத்தனர்.

⚡வரும், 24ம் தேதி, நாட்டின், 48வது தலைமை நீதிபதியாக, ரமணா பதவியேற்க உள்ளார். வரும் 2022, ஆகஸ்ட் 26 வரை, அவர் இந்தப் பதவியில் இருப்பார்.

⚡ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டம், பொன்னாவரம் கிராமத்தில் பிறந்த ரமணா, 1983-ல், வழக்கறிஞராக பணியாற்றினார். ஆந்திர உயர் நீதிமன்ற நீதிபதியாக, 2000-ல் நியமிக்கப்பட்டார். அங்கு, 2013-ல், பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்தார்.

⚡பின், டில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட அவர், 2014-ல் உச்ச நீதிமன்ற நீதிபதியானார். ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும், அரசியல் சாசனத்தின், 370வது பிரிவை நீக்கியது தொடர்பான வழக்கு, 'தகவல் அறியும் சட்டம், தலைமை நீதிபதி அலுவலகத்துக்கும் பொருந்தும்' என்ற வழக்கு உள்ளிட்ட, பல முக்கிய வழக்கில் தீர்ப்பு அளித்த அமர்வில், இவர் இடம்பெற்று இருந்தார்.

பசுமை தீர்ப்பாய உறுப்பினர்களாக தமிழகத்தை சேர்ந்த 3 பேர் நியமனம் !!

⚡தேசிய பசுமை தீர்ப்பாய உறுப்பினர்களாக தமிழகத்தை சேர்ந்த நீதிபதி எம்.சத்தியநாராயணன், முன்னாள் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், முன்னாள் வருவாய் நிர்வாக ஆணையர் கே.சத்யகோபால் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

⚡சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்தவழக்குகளை விசாரிக்க டெல்லியில் தேசிய பசுமை தீர்ப்பாய முதன்மை அமர்வு உருவாக்கப்பட்டது.

⚡அதன் தொடர்ச்சியாக சென்னை கொல்கத்தா, புணே, போபால் ஆகிய இடங்களிலும் மண்டல அமர்வுகள் தொடங்கப்பட்டன. இவற்றுக்கு நீதித்துறை உறுப்பினராக நியமிக்க தமிழகத்தை சேர்ந்த உயர்நீதிமன்ற நீதிபதி எம்.சத்தியநாராயணன், முன்னாள் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், முன்னாள் வருவாய் நிர்வாக ஆணையர் கே.சத்யகோபால் பெயர்களை பரிந்துரைத்து மத்திய அரசுக்கு மத்தியசுற்றுச்சூழல் அமைச்சகம் கருத்துரு அனுப்பியது.

தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு 4 நீதித்துறை உறுப்பினர்கள் நியமனம் !!

⚡தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு நான்கு நீதித்துறை உறுப்பினர்கள் மற்றும் மூன்று நிபுணத்துவ உறுப்பினர்களை நியமித்து மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் ஆணை பிறப்பித்துள்ளது.

⚡நீதிபதிகள் பிரிஜேஷ் சேத்தி, அமித் ஸ்லேகர், எம்.சத்தியநாராயணன், சுதிர் அகர்வால் ஆகியோர் நீதித்துறை உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

⚡டாக்டர் அருண் கே.வர்மா, கிரிஜா வைத்தியநாதன், டாக்டர் கே.சத்யகோபால் ஆகியோர் நிபுணத்துவ உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

விளையாட்டு

அனைத்து வகையான சர்வதேச பேட்மிண்டன் போட்டிகள் ரத்து !!

⚡உலக முழுவதும் நோய்த்தொற்று வேகமாக பரவி வரும் சூழலில், சர்வதேச பேட்மிண்டன் போட்டிகள் அனைத்தும் ரத்து செய்வதாக உலக பேட்மிண்டன் சங்கம் அறிவித்துள்ளது.

⚡ரஷ்ய ஓபன் சூப்பர் 100 பேட்மிண்டன் போட்டிகளும், இந்தோனிசியா மாஸ்டர்ஸ் போட்டிகளும் ரத்து செய்வதாக தெரிவித்துள்ளது.

⚡ரஷ்யா மற்றும் இந்தோனேசியாவில் உள்ள தேசிய பேட்மிண்டன் சங்கங்களிடம் ஆலோசனை நடத்திய பிறகே, இதனை அறிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

⚡சமீபத்தில் அனைத்து வகையான உள்நாட்டு போட்டிகளையும் ரத்து செய்வதாக இந்திய பேட்மிண்டன் சங்கம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒலிம்பிக்கில் இருந்து வெளியேறிய வடகொரியா !!

⚡நோய்த் தொற்று காரணமாக ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியிலிருந்து வடகொரியா விலகுவதாக அறிவித்துள்ளது.

⚡வடகொரியா தலைநகர் பியோங்யாங்கில் கடந்த மார்ச் 25-ம் தேதி தேசிய ஒலிம்பிக் விளையாட்டு ஆணையத்தின் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியிலிருந்து விலகுவதாக வடகொரியா அறிவித்துள்ளது.

⚡டோக்கியோ ஒலிம்பிக் போட்டியிலிருந்து விலகும் முதல் நாடாக வடகொரியா உள்ளது. 1988-ம் ஆண்டிலிருந்து முதல் முறையாக வடகொரியா கோடைக்கால ஒலிம்பிக் போட்டியிலிருந்து விலகுகிறது.

தரவரிசை

இந்தியாவின் கோடீஸ்வரர்களின் பட்டியல் வெளியீடு !!

⚡2021 ஆம் ஆண்டுக்கான இந்திய கோடீசுவரர்கள்  பட்டியலை போர்ப்ஸ் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

⚡இதில் சுமார் 6 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களுடன் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி முதலிடத்தில் உள்ளார்.

⚡சுமார் 3 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி இரண்டாம் இடத்தில் உள்ளார்.

⚡அதானி கிரீன், அதானி என்டர்பிரைசஸ் ஆகிய அவரது நிறுவனங்களின் பங்குகள் ராக்கெட் வேகத்தில் உயர்ந்ததால், அதானியின் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது.

⚡எச்சிஎல் நிறுவனர் ஷிவ் நாடார் ஒரு லட்சத்து 72 ஆயிரம் கோடி சொத்து மதிப்புடன்  3 ஆம் இடத்திலும், அவன்யூ சூப்பர்மார்க்கெட் அதிபர் ராதாகிஷண் தமானி ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடன் 4 ஆம் இடத்திலும் உள்ளனர்.

⚡கடந்த ஆண்டு 102 ல் இருந்த மொத்த இந்திய கோடீசுவரர்களின்  எண்ணிக்கை இந்த ஆண்டு 140 ஆக உயர்ந்து உள்ளது. அவர்களின் மொத்த சொத்து மதிப்பு கிட்டத்தட்ட இரு மடங்காக 596 பில்லியன் டாலராக உயர்ந்து உள்ளது  என்று போர்ப்ஸ் தெரிவித்துள்ளது.


Share Tweet Send
0 Comments
Loading...