தினசரி நடப்பு நிகழ்வுகள் 26.3.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 26.3.2021 (Daily Current Affairs)

உலகம்

அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட மியான்மர் ஒத்துழையாமை இயக்கம்!!

🔷மியான்மர் ராணுவ ஆட்சிக்கு எதிரான ஒத்துழையாமை இயக்கம் 2022ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

🔷உலக அளவில் இயற்பியல், அமைதி, வேதியியல், மருத்துவம், இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் தலைசிறந்து விளங்குபவர்களை அங்கீகரிக்கும் விதமாக நோபல் பரிசு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

🔷மிக மதிப்பு வாய்ந்த விருதாக கருதப்படும் இந்த பரிசுக்கு பல்வேறு அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் பரிந்துரைக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் மியான்மரில் நடைபெற்று வரும் ராணுவ ஆட்சிக்கு எதிராக மியான்மர் ஒத்துழையாமை இயக்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

🔷அமைதியான வழியில் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்து வரும் இந்த இயக்கம் 2022ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்தியா

எட்டு வங்கிகளின் காசோலைகள் ஏப்ரல் 1 முதல் செல்லாது என மத்திய அரசு அறிவிப்பு!!

🔷பொதுத்துறை வங்கிகளின் இணைப்பு நடவடிக்கையை தொடர்ந்து, பழைய வங்கியின் பெயரில் உள்ள காசோலைகள், ஏப்ரல் முதல் தேதியிலிருந்து செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

🔷தேனா வங்கி, விஜயா வங்கி ஆகியவை, பேங்க் ஆப் பரோடாவுடனும், கார்ப்பரேஷன் வங்கி, ஆந்திரா வங்கி ஆகியவை, யூனியன் பேங்க் ஆப் இந்தியாவுடனும் இணைக்கப்பட்டன. ஓரியன்டல் பேங்க் ஆப் காமர்ஸ், யுனைடெட் வங்கி ஆகியவை, பஞ்சாப் நேஷனல் வங்கியுடனும், சிண்டிகேட் வங்கி, கனரா வங்கியுடனும், அலகாபாத் வங்கி, இந்தியன் வங்கியுடனும் இணைக்கப்பட்டன.

🔷ஆனாலும், இணைப்புக்கு உள்ளான பழைய வங்கிகளின் காசோலைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு வந்தன. அவை, நாளடைவில் படிப்படியாக விலக்கிக் கொள்ளப்பட்டு, புதிய வங்கியின் காசோலைகள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

🔷இந்நிலையில், வரும், 1ம் தேதி முதல், எட்டு வங்கிகளின் காசோலைகள் செல்லாது என, மத்திய அரசு அறிவித்து உள்ளது.எனவே, மேற்குறிப்பிட்ட வங்கிகளின் காசோலையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், புதிய வங்கியின் காசோலை புத்தகங்களை கேட்டுப் பெறும்படி அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட வங்கிகளின் காசோலைகளை ஏற்கனவே பெற்றிருந்தால், அதை மாற்றி பெறும்படியும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்!!

🔷ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

🔷இது தொடர்பாக, மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த அவர், ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான தேர்ச்சி சதவீதம் 69-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.

🔷ஓட்டுநருக்கான திறனைச் சோதிப்பதற்கான தகுதித் தேர்வில் அனைவரும் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம் என்றார்.

நியமனங்கள்

ஆதார் அட்டைக்கான தனிநபர் தகவல் ஆணையத்தின் தலைவராக சவுரப் கார்க் நியமனம்!!

🔷ஆதார் அட்டைகளை நிர்வாகிக்கும் தனிநபர் தகவல் ஆணையத்தின் தலைவராக சவுரப் கார்க் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவரது நியமனத்துக்கு அமைச்சரவை நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

🔷ஒடிசாவை சேர்ந்த சவுரப் கார்க் 1991ம் ஆண்டில் ஐ.ஏ.எஸ்.அதிகாரியானார்.

🔷இதே போன்று ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டியின் தலைமை அதிகாரியாக சஞ்சீவ் குமாரும், உணவு கார்ப்பரேஷனின் தலைவராக அதிஷ் சந்திராவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

🔷நேற்று மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில் 22 அதிகாரிகளின் முக்கியப் பொறுப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதாவுக்கு பதவி உயர்வு மத்திய அரசு உத்தரவு!!

🔷மத்திய அரசில் பணியாற்றும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு மற்றும் பணி மாறுதல் அளித்து மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

🔷அந்த வகையில் 22 அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 19 பேருக்கு பதவி உயர்வு கிடைத்துள்ளது.

🔷இதில் தமிழகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி பி.அமுதாவுக்கும் பதவி உயர்வு கிடைத்துள்ளது.

🔷பிரதமர் அலுவலகத்தின் இணைச் செயலாளராக பணியாற்றி வந்த பி.அமுதா அதே அலுவலகத்தின் கூடுதல் செயலாளராக பதவி உயர்வு பெறுகிறார்.

மாநாடுகள்

பருவநிலை உச்சிமாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி உள்பட 40 நாடுகளின் தலைவர்களுக்கு அமெரிக்கா அழைப்பு!

🔷அமெரிக்காவில் வரும் ஏப்ரல் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் பருவநிலை மாற்றம் குறித்த மெய்நிகர் உச்சிமாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் புதைபடிம எரிபொருள்கள் பயன்பாடு, காலநிலை மாற்றத்தால் அதிகரிக்கும் வெப்பநிலையைக் குறைக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள், காலநிலை மாற்ற தடுப்பு நடவடிக்கையின் மூலம் உருவாக்கப்படும் வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

🔷இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியப் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜீ ஜின்பிங், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் மற்றும் ஜப்பானிய பிரதமர் யோஷிஹைட் சுகா உள்ளிட்ட 40 நாடுகளின் தலைவர்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார்.

🔷இந்த ஆண்டு நவம்பரில் கிளாஸ்கோவில் நடைபெற உள்ள ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாட்டிற்கான முக்கிய மைல்கல்லாக இந்த உச்சி மாநாடு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டின் விவாதங்களை நேரலையாக ஒளிபரப்ப உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

விளையாட்டு

ஜூலை 23 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன!!

🔷ஜப்பானின் ஃபுடாபா நகருக்கு ஒலிம்பிக் ஜோதி வந்தடைந்தது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன.

🔷இப்போட்டிகளில் வெளிநாடுகளை சேர்ந்த பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது என ஜப்பான் அரசு அறிவித்துள்ளது.

🔷இந்நிலையில், ஒலிம்பிக் ஜோதி ஃபுடாபா நகருக்கு கொண்டு வரப்பட்டது. அதனை பார்வையாளர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

🔷இந்த நகரம் கடந்த, பத்து ஆண்டுகளுக்கு முன்பு நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் கடுமையாக பாதிப்பு அடைந்தது குறிப்பிடத்தக்கது.


Share Tweet Send
0 Comments
Loading...