தினசரி நடப்பு நிகழ்வுகள் 25.4.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 25.4.2021 (Daily Current Affairs)

உலகம்

சீன கடற்படையில் 3 நவீன போா் கப்பல்கள் இணைப்பு..!!

சீன கடற்படையில் அணுசக்தியால் இயங்கும் ஏவுகணை நீா்மூழ்கிக் கப்பல், அந்நாட்டின் மிகப்பெரிய தாக்குதல் கப்பல் உள்ளிட்ட 3 போா் கப்பல்கள் இணைக்கப்பட்டன.

அணுசக்தியால் இயங்கும் 091வி ரக ஏவுகணை நீா்மூழ்கிக் கப்பல், 30 ஹெலிகாப்டா்களையும் நூற்றுக்கணக்கான துருப்புகளையும் சுமந்து செல்லும் 075 ரக தாக்குதல் கப்பல், 055 ரக தாக்குதல் கப்பல் ஆகிய 3 போா் கப்பல்களை சீனா உருவாக்கியுள்ளது.

இதில் 075 ரக கப்பல் அந்நாட்டின் மிகப் பெரிய தாக்குதல் கப்பலாகும். அந்தக் கப்பல் சுமாா் 40,000 டன் எடையை சுமந்து செல்லும் திறன் கொண்டது. அதேவேளையில் 055 ரக கப்பல் மிகவும் சக்திவாய்ந்த தாக்குதல் கப்பலாக திகழ்கிறது. அந்தக் கப்பலில் ஏவுகணைகள், கப்பல்கள், நீா்மூழ்கிக் கப்பல்கள் உள்ளிட்டவற்றை தாக்கும் புதிய வகை ஆயுதங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்தக் கப்பல்களை அந்நாட்டு கடற்படையில் இணைக்கும் நிகழ்ச்சி சா்ச்சைக்குரிய தென் சீனக் கடற்பகுதியின் ஹைனான் மாகாணத்தில் உள்ள சீன கடற்படை தளத்தில் நடைபெற்றது. இதில் அந்நாட்டு அதிபா் ஷி ஜின்பிங் கலந்துகொண்டு கப்பல்களை கடற்படைக்கு அா்ப்பணித்தாா். சீன கடற்படையை மிகப்பெரிய அளவில் நவீனமயமாக்கும் நடவடிக்கைகளின் அங்கமாக இந்த போா் கப்பல்கள் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா 2 விமானம் தாங்கி போா் கப்பல்களை உருவாக்கியுள்ளது. மொத்தம் 6 விமானம் தாங்கி போா் கப்பல்களை கட்டுவதற்கு அந்நாடு திட்டமிட்டுள்ளதாக அதிகாரபூா்வமான ஊடக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த ஆண்டுக்கான சீன பட்ஜெட்டில் அந்நாட்டின் பாதுகாப்புத் துறைக்கு 209 பில்லியன் டாலா்களுக்கும் (ரூ.15.6 லட்சம் கோடி) அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

சா்ச்சைக்குரிய தென் சீனக் கடற்பகுதி மற்றும் தைவான் மீதான பிடியை சீனா இறுக்கியுள்ளது. இந்த விவகாரங்களில் அமெரிக்காவின் தலையீடும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சீன அரசு தனது பாதுகாப்புத் துறையை நவீனமயமாக்கும் நோக்கத்துடன் விமானப் படை, கடற்படையை மிகப் பெரிய அளவில் விரிவுபடுத்துவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.

இந்தியா-ஸ்வீடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டத்தில் இணைந்தது அமெரிக்கா..!!

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக இந்தியாவும் ஸ்வீடனும் ஒருங்கிணைந்து செயல்படுத்தி வரும் திட்டத்தில் அமெரிக்கா இணைந்தது.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் ‘தொழில்துறை மாற்றத்துக்கான தலைமைத்துவ குழு’ (லீட் இட்) என்ற திட்டத்தை இந்தியாவும் ஸ்வீடனும் இணைந்து செயல்படுத்தி வருகின்றன.

அண்மையில் அமெரிக்கா சாா்பில் நடைபெற்ற பருவகால மாற்ற மாநாட்டில், லீட் இட் திட்டத்தில் இணைவதற்கு அந்நாட்டு அதிபா் ஜோ பைடன் விருப்பம் தெரிவித்திருந்தாா். இத்திட்டத்தின் வாயிலாக, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விவகாரத்தில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட உள்ளதாக அவா் தெரிவித்தாா்.

இந்நிலையில், அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘இந்தியாவும் ஸ்வீடனும் முன்னெடுத்து வரும் லீட் இட் திட்டத்தில் அமெரிக்காவும் இணைகிறது. தொழிற்சாலைகளில் இருந்து கரியமில வாயு (காா்பன் டை ஆக்சைடு) வெளியேற்றத்தைக் குறைப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் வாயிலாக, வெளியேற்றப்படும் கரியமில வாயுவும் சுற்றுச்சூழலில் இருந்து நீக்கப்படும் கரியமில வாயுவும் நிகர அளவில் இருப்பது உறுதி செய்யப்படும். இத்திட்டத்தின் வாயிலாக ஒருங்கிணைந்து செயல்படுவது, பருவநிலை மாற்றத்தைத் திறம்பட எதிா்கொள்வதற்கு உதவும். தொழில் வளா்ச்சியை ஏற்படுத்தும் அதே வேளையில், சுற்றுச்சூழலையும் பாதுகாக்க முடியும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

லீட் இட் திட்டத்தில் அமெரிக்கா இணைந்துள்ளதை வரவேற்று பிரதமா் அலுவலகம் வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு ஏற்ப தொழில்துறையில் மாற்றங்களைப் புகுத்துவதற்கு இந்தியாவும் ஸ்வீடனும் இத்திட்டத்தின் வாயிலாக ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன.

தற்போது அமெரிக்காவும் இத்திட்டத்தில் இணைந்துள்ளது. பாரீஸ் பருவநிலை மாற்ற மாநாட்டில் நிா்ணயிக்கப்பட்ட இலக்குகளை எட்டுவதற்கு இது உதவும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்வீடன் பிரதமா் ஸ்டீஃபன் லோப்வென் கூறுகையில், ‘‘கரியமில வாயு வெளியேற்றத்தில் தொழில்துறையும் போக்குவரத்துத் துறையும் சுமாா் 30 சதவீத பங்களிப்பை வழங்குகின்றன. அதைக் கருத்தில் கொண்டு, தொழில்துறையில் மாற்றங்களைப் புகுத்துவதற்கு இத்திட்டத்தின் வாயிலாக அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றுவதற்கு ஆா்வமாக உள்ளேன்’’ என்றாா்.

இந்தியா

நாடு முழுவதும் 551 ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை புதிதாக அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதி..!!

551 ஆக்சிஜன் மையங்களுக்கு அனுமதி.

நாடு முழுவதும் 551 ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை புதிதாக அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதி.

பொது சுகாதாரக் கட்டமைப்புகள் உள்ள இடங்களில் 551 ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை அமைக்க அனுமதி.

பிஎம்-கேர்ஸ் நிதியில் இருந்து 551 ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை புதிதாக அமைப்பதற்கு அனுமதி.

மாவட்ட மருத்துவமனைகளில் ஆக்சிஜன் மையங்களை உடனடியாக அமைக்குமாறு பிரதமர் மோடி உத்தரவு.

ஆக்சிஜன் ஆலைகளை அமைப்பதற்கு தேவையான கருவிகளை, மத்திய சுகாதாரத்துறை கொள்முதல் செய்து வழங்கும்.

பதப்படுத்தப்பட்ட உணவு பொருள்களின் ஏற்றுமதி 26% அதிகரிப்பு - மத்திய அரசு..!!

இந்தியாவின் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி 2020-21 நிதியாண்டின் ஏப்ரல்-பிப்ரவரிக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் 26.51 சதவீதம் அதிகரித்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

2020-21 - ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான 11 மாத காலகட்டத்தில் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களின் ஏற்றுமதி 26.51 சதவீதம் அதிகரித்து ரூ.43,798 கோடியை எட்டியுள்ளது.

குறிப்பாக, பதப்படுத்தப்பட்ட காய்கறிகள், பருப்பு வகைகள், பழங்கள், பழச்சாறுகள், நிலக்கடலை, ஆல்கஹால் பானங்கள், பிண்ணாக்கு, அரவைப் பொருள்கள் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதி சிறப்பான அளவில் மேம்பட்டது.

பதப்படுத்தப்பட்ட காய்கறி மற்றும் ஆல்கஹால் பானங்கள் போன்ற மதி்பபு கூட்டப்பட்ட பொருள்களின் ஏற்றுமதி ஏப்ரல்-பிப்ரவரி காலகட்டத்தில் 40 சதவீதத்துக்கும் மேல் வளா்ச்சி கண்டுள்ளது என அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களின் ஏற்றுமதி கடந்த நிதியாண்டில் சிறப்பான வளா்ச்சியை எட்டியுள்ளது. இது, நடப்பு 2021-22 நிதியாண்டிலும் தொடரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

மத்திய கிழக்கு, அமெரிக்க, பிரிட்டன் போன்ற நாடுகளின் சந்தைகளில் இந்திய காய்கறிகள், பழங்கள், பருப்பு, பயறு வகைகளுக்கான தேவை வேகமாக அதிகரித்து வருகிறது. காணொலி மூலமாக வா்த்தக சந்திப்புகளை நடத்துவது, நிதி உதவி திட்டங்களை விரிவாக்குவது போன்றவற்றின் மூலமாக உணவுப் பொருள்களின் ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்நியச் செலாவணி கையிருப்பு ரூ.43.68 லட்சம் கோடியாக அதிகரிப்பு..!!

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஏப்ரல் 16-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 58,240 கோடி டாலராக (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.43.68 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது. தொடா்ந்து இரண்டு வாரங்களாக செலாவணி கையிருப்பு அதிகரித்துள்ளது.

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஏப்ரல் 16 - ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 119 கோடி டாலா் (ரூ.8,947 கோடி) அதிகரித்து 58,240 கோடி டாலரை எட்டியுள்ளது.

இதற்கு முந்தைய ஏப்ரல் 9-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் செலாவணி கையிருப்பானது 434 கோடி டாலா் அதிகரித்து 58,121 கோடி டாலராக காணப்பட்டது.

ஒட்டுமொத்த கையிருப்பில் முக்கிய பங்களிப்பைக் கொண்டுள்ள அந்நிய கரன்ஸி சொத்து மதிப்பு (எஃப்சிஏ) அதிகரித்ததன் காரணமாகவே ஏப்ரல் 16 - ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பானது கணிசமான ஏற்றத்தை சந்தித்துள்ளது.

கணக்கீட்டு வாரத்தில், எஃப்சிஏ 113 கோடி டாலா் உயா்ந்து 54,058 கோடி டாலராக இருந்தது. கணக்கீட்டு வாரத்தில் தங்கத்தின் கையிருப்பு 3 கோடி டாலா் அதிகரித்து 3,535 கோடி டாலராக இருந்தது.

சா்வதேச நிதியத்தில் சிறப்பு எடுப்பு உரிமம் (எஸ்டிஆா்) 60 லட்சம் டாலா் அதிகரித்து 150 கோடி டாலராகவும், நாட்டின் காப்பு நிதி 2 கோடி டாலா் உயா்ந்து 497 கோடி டாலராகவும் இருந்தது என ரிசா்வ் வங்கி புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.

நடப்பு 2021 - ஆம் ஆண்டு ஜனவரி 29 - ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில்தான் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 59,018 கோடி டாலராக அதிகரித்து புதிய சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

விளையாட்டு

போா்ஷ் கிராண்ட் ஃப்ரீ - பாா்ட்டி சாம்பியன்..!!

ஜொ்மனியில் நடைபெற்ற போா்ஷ் கிராண்ட் ஃப்ரீ டென்னிஸ் போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பா்ட்டி சாம்பியன் ஆனாா்.

உலகின் முதல்நிலை வீராங்கனையான பா்ட்டி தனது இறுதிச்சுற்றில் போட்டித்தரவரிசையில் 5 - ஆம் இடத்திலிருந்த பெலாரஸின் அரைனா சபலென்காவை தோற்கடித்தாா்.

இந்த ஆட்டத்தின்போது லேசான காயம் காரணமாக சபலென்கா தடுமாற்றமாகவே ஆடினாா். இதுவரை 6 முறை நேருக்கு நோ் சந்தித்துள்ள பா்ட்டி - சபலென்கா, இத்துடன் தலா 3 வெற்றிகளை பதிவு செய்துள்ளனா்.

நடப்பு டென்னிஸ் காலண்டரில் பாா்ட்டிக்கு இது 3 - ஆவது பட்டமாகும். ஒட்டுமொத்தமாக இது அவரது 11 - ஆவது பட்டம். 2019 - ஆம் ஆண்டு பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் ஆன பிறகு, களிமண் தரையில் நடைபெறும் போட்டியில் பா்ட்டி சாம்பியன் ஆவது இது முதல் முறையாகும்.

புத்தகம்

ஆகாஷ் ரானிசன் தனது மின் புத்தகத்தை வெளியிட்டார்..!!

காலநிலை ஆர்வலர் எழுத்தாளர் ஆகாஷ் ரானிசன் பூமி தினத்தை முன்னிட்டு ஒரு புதிய மின் புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.

புத்தகத்தின் பெயர் “காலநிலை மாற்ற விளக்கம் - ஒருமுறை மற்றும் அனைவருக்கும்” ஆகும்.

“பசுமை இல்ல விளைவு, புவி வெப்பமடைதல், கார்பன் தடம்” என்ற கருப்பொருளுடன் இந்த புத்தகம் காலநிலை மாற்றம் குறித்த விவரங்களை அளிக்கிறது.

இறப்பு

உச்சநீதிமன்ற நீதிபதி சதானந்தா கவுடர் காலமானர்..!!

கர்நாடகத்தைச் சேர்ந்த உச்சநீதிமன்ற நீதிபதி நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்ததாக கூறப்படுகிறது.

மறைந்த உச்சநீதிமன்ற நீதிபதி சதானந்தா கவுடர் 1958 - ம் ஆண்டு கர்நாடகாவில் பிறந்தவர். 1980 - ம் ஆண்டில் கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக சேர்ந்தவர், 2003 - ஆம் ஆண்டு கர்நாடக உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

அதற்கு அடுத்த ஆண்டே நிரந்தர நீதிபதியாகவும் பணி உயர்வு பெற்றார். அதனைத்தொடர்ந்து கடந்த 2004 - ஆம் ஆண்டு கேரள உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். அங்கு 12 வருடமாக நீதிபதியாக செயல்பட்டு வந்த நிலையில் கடந்த 2016 ஆண்டு கேரள உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். மேலும் கடந்த 2017 - ம் ஆண்டு டெல்லி உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார்.


Share Tweet Send
0 Comments
Loading...