தினசரி நடப்பு நிகழ்வுகள் 23.2.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 23.2.2021 (Daily Current Affairs)

தமிழ்நாடு

தமிழகத்தில் ஆக்சிஜன் ஆலை ஐநாக்ஸ் நிறுவனம் !!

🔷‘ஐநாக்ஸ் ஏர் புராடெக்ட்ஸ்’ நிறுவனம், 2 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட எட்டு மாநிலங்களில், திரவ ஆக்சிஜன் தொழிற்சாலைகளை அமைப்பது உட்பட, பல்வேறு விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள உள்ளது.

🔷குஜராத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும், ஐநாக்ஸ் ஏர் புராடெக்ட்ஸ் நிறுவனம், தொழிற்சாலைகள் மற்றும் மருத்துவ தேவைகளுக்கான திரவ வாயுக்கள் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிறுவனம், 2 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், தமிழகம், ஆந்திரா, குஜராத் உள்ளிட்ட எட்டு மாநிலங்களில், திரவ வடிவிலான ஆக்சிஜன், நைட்ரஜன், ஆர்கன் வாயுக்களை உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளது. அத்துடன், இத் தொழிற்சாலைகளில், வாயு பிரிப்பு பிரிவுகளையும் அமைக்க உள்ளது.

🔷தற்போது தினமும், 2,300 டன் திரவ வாயுக்களை உற்பத்தி செய்யும் திறனை கொண்டுள்ளது.

🔷இது, தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட எட்டு மாநிலங்களில் அமையும் தொழிற்சாலைகள் மூலம், 4,800 டன்னாக அதிகரிக்கும்.

🔷இதன் மூலம், மின்னணு, மருந்து, உருக்கு, வாகனம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு தேவையான வாயுக்கள் தடையின்றி கிடைக்கும்.

ரூ.1,022 கோடியில் கால்நடைமருத்துவ ஆராய்ச்சி நிலையம் திறப்பு !!

🔷சேலம் மாவட்டம், தலைவாசலில் ரூ.1,022 கோடியில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி நிலையம், கால்நடை மருத்துவக் கல்லூரியை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தார்.

🔷சேலம் மாவட்டம், தலைவாசலில் சா்வதேச தரத்தில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சிப் பூங்கா கட்டடம், கால்நடை மருத்துவக் கல்லூரி திறப்பு விழா- தலைவாசல் வருவாய் வட்ட தொடக்க விழா நடைபெற்றது.

🔷தமிழகத்தில் உள்ள கலப்பினப் பசுக்கள் 15 லிட்டா் பால் தருகின்றன. இரட்டிப்பு பால் தரும் கலப்பினப் பசுக்களை உருவாக்கி விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும். நாளொன்றுக்கு சுமார் 40 லிட்டா் வரை பால் கறக்கும் கலப்பினப் பசுக்களை உருவாக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

🔷சேலம் மாவட்டம், கருமந்துறையில் ரூ.100 கோடி மதிப்பில் கலப்பினப் பசுக்கள் ஆராய்ச்சி மையம் தொடங்கப்படும்.

🔷கால்நடை வளா்ப்பை ஊக்குவிக்க தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி நிலையம், கால்நடை மருத்துவக் கல்லூரி சுமார் ரூ. 1,022 கோடி செலவில மிக பிரம்மாண்டமாக ஆரம்பிக்கப்பட்டது. ஆசியாவிலேயே மிக பெரியதாக 1,102 ஏக்கா் பரப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.

🔷காங்கேயம் காளைகளைப் பாதுகாக்க சத்தியமங்கலத்தில் ரூ. 2.50 கோடியிலும், சிவகங்கை, மதுரை, விருதுநகரில் உள்ள புலிகுளம் காளைகளை பாதுகாக்க ஆராய்ச்சி மையமும் தொடங்கப்பட்டுள்ளது.

🔷ஆலம்பாடி கால்நடைகளை பாதுகாக்க ரூ. 4 கோடியில் தருமபுரியில் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தாய்ப்பால் வங்கி தொடக்கம் !!

🔷தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் தாய்ப்பால் வங்கி அமைக்கப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழாவுக்கு ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தலைமை வகித்தார்.

🔷தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ திறந்து வைத்தார்.

🔷200 லிட்டர் தாய்ப்பாலை 6 மாதங்கள் பாதுகாப்பாக சேமித்து வைக்கும் திறன் கொண்டதாக இந்த வங்கி அமைக்கப்பட்டுள்ளது.

மாநாடுகள்

கடல்சார் இந்தியா உச்சி மாநாடு !!

🔷மத்திய துறைமுகங்கள், கப்பல்போக்குவரத்து துறை சார்பில், மார்ச் 2-ம் தேதி நடைபெறும் கடல்சார் இந்தியா உச்சி மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.

🔷மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து அமைச்சகம் சார்பில், ‘கடல்சார் இந்தியா மெய்நிகர் உச்சி மாநாடு-2021’ வரும் மார்ச் 2 முதல் 4-ம் தேதி வரை நடைபெறுகிறது. பிரதமர் மோடி இந்த மாநாட்டை தொடங்கி வைக்கிறார். இதில், உலகம் முழுவதும் 40 நாடுகளில் இருந்து ஒரு லட்சம் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.

🔷துறைமுகங்களின் வளர்ச்சி, நவீனமயமாக்கல், கப்பல் கட்டுமானம், பழுதுபார்த்தல், கடலோர கப்பல்போக்குவரத்து, பயண சுற்றுலா, கடல்சார் கல்வி உட்பட அனைத்து பிரிவுகளில் உள்ள முதலீடுவாய்ப்புகள் குறித்து விவாதிக்கப்படும்.

🔷மேலும் இந்த உச்சிமாநாட்டில் சென்னை துறைமுகம் சார்பில் 15 ஒப்பந்தங்கள் செய்யப்பட உள்ளன. இதில், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மப்பேட்டில் ரூ.1,500 கோடியில் அமைய உள்ள பல்நோக்கு சரக்குப் பெட்டக பூங்கா, சென்னை - காரைக்கால் இடையே கப்பல் போக்குவரத்து தொடங்குவது, ஜோலார்பேட்டையில் ரூ.200 கோடியில் சரக்குப் பெட்டகம் கையாளும் முனையம், ரூ.60 கோடி முதலீட்டில் இந்தியக் கடற்படை உடன் இணைந்து சென்னை துறைமுகத்தில் கப்பல்களை மின்சாரத்தில் இயக்குவதற்கான வசதி உள்ளிட்டவை அடங்கும்.

விருதுகள்

தேசிய தொழில்நுட்ப விருது !!

🔷புதுமையான உள்நாட்டு தொழில்நுட்பங்களை வெற்றிகரமாக விற்பனை செய்ததற்காக, தமிழகத்தை சேர்ந்த 2 நிறுவனங்கள் உட்பட 12 நிறுவனங்கள் தேசிய தொழில்நுட்ப விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன.

🔷உள்நாட்டு தொழில்நுட்பங்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் தொடக்க நிறுவனங்கள் என 3 பிரிவுகளின் கீழ் இந்த நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

🔷ஒவ்வொரு ஆண்டும் இந்த 3 பிரிவுகளில் தொழில்நுட்பங்களை விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு தேசிய தொழில்நுட்ப விருதுகளை வழங்க விண்ணப்பங்களை தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் வரவேற்கிறது.

🔷சந்தையில் புதுமையை கொண்டு வரும் மற்றும் தற்சார்பு இந்தியா தொலை நோக்குக்கு பங்களிக்கும் இந்திய தொழிற்சாலைகள் மற்றும் அவர்களின் தொழில் நுட்ப குழுவினரை அங்கீகரிப்பதற்காக இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

🔷இந்த ஆண்டுக்கான விருது மத்திய அரசின் அ குறு, சிறு, நடுத்தர தொழில் பிரிவில் சென்னையைச்  எஸ்.வி.பி. லேசர் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

🔷இந்நிறுவனத்தின் ஆட்டோ கேம்2டி கேம் மென்பொருள், மற்றும் நகை, பர்னிச்சர் தயாரிப்பில் இந்நிறுவனத்தின் இயந்திர தொழில்நுட்பங்கள் கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்ப்டடுள்ளது.

🔷குறு, சிறு, நடுத்தர தொழில் பிரிவில், தஞ்சாவூரைச் சேர்ந்த அல்ஹல் ஆர் நியூட்ரா பார்ம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனமும் தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்நிறுவனம் நுண் நீர் பாசிகளில் இருந்து டோகோசஹெக்ஸெனோயிக் அமிலம் என்ற ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலத்தை தயாரிக்கும் பசுமை தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது.

🔷இது இதய நோய் மற்றும் மூளை முடக்கு வாதத்தை தடுக்க கூடியது. இது குழந்தைகளின் மூளை செயல்பாடுகளையும் அதிகரிக்கிறது. இது அமெரிக்கா, ஐரோப்பா, கொரியா, பிரான்ஸ் மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

🔷அறிவியல் தொழில்நுட்ப துறையின் கீழ் செயல்படும் தொழில்நுட்ப வளர்ச்சி வாரியத்தால் வழங்கப்பட்டது.


Share Tweet Send
0 Comments
Loading...