சாதனைகள்
தொடர்ந்து 10 நிமிடங்கள் கர்ண பத்மாசனம் செய்து சாதனை..!
💠சென்னையை அடுத்த கும்மிடிப்பூண்டியை சேர்ந்த பெண் தொடர்ந்து 10 நிமிடங்கள் கர்ண பத்மாசனம் செய்து சாதனை படைத்துள்ளார்.
💠8 ஆண்டுகளாக யோகா பயிற்சியாளராக இருந்து வரும் 24 வயதுடைய சந்தியா, உடலை தலைகீழாக வைத்தபடி செய்யும் கர்ண பத்மாசனத்தை தொடர்ந்து 10 நிமிடங்கள் செய்து இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டு மற்றும் நோபல் உலக சாதனை புத்தகங்களில் இடம் பிடித்துள்ளார்.
💠தேசிய மற்றும் சர்வதேச அளவிலான யோகா போட்டிகளில் பங்கு பெற்று வரும் சந்தியா, கடந்த 2010 ஆம் ஆண்டு சிங்கபூரில் நடைபெற்ற காமன்வெல்த் யோகா போட்டில் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
உலகம்
புதிய கொடிய வைரஸ் கண்டுபிடிப்பு - உலக சுகாதார அமைப்பு..!!
💠மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில் முதலாவது மார்பர்க் நோய் உறுதி செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனமான WHO தெரிவித்துள்ளது.
💠எபோலா வைரசுடன் தொடர்புடைய இந்த நோய் வந்தால் இறப்பு விகிதம் 88 சதவிகிதம் வரை இருக்கும் என்பதுடன், இந்த வைரஸ், வவ்வால்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவக்கூடியது என்றும் WHO தெரிவித்துள்ளது. ஏற்கனவே பல ஆப்பிரிக்க நாடுகளில் இந்த வைரஸ் பரவியுள்ளது. ஆனால் முதன் முறையாக மேற்று ஆப்பிரிக்காவில் அதன் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
💠குகை அல்லது சுரங்கங்களில் வசிக்கும் ரவுசெட்டஸ் வகை வவ்வால்களிடம் இருந்து பரவும் மார்பர்க் வைரஸ், மனிதர்களுக்கு இடையே, உடல் திரவங்கள் அல்லது வைரஸ் படிந்த பொருட்கள் வாயிலாக பரவும் என WHO எச்சரிக்கை விடுத்துள்ளது.
💠கினியாவில் இந்த உயிர்க்கொல்லி வைரஸ் அதிகமாக பரவினாலும், அதன் பரவல் உலக அளவில் குறைவாகவே இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
65 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நியான்டெர்த்தல்ஸ் ஆதிமனிதர்களால் தாயாரிக்கப்பட்ட சிவப்புச் சாயம் கண்டுபிடிப்பு..!!
💠ஸ்பெயினின் ஆர்டேல்ஸ் குகைகளில் காணப்படும் குத்தூசிப் பாறைகள் மீது பூசப்பட்டுள்ள சிவப்புச் சாயம், சுமார் 65 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நியான்டெர்த்தல்ஸ் என்னும் ஆதி மனிதர்களால் தயாரிக்கப்பட்டது என்று புதிய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
💠இதன்மூலம், உலகில் முதன்முதலில் கலை படைப்பு செய்த இனம் என்ற அடையாளத்தை நியான்டெர்த்தல்ஸ் இனம் பெற வாய்ப்பிருப்பதாக அமெரிக்காவின் Proceedings of the National Academy of Sciences அறிவியல் பத்திரிக்கையில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
💠இந்த குகைகளில் உள்ள படைப்புகளை உருவாக்கிய நியான்டெர்த்தல்ஸ் இனம் 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அழிந்துபோனதாக கருதப்படுகிறது.
நியமனங்கள்
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக ஆர்.வேல்ராஜ் நியமனம்..!!
💠அண்ணா பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக டாக்டர் ஆர்.வேல்ராஜை நியமித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளார்.
💠துணைவேந்தர் பதவிக்கு நாடு முழுவதும் இருந்து 160-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்த நிலையில், அவற்றிலிருந்து 3 பேரின் பெயர்களை தேடல் குழு ஆளுநருக்கு பரிந்துரைத்தது.
💠இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக தமிழகத்தைச் சேர்ந்த வேல்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் 25 ஆண்டுகளுக்கும் மேலாக அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் வேல்ராஜ், அடுத்த 3 ஆண்டுகளுக்கு துணைவேந்தர் பதவியில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
💠கடந்த முறை சுரப்பா துணைவேந்தராக நியமிக்கப்பட்ட போது, வெளிமாநிலத்தவர் என்று எதிர்ப்பு எழுந்த நிலையில், தற்போது தமிழகத்தைச் சேர்ந்தவரே துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.