தினசரி நடப்பு நிகழ்வுகள் 5.6.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 5.6.2021 (Daily Current Affairs)

உலகம்

ஜப்பானில் 120 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பிறப்பு விகிதம் சரிவு..!!

🔷ஆசிய கண்டத்தில் உள்ள பல நாடுகளில் கடந்த ஆண்டு பிறப்பு விகிதம் சரிவடைந்து உள்ளது. இந்நிலையில், ஆசிய நாடுகளில் ஒன்றான ஜப்பானில் கடந்த ஆண்டில் புதிதாக பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

🔷இதுபற்றி அந்நாட்டு சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த ஆண்டு 8 லட்சத்து 40 ஆயிரத்து 832 குழந்தைகளே பிறந்தன. இது அதற்கு முந்தின ஆண்டை காட்டிலும் 2.8 சதவீதம் குறைவு ஆகும். கடந்த 1899ஆம் ஆண்டில் இருந்து மிக குறைந்த பிறப்பு விகிதம் கொண்டுள்ளது என தெரிவித்து உள்ளது.

🔷இதேபோன்று உலகில் அதிக மக்கள் தொகையை கொண்ட சீனாவில் கடந்த ஆண்டு புதிதாக பிறந்த குழந்தைகளின் விகிதம் 15 சதவீதம் குறைந்துள்ளது. இதனால், தம்பதிகள் 3 குழந்தைகள் வரை பெற்று கொள்ள கடந்த வாரம் அந்நாட்டு அரசு அனுமதி அளித்து அறிவிப்பு வெளியிட்டது.

🔷தென்கொரியாவிலும் பிறப்பு விகிதம் பல ஆண்டுகளாக குறைந்து உள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டில் முதன்முறையாக புதிதாக பிறக்கும் எண்ணிக்கையை விட உயிரிழப்புகள் அதிகம் காணப்பட்டன.

இந்தியா

மினிகிட் திட்டம்..!!

🔷மத்திய வேளாண் அமைச்சரான நரேந்திர சிங் தோமர் அவர்கள் அதிக மகசூல் தரக் கூடிய எண்ணெய் வித்துக்கள் மற்றும் பருப்பு வகைகளின் விதைகள் அடங்கிய சிறு தொகுப்பினை விவசாயிகளுக்கு வழங்கிடுவதற்கான திட்டமான மினிகிட் என்ற ஒரு திட்டத்தினைத் தொடங்கி வைத்தார்.

🔷74000 நிலக்கடலை விதைகளின் சிறுதொகுப்பு மற்றும் 8 லட்சம் அளவிலான சோயா அவரை விதைகளின் சிறுதொகுப்பு மற்றும் 20,27,318 பருப்பு வகை விதைகளின் சிறு தொகுப்பு போன்றவை தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நேரடியாக விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும்.

🔷இந்தச் சிறு தொகுப்புகளானது (மினிகிட்) தேசிய வேளாண் கூட்டுறவுச் சந்தையிடல் கூட்டமைப்பு, தேசிய விதைகள் கூட்டுறவு கழகம் மற்றும் குஜராத் மாநில விதைகள் கழகம் ஆகியவற்றால் வழங்கப்படுகின்றன.

🔷இந்தத் திட்டத்திற்கு தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் அரசு முழு நிதி உதவியினை வழங்குகிறது.

வங்கிகள் வழங்கிய கடன் 6% அதிகரிப்பு..!!

🔷வங்கிகள் வழங்கிய கடன் மே 21-ஆம் தேதியுடன் நிறைவடைந்த இருவார காலத்தில் 5.98 சதவீதம் அதிகரித்துள்ளது.

🔷மே 21-ஆம் தேதியுடன் நிறைவடைந்த இரு வார காலகட்டத்தில் வங்கிகள் வழங்கிய கடன் 5.98 சதவீதம் அதிகரித்து ரூ.108.33 லட்சம் கோடியை எட்டியுள்ளது. அதேபோன்று திரட்டிய டெபாசிட்டுகளும் 9.66 சதவீதம் உயா்ந்து ரூ.151.67 லட்சம் கோடியைத் தொட்டுள்ளது.

🔷முன்னதாக 2020 மே 22-ஆம் தேதியுடன் நிறைவடைந்த இரு வார காலத்தில் வங்கிகள் வழங்கிய கடன் ரூ.102.22 லட்சம் கோடியாக இருந்தது. அதேபோன்று திரட்டிய டெபாசிட்டும் ரூ.138.29 லட்சம் கோடியாக காணப்பட்டது.

🔷மே 7-ஆம் தேதியுடன் முடிவடைந்த இரு வார காலகட்டத்தில் வழங்கிய கடன் 6.02 சதவீதம் அதிகரித்து ரூ.108.69 லட்சம் கோடியாகவும், திரட்டிய டெபாசிட் 9.87 சதவீதம் வளா்ச்சி கண்டு ரூ.152.17 லட்சம் கோடியாகவும் இருந்தன.

🔷கடந்த 2020-21-ஆம் முழு நிதியாண்டில் வங்கிகள் வழங்கிய கடன் 5.56 சதவீதமும், டெபாசிட் 11.4 சதவீதமும் அதிகரித்திருந்ததாக ரிசா்வ் வஙகி புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.

தரவரிசை

பள்ளிக் கல்விக்கான தரவரிசை குறியீடு..!!

🔷கடந்த 2019-20 ஆம் ஆண்டுக்கான தரவரிசை குறியீட்டை மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெளியிட்டுள்ளார்.

🔷கடந்த 2017-18 ஆம் கல்வி ஆண்டில் இருந்து மாநிலங்களின் பள்ளிக் கல்விக்கான தரவரிசை குறியீட்டை ஒவ்வொரு ஆண்டும் மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அதன்படி தற்போது 3வது முறையாக 2019-20 ஆம் ஆண்டுக்கான தரவரிசை குறியீட்டை மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெளியிட்டுள்ளார்.

🔷அதில் தமிழ்நாடு, பஞ்சாப், சண்டிகர், அந்தமான் மற்றும் நிக்கோபார் உள்ளிட்ட மாநிலங்கள் அதிக புள்ளிகளைப் பெற்று தரவரிசை பட்டியலில் உயரிய இடத்தில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மாநிலங்களின் செயல்பாடு அடிப்படையில் தரவரிசை A, A+, A++ என வகைப்படுத்தப்படுகின்றன.

🔷அந்த அடிப்படையில் தமிழ்நாடு, சண்டிகர் உள்ளிட்ட மாநிலங்களின் செயல்பாட்டிற்கு A++ என்ற தர குறியீடு வழங்கப்பட்டுள்ளதாக ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். புதுச்சேரி, மணிப்பூர், அருணாசல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் கடந்த ஆண்டை விட தரவரிசை குறியீட்டில் முன்னேற்றம் அடைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.


Share Tweet Send
0 Comments
Loading...