தினசரி நடப்பு நிகழ்வுகள் 3.7.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 3.7.2021 (Daily Current Affairs)

நியமனங்கள்

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத் தலைவராக பொன்.குமார் நியமனம்..!!

🔷தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தைத் திருத்தியமைத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நலவாரியத் தலைவராக பொன்.குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

🔷"தொழிலாளர்களின் நலன்களைப் பேணிக் காப்பதில், இந்தியாவிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது. அமைப்புசாராத் தொழிலாளர்களுக்குச் சமூகப் பாதுகாப்பு வழங்கும் வகையில், தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர் (வேலை மற்றும் பணி நிலைமைகள் முறைப்படுத்துதல்) சட்டம், 1982ஆம் ஆண்டு இயற்றப்பட்டது.

🔷இச்சட்டத்தின்கீழ், 1994ஆம் ஆண்டு தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியம் அமைக்கப்பட்டது. கடந்த ஐந்தாண்டுகளாகத் திருத்தியமைக்கப்படாத தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருத்தியமைத்து ஆணையிட்டுள்ளார்.

🔷தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில், தற்போது 13,41,494 தொழிலாளர்கள் பதிவுசெய்து பயன்பெற்று வருகின்றனர். இவ்வாரியத்தின் அலுவல் சார்பற்ற உறுப்பினர்களின் பதவிக் காலம் 18.2.2016இல் முடிவடைந்த நிலையிலும், கடந்த 5 ஆண்டுகளாக இவ்வாரியம் திருத்தியமைக்கப்படவில்லை.

தமிழ்நாடு

தமிழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்த சுனாமியை முன்கூட்டியே எச்சரிக்கும் கருவிக்கு காப்புரிமை..!!

🔷தமிழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்த சுனாமியை முன்கூட்டியே அறிந்து எச்சரிக்கும் நிகழ்நேர சுனாமி கண்காணிப்பு கருவிக்கு இந்திய காப்புரிமை கிடைத்துள்ளது.

🔷கடந்த 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி போன்ற பேரழிவை முன்கூட்டிய அறியும் பொருட்டு, தேசிய கடல்சார் தொழில்நுட்பக் கழகத்தைச் சேர்ந்த (NIOT) ரா.வெங்கடேசன் தலைமையில், மா.அருள் முத்தையா, அர.சுந்தர், கி.ரமேஷ் ஆகிய 4 தமிழ் விஞ்ஞானிகள் கொண்ட குழு, கடல் படுகையில் ஏற்படும் நிலநடுக்கத்தின் விளைவாக உருவாகும் சுனாமியைக் கண்டறிய உதவும்மிதவைகளை உருவாக்கியுள்ளனர். இதற்கு இந்திய காப்புரிமை கிடைத்துள்ளது.

🔷இந்தக் கருவி வங்கக் கடல் மற்றும் அரபிக் கடலில் 4 ஆயிரம் மீட்டர் ஆழத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. பல்வேறு நவீன, தனித்துவமான தொழில்நுட்ப அம்சங்கள் இக் கருவியில் உள்ளன. இதன் தரவுத் தொகுப்புகள் செயற்கைக்கோள் மூலம் ஒரே நேரத்தில் என்ஐஓடி தரவு மையம் மற்றும் இன்காய்ஸ்(INCOIS) சுனாமி எச்சரிக்கை மையத்துக்கும் நிகழ்நேரத்தில் சுனாமி பற்றிய தகவல்களை அனுப்புகின்றன.

🔷மேலும் இந்த தரவுத் தொகுப்புகள் மற்றும் சுனாமி எச்சரிக்கை இந்தியாவின் அண்டை நாடுகளுக்கும் பகிரப்படுகின்றன. உலக நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக, இந்தியா சுயசார்புடன் சுனாமிமிதவையை வடிவமைத்து நிறுவியுள்ளது.

🔷இத்தகைய மிதவையைக் கண்டுபிடித்ததற்காக ‘நிகழ்நேர சுனாமி கண்காணிப்பு முறை’ (REAL TIME TSUNAMI MONITORING SYSTEM) என்ற தலைப்பில், அக்குழுவுக்கு இந்திய காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது.

மாநாடுகள்

ஜி - 20 உறுப்பு நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களுக்கான மாநாடு..!!

🔷ஐரோப்பிய நாடான இத்தாலியின் மடேரா பகுதியில், ஜி - 20 உறுப்பு நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களுக்கான மாநாடு நடைபெற்றது. அதில், நம் நாட்டின் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார்.

🔷அந்த மாநாட்டில், மடேரா தீர்மானத்திற்கு, அனைத்து நாடுகளும் ஒப்புதல் அளித்தன. இந்த தீர்மானத்தின்படி சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரிசெய்ய, ஒன்றிணைந்து முயற்சிகளை முன்னெடுக்க முடிவு செய்யப்பட்டது.

🔷மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்து, வறுமையை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க சம்மதம் தெரிவிக்கப்பட்டது. மேலும், 2030ஆம் ஆண்டுக்குள், உலகில் பசி பட்டினியால் ஏற்படும் பஞ்சத்தை ஒழிக்க, அனைத்து அமைச்சர்களும் உறுதி ஏற்றனர்.

கண்டுபிடிப்பு

புதிய ஜம்பிங் சிலந்தி இனங்கள் கண்டுபிடிப்பு..!!

🔷மகாராஷ்டிராவின் தானே - கல்யாண் பகுதியில் குதிக்கும் திறனுடைய சிலந்திகளின் இரண்டு புதிய இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

🔷இவற்றுள் ஒரு இனத்திற்கு துணிச்சல்மிக்க காவல் அதிகாரி துகாராம் ஓம்பிளே என்பவரின் நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது. இவர் 26/11 மும்பை தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தார்.

🔷இந்தச் சிலந்தி இனமானது ‘ஐசியஸ் துகாரமி’ என அழைக்கப் படுகிறது. புதிய உயிரினங்களின் கண்டுபிடிப்பை மேற்கோள் காட்டி இந்த கட்டுரை ரஷ்ய அறிவியல் இதழான ஆந்த்ரோபோடா செலக்டாவில் விஞ்ஞானிகளான துருவ் ஏ.பிரஜபதி, ஜான் காலேப், சோம்நாத் பி.கும்பர் மற்றும் ராஜேஷ் சனப் ஆகியோரால் வெளியிடப்பட்டது.

சாதனைகள்

மகளிர் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் - மிதாலி சாதனை..!!

🔷சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக அதிக ரன்கள் எடுத்த வீராங்கனைகள் வரிசையில் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் சார்லட் எட்வர்ட்ஸை முந்தி இந்திய கேப்டன் மிதாலி ராஜ் சாதனை படைத்துள்ளார்.

🔷முன்னதாக, இங்கிலாந்து கேப்டன் சார்லட் எட்வர்ட்ஸ் 10,273 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் எடுத்த வீராங்கனைகளில் முதலிடம் வகித்திருந்தார். இந்த சாதனையைத்தான் மிதாலி ராஜ் முறியடித்திருக்கிறார்.

🔷சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக 10 ஆயிரம் ரன்களுக்கு மேல் எடுத்த வீராங்கனைகள் இவர்கள் இருவர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.


Share Tweet Send
0 Comments
Loading...