தினசரி நடப்பு நிகழ்வுகள் 23.8.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 23.8.2021 (Daily Current Affairs)

உலகம்

மோகன்லால் - மம்முட்டிக்கு 10 ஆண்டுகளுக்கான கோல்டன் விசா வழங்கி கௌரவித்த ஐக்கிய அரபு அமீரகம்..!

💠பிரபல மலையாள நடிகர்கள் மோகன்லால் மற்றும் மம்மூட்டிக்கு 10 ஆண்டுகளுக்கான கோல்டன் விசாவை வழங்கி ஐக்கிய அரபு அமீரகம் கௌரவித்துள்ளது.

💠இதன் மூலம் அடுத்த பத்து வருடங்களுக்கு எப்போது வேண்டுமானாலும் மம்முட்டி மற்றும மோகன் லால் ஐக்கிய அரபு அமீரகம் சென்று வரலாம். கலை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நீண்ட நாள் வசிக்கவும், தொழில் மேற்கொள்ளவும் ஏதுவாக கோல்டன் விசா வழங்கப்படுகிறது.

💠பிரபல பாலிவுட் நடிகர்கள் ஷாருக் கான், சஞ்சய் தத், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஆகியோர் ஏற்கனவே இந்த கோல்டன் விசாவை பெற்றுள்ள நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஆயுர்வேத மருத்துவரான நஸ்ரின் பேகம் என்பவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன் வழங்கப்பட்டது.

💠இந்நிலையில், முதன்முறையாக மலையாள திரையுலகில் இருந்து மோகன்லால், மம்மூட்டிக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது.

செவ்வாயில் ஆயிரம் மீட்டர் பயணித்து ஜூரோங் ரோவர் புதுமைல்கல்..!!

💠செவ்வாய் கிரகத்திற்கு சீனா அனுப்பிய ஜூரோங் (Zhurong) ரோவர் கிரகத்தின் சுற்றுவட்ட பாதையில் ஆயிரம் மீட்டர் பயணித்து புது மைல்கல் படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

💠ஜூரோங் ரோவர் தன் 90 நாட்கள் பயணத்தை வெற்றிகரமாக முடித்து தரவுகளை சேகரித்துள்ளதாக சீன விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

💠ஜூரோங் ரோவர் நல்ல நிலையில் உள்ளதாகவும் தொடர்ந்து கிரகத்தின் தென்பகுதியான Utopia Planitia-வின் பழங்கால கடல் மற்றும் நிலப்பரப்பிற்கு இடையே ஆய்வு செய்ய நகர்ந்து வருவதாகவும் சீன ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சுற்றுச்சூழல்

ஐரோப்பாவின் மொன்ட்பிளாங்க் மலைத் தொடரில் வரலாறு காணாத அளவுக்கு உருகும் பனிப்பாறைகள்..!!

💠ஐரோப்பாவின் மிகப் பெரிய மலைத் தொடர்களில் ஒன்றான மொன்ட் பிளாங்க்-ல் வரலாறு காணாத அளவுக்கு பனிப் பாறைகள் உருகி வருகின்றன.

💠உலக வெப்பமயமாதல், பருவ நிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் மோசமான நிலை உருவாகி உள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். மேலும் பனிப்பாறைகள் உருகி வருவதால் கடல் நீர் அதிகரித்து அதிவிரைவில் அழிவை சந்திக்க நேரிடும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

💠பிரான்ஸ், இத்தாலி, சுவிட்சர்லாந்து நாடுகளை ஒட்டி உள்ள மலைத் தொடர்களில் அதிகளவில் பனிப் பாறைகள் உருகி வருகின்றன.

இந்தியா

5 ராணுவ பெண் அதிகாரிகளுக்கு கர்னல் அந்தஸ்து..!!

💠இந்திய ராணுவத்தில் 26 ஆண்டுகள் பணி முடித்த 5 பெண் அதிகாரிகளுக்கு ‘கர்னல்’ அந்தஸ்துக்கு பதவி உயர்வு வழங்க ராணுவ தேர்வு வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

💠சங்கீதா சர்டானா, சோனியா ஆனந்த், நவ்நீத் டுக்கால், ரீனு கன்னா, ரிட்சா சாகர் ஆகிய 5 பெண் அதிகாரிகளுக்கு இந்த அந்தஸ்து கிடைத்துள்ளது. இவர்கள் ராணுவத்தில் சிக்னல் படைப்பிரிவு, எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் மெக்கானிக்கல் என்ஜீனியர் படைப்பிரிவு, என்ஜினீயர் படைப்பிரிவு ஆகியவற்றில் பணியாற்றி வருபவர்கள்.

💠இந்த பிரிவுகளில் பணியாற்றும் பெண் அதிகாரிகளுக்கு கர்னல் அந்தஸ்து கிடைப்பது இதுவே முதல்முறை ஆகும்.

இணைய டிஜிட்டல் பணமான கிரிப்டோ கரன்சி பயன்பாட்டில் இந்தியா 2 ஆவது இடம்..!!

💠இணைய டிஜிட்டல் பணமான ‘கிரிப்டோ கரன்சி’ பயன்பாட்டில் இந்தியா 2 ஆவது இடத்தில் உள்ளது.

💠உலக அளவில் ஏராளமான ஆன்லைன் வணிக பரிவர்த்தனைகளுக்கு ‘கிரிப்டோ கரன்சி’ என்கிற டிஜிட்டல் பணம்தான் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. ‘பிட்காயின்’ போன்ற பலவகை டிஜிட்டல் நாணயங்கள் இதில் அடங்கும்.

💠இந்த நிலையில், கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை முதல் இந்த ஆண்டின் கடந்த ஜூன் மாதம் வரையிலான கால கட்டத்தில் கிரிப்டோ கரன்சிகளை அதிகம் பயன்படுத்திய 20 நாடுகளை வரிசைப்படுத்தி கிரிப்டோ பகுப்பாய்வு தளமான ‘செயினாலிசிஸ்’ ஒரு அட்டவணையை வெளியிட்டு உள்ளது. இதில் வியட்நாம் நாடு முதல் இடத்தில் இருக்கிறது.

💠இந்தியா 2 ஆவது இடத்தில் உள்ளது. அண்டை நாடான பாகிஸ்தானுக்கு 3 ஆவது இடம் கிடைத்துள்ளது.

💠பல நாடுகளும் கிரிப்டோ கரன்சியை கையாளுவதால், கடந்த ஆண்டில் கிரிப்டோ கரன்சியின் பயன்பாடு 800 சதவீதம் அதிகரித்து இருப்பதாக செயினாலிசிஸ் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

பொருளாதார வளர்ச்சிக் கழக நிறுவனம் - புதிய அதிபர்..!!

💠15 ஆவது நிதி ஆணையத்தின் தலைவர் N.K. சிங் பொருளாதார வளர்ச்சிக் கழக நிறுவனத்தின் (Institute of Economic Growth Society - IEG) புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

💠1992 ஆம் ஆண்டு முதல் IEG நிறுவனத்தின் தலைவராக இருந்து வந்த முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களையடுத்து இவர் இந்தப் பதவியை ஏற்று உள்ளார்.

💠இது மேம்பட்ட ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்காகப் பயன்படுத்தப்படும் தன்னாட்சி கொண்ட ஒரு பல்துறை மையமாகும்.

💠1952 ஆம் ஆண்டில் VKRV ராவ் என்பவரால் நிறுவப்பட்ட இக்கழகமானது 1958 ஆம் ஆண்டில் தான் செயல்படத் தொடங்கியது.

💠இது புதுடெல்லியிலுள்ள டெல்லி பல்கலைக்கழகத்தின் வளாகத்தினுள் அமைந்து உள்ளது.


Share Tweet Send
0 Comments
Loading...