தினசரி நடப்பு நிகழ்வுகள் 22.7.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 22.7.2021 (Daily Current Affairs)

சாதனைகள்

கனடாவை சேர்ந்த நபர் உலகின் அதிநவீன பிரகாசமிக்க டார்ச் லைட்டை உருவாக்கி சாதனை..!!

🔷கனடாவை சேர்ந்த James Hobson என்பவர் உலகின் அதிபிரகாசமான டார்ச் லைட்டை உருவாக்கி கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

🔷Hacksmith என்ற நிறுவனத்தை சேர்ந்த James Hobson, Nitebrite 300 என்ற பெயரில் 300 எல்.இ.டி. பல்புகளை கொண்டு அதிநவீன மற்றும் அதி பிரகாசமிக்க டார்ச் லைட்டை உருவாக்கி உள்ளார்.

🔷300 எல்.இ.டி. பல்புகளை கொண்டு எரியவிடப்பட்ட டார்ச் லைட் 5 லட்சத்து ஆயிரத்து 31 லியூமன்ஸ் அளவில் பிரகாசித்து அதிக வெளிச்சத்தை வெளிப்படுத்தியது. தனித் தனி போர்ட்டுகளில் 6 எல்.இ.டி. பல்புகளை பொருத்தி, மொத்தம் 50 போர்ட்களில் 300 எல்.இ.டி. பல்புகளை பொருத்தி ஒரே பேட்டரி இணைப்பின் மூலம் ராட்சத டார்ச் லைட்டை உருவாக்கி உள்ளனர்.

🔷சூரிய ஒளியை கொண்டு காகிதங்களை எரியூட்ட எடுக்கும் நேரத்தை காட்டிலும் பன்மடங்கு இந்த டார்ச் லைட் மூலம் அதிவேகத்தில் தீயை உண்டாக்கும் சக்தி கொண்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சர்வதேச விண்வெளி நிலையத்தின் பகுதியுடன் இணைந்த டிராகன் விண்கலம்..!!

🔷ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தின் ஒரு பகுதியுடன் இணைந்தது.

🔷சர்வதேச விண்வெளி நிலையத்தின் ஹார்மோனி தொகுதியின் முன்பகுதியில் இருந்து பிரிந்த டிராகன் விண்கலம் விண்வெளியை நோக்கிய மற்றொரு பகுதியுடன் இணைந்தது. இந்த குழு இரண்டாவது முறையாக பகுதி மாற்றும் சோதனையை நிறைவு செய்துள்ளது.

🔷ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் மூலமாக தேவையான பொருள்களையும் விண்வெளி வீரர்களையும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு நாசா அனுப்பி வருகிறது. தற்போது விண்வெளியில் உள்ள வீரர்கள் நவம்பர் தொடக்கத்தில் பூமிக்கு திரும்பவுள்ளனர்.

சீனப் பனிப்பாறைகளில் கண்டறியப்பட்ட 15,000 ஆண்டுகள் முந்தைய வைரஸ்..!!

🔷சீனாவில் உள்ள திபெத்திய பனிப்பாறைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 15 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வைரஸ்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

🔷ஓஹியோ மாகாண பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் பனிப்பாறைகள் குறித்த ஆராய்ச்சியை மேற்கொண்டிருந்தனர். கடந்த 2015ஆம் ஆண்டு மேற்கு சீனப் பகுதியில் கடல்மட்டத்தில் இருந்து 22 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள பனிப்பாறையின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வந்தன.

🔷ஆய்வுக்காக சேகரிக்கப்பட்ட 2 பனிப்பாறைகளில் 15 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வைரஸ்கள் இருந்தது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. பனிப்பாறைக்குள் நீண்ட காலமாக இருந்ததால் வைரஸ்கள் அழியாமல் இருந்துள்ளது தெரியவந்துள்ளது.

🔷தொடர்ச்சியாக அதிகரித்து வந்த பனி அடுக்குகளில் தூசுக்கள், வாயுக்கள் மற்றும் வைரஸ்கள் புதைந்திருந்ததாக ஆராய்ச்சி குழுவின் தலைமை விஞ்ஞானியும், நுண்ணுயிரியியல் பேராசிரியருமான ஜி பிங் ஜாங் தெரிவித்துள்ளார்.

🔷கண்டறியப்பட்ட வைரஸ்களில் 33 வைரஸ்களுக்கான மரபணு குறியீடுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அவற்றில் 4 ஏற்கெனவே அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

🔷பனிப்பாறைகளில் புதைந்துள்ள வைரஸ்கள் கண்டறியப்பட்டதன் மூலம் வைரஸ்களின் பரிணாம மாற்றம் குறித்து அறிந்துகொள்ள முடியும் என ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது.

🔷மேலும் வைரஸ்கள் சூழலியலின் முக்கிய உயிரியாக இருப்பதால் முந்தைய காலத்தில் நிலவிய சூழலியல் நிலைகள் குறித்த ஆய்வுக்கு உதவியாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா

ஃபேர்டிரேடு என்ற சான்றிதழைப் பெற்ற இந்தியாவின் முதலாவது கூட்டுறவு நிறுவனம்..!!

🔷இன்ட்கோசெர்வ் நிறுவனமானது ஜெர்மனியிலுள்ள FLOCERT என்ற அமைப்பிடமிருந்து ஃபேர்டிரேடு (Fairtrade certification - நியாயமான வர்த்தகம்) என்ற சான்றிதழைப் பெற்ற இந்தியாவின் முதலாவது கூட்டுறவு நிறுவனமாக மாறியுள்ளது.

🔷இன்ட்கோசெர்வ் என்பது நீலகிரியிலுள்ள தேயிலைத் தொழிற்சாலைகளின் தொழில் துறைக் கூட்டுறவின் தலைமை அமைப்பாகும்.

🔷இன்ட்கோசெர்வ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுப்ரியா சாஹூ, முதலமைச்சர் M.K. ஸ்டாலின் அவர்களிடமிருந்து சான்றிதழைப் பெற்றுக்கொண்டார்.

🔷ஃபேர்டிரேடு சான்றிதழ் என்பது சர்வதேச அளவில் புகழ்பெற்ற உற்பத்திப் பொருட்களுக்கான தரச் சான்றிதழ் முறையாகும்.

🔷ஜெர்மனியின் போன் (Bonn) எனும் ஒரு இடத்தினைத் தலைமையகமாகக் கொண்டது ஃபேர்டிரேடு இன்டர்நேசனல் அமைப்பானது 72 நாடுகளில் இயங்கி வருகிறது.

🔷இன்ட்கோசெர்வ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய தேயிலைக் கூட்டுறவு அமைப்பு ஆகும்.


Share Tweet Send
0 Comments
Loading...