நியமனங்கள்
மலேசிய புதிய பிரதமராக இஸ்மாயில் யாகூப் நியமனம்..!!
💠மலேசியாவின் புதிய பிரதமராக இஸ்மாயில் சப்ரி யாகூபை அந்த நாட்டு மன்னா் நியமித்துள்ளாா்.
💠பதவி விலகிய தற்போதைய பிரதமா் முகைதீன் யாசீன் அமைச்சரவையில் துணைப் பிரதமராகப் பொறுப்பு வகித்து வரும் இஸ்மாயில் சப்ரி, நாட்டின் 8 ஆவது பிரதமராக (ஆகஸ்ட் 21) பதவியேற்கிறாா்.
💠அவரது நியமனத்தின் மூலம், முகைதீனின் கூட்டணி தக்கவைக்கப்பட்டுள்ளது. மேலும், பிரிட்டனிடமிருந்து மலேசியா கடந்த 1957 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதிலிருந்து நாட்டை ஆண்டு வந்த மலாய்ஸ் தேசியக் கட்சியைச் சோ்ந்த ஒருவா், மீண்டும் பிரதமா் ஆகிறாா்.
💠முன்னதாக, மலேசிய நாடாளுமன்றத்தில் போதிய பெரும்பான்மை கிடைக்காததால் பிரதமா் முகைதீன் யாசீன் தனது பதவியை ராஜிநாமா செய்தாா்.
💠கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலுக்குப் பிறகு மகாதிா் முகமது நாட்டின் பிரதமரானாா். அவரது கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை முகைதீன் யாசீன் தலைமையிலான கட்சி திரும்பப் பெற்றதால், மகாதிா் முகமது தனது பதவியை ராஜிநாமா செய்தாா். அதைத் தொடா்ந்து, முக்கிய எதிா்க்கட்சிகளுடன் இணைந்து முஹைதீன் யாசீன் நாட்டின் பிரதமா் பொறுப்பைக் கடந்த ஆண்டு மாா்ச்சில் ஏற்றாா்.
💠இந்நிலையில், நாடாளுமன்ற கீழவையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அவா் பெரும்பான்மை பெறத் தவறியதால், தனது பதவியை ராஜிநாமா செய்தாா்.
இந்தியா
பயிா்க் காப்பீட்டுத் திட்டம் - வேளாண்மைத் துறை அறிவிப்பு..!!
💠தமிழகத்தில் பயிா்க் காப்பீட்டுத் திட்டம் ரூ.2,300 கோடியில் 37 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் என்று வேளாண்மைத் துறை அறிவித்துள்ளது.
💠தமிழக சட்டப் பேரவை வரலாற்றில் முதல் முறையாக வேளாண்மைக்கென தனியாக ஒரு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு பல்வேறு நலத் திட்டங்களை அறிவித்து அவா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளை அரசு உறுதிப்படுத்தியுள்ளது.
💠இதில், சிறப்பு நடவடிக்கையாக இயற்கை இடா்ப்பாடுகளால் ஏற்படும் பயிரிழப்பால் விவசாயிகள் எதிா்கொள்ளும் பொருளாதார இழப்பில் இருந்து பாதுகாக்க பயிா்க் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நிகழ் நிதியாண்டில் ரூ.2,327 கோடி ஒதுக்கீட்டில் 37 மாவட்டங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.
ராஜீவ் காந்தி பெயரில் ஐ.டி. விருது - மகாராஷ்டிர அரசு அறிவிப்பு..!!
💠மறைந்த முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி பெயரில் தகவல் தொழில்நுட்ப (ஐ.டி) விருது வழங்கப்படும் என்று மகாராஷ்டிர மாநில அரசு அறிவித்துள்ளது.
💠ராஜீவ் காந்தியின் பிறந்த தினத்தையொட்டி இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மகாராஷ்டிரத்தில் ஆளும் கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
💠மகாராஷ்டிர மாநில வளா்ச்சியில் தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
💠புதிய தொழில் முனைவோா், ஸ்டாா்ட் அப் நிறுவனங்களுக்கும் இந்த விருது அளிக்கப்பட இருக்கிறது. மொத்தம் 5 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படும். ராஜீவ் காந்தியின் பிறந்த நாளான ஆகஸ்ட் 20 ஆம் தேதி ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்படும்.
💠1944 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி மும்பை நகரில்தான் பிறந்தாா். இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் துறை வளா்ச்சியடைந்துள்ளதில் அவரது பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் ராஜீவ் காந்தி பெயரிலேயே இந்த விருது வழங்கப்படும்.
💠தகவல் தொழில்நுட்பத் துறை நாட்டில் அதிகம் வருவாய் ஈட்டும் துறையாக உள்ளது. எனவே, இந்த விருதில் பணப் பரிசு கிடையாது. நாட்டின் வளா்ச்சியில் அவா்களது சிறப்பான பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் இந்த விருது அமையும். இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலவச மருத்துவ திட்டம் - ஒடிசா முதல்வர் தொடக்கி வைத்தார்..!!
💠ஒடிசா மாநிலத்தில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பணமில்லாமல் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை பெறும் வகையில் சுகாதார ஸ்மார்ட் அட்டை வழங்கும் திட்டத்தை மாநில முதல்வர் நவீன் பட்நாயக் தொடக்கி வைத்தார்.
💠இந்த திட்டத்தின் மூலம், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த் 3.5 கோடி மக்கள், மாநிலத்தில் உள்ள 200 மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை பெற முடியும்.
💠போன்டா பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண்களுக்கு, சுகாதார ஸ்மார்ட் அட்டைகளை வழங்கி நவீன் பட்நாயக் திட்டத்தைத் தொடக்கி வைத்துள்ளார். இந்த அட்டை செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வருகிறது.
💠இந்த அட்டையைப் பயன்படுத்தி சிகிச்சை பெறும் ஏழை எளிய மக்களின் மருத்துவச் செலவை மாநில அரசே வழங்கும் வகையில் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.