தரவரிசை
ஐசிசி தரவரிசை மிதாலி ராஜ் மீண்டும் முதலிடம்..!!
🔷ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டுக்கான பேட்டிங் தரவரிசையில் இந்திய கேப்டன் மிதாலி ராஜ் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.
🔷மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் கடைசி 3 ஆட்டங்களைக் கணக்கில் கொண்டு தரவரிசை புதுப்பிக்கப்பட்டது. இதில் பெரிய ஸ்கோரை குவிக்காத காரணத்தினால் மேற்கிந்தியத் தீவுகள் கேப்டன் ஸ்டெஃபானி டெய்லர் 30 புள்ளிகளை இழந்து முதலிடத்தை இழந்தார்.
🔷இதன்மூலம், மிதாலி ராஜ் 762 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார். பேட்டிங் தரவரிசையில் முதன்முதலாக 16 ஆண்டுகளுக்கு முன்பு மிதாலி ராஜ் முதலிடம் பிடித்தார். இவர் முதலிடம் பிடிப்பது தற்போது 9 ஆவது முறையாகும்.
🔷மிதாலி ராஜ் தவிர்த்து இந்திய அணியிலிருந்து ஸ்மிருதி மந்தானா மட்டுமே முதல் 10 இடங்களில் இடம்பெற்றுள்ளார். 701 புள்ளிகளுடன் அவர் 9 ஆவது இடத்தில் இருக்கிறார்.
தமிழ்நாடு
மயிலாடும்பாறை அகழ்வாய்வில் இரும்பு வாள் மற்றும் மண் பானைகள் கண்டெடுப்பு..!!
🔷கிருஷ்ணகிரி மாவட்டம், தொகரப்பள்ளி அருகில் உள்ள மயிலாடும்பாறையில், தொல்லியல் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில் இரும்பு வாள் மற்றும் மண் பானைகளைக் கண்டறிந்துள்ளனர்.
🔷இங்கு பெருங்கற்காலத்தைச் சேர்ந்த, 70 செ.மீ. நீளமுள்ள இரும்பு வாள் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வாள் 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கருதப்படுகிறது.
🔷தமிழகத்தில் கீழடி, கொந்தகை, அகரம், கங்கை கொண்ட சோழபுரம், கொற்கை, மயிலாடும்பாறை, சிவகளை, ஆதிச்சநல்லூர், கொடுமணல், மணலூர் ஆகிய 10 இடங்களில் தற்போது அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தியா
இந்தியாவில் அதிக மின்னல் வெட்டு தாக்குதல் நடந்த மாநிலங்களில் தமிழகம் முதலிடம்..!!
🔷இந்தியாவில் கடந்த ஆண்டில் மட்டும் 1 கோடியே 30 லட்சம் முறை அதிபயங்கர மின்னல் வெட்டு ஏற்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
🔷2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2020 ஆம் ஆண்டில் மின்னல் வெட்டு எண்ணிக்கை 23 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
🔷மின்னல் வெட்டு அதிகம் ஏற்படும் மாநிலங்களில் முதலிடத்தில் தமிழகமும், ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட 10 மாநிலங்கள் அடுத்தடுத்து வரிசைகளில் உள்ளன என்றும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔷மேலும் இந்தியாவிலேயே அதிகபட்சமாக கடந்த ஆண்டில் தமிழகத்தில் மட்டும் ஆயிரத்து 323 முறை அதிபயங்கர மின்னல் வெட்டு தாக்கம் ஏற்பட்டு உள்ளதாகவும், பீகார், உத்தரபிரதேசம், ஜார்கண்ட், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் மின்னல் வெட்டு மூலம் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.