விளையாட்டு
சச்சின் சாதனையை முறியடித்தார் ஆண்டர்சன்..!!
💠சொந்த நாட்டு மண்ணில் அதிக டெஸ்ட் ஆட்டங்களை விளையாடியவர் என்ற சச்சின் டெண்டுல்கர் சாதனையை இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் முறியடித்துள்ளார்.
💠இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான 4 ஆவது டெஸ்ட் ஆட்டம் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு இங்கிலாந்து மண்ணில் இது 95 ஆவது ஆட்டம்.
💠சச்சின் டெண்டுல்கர் இந்திய மண்ணில் 94 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். சொந்த மண்ணில் அதிக ஆட்டங்களில் விளையாடிய வீரர் என்ற சாதனையை அவர் தன்வசம் வைத்திருந்தார்.
💠4 ஆவது டெஸ்ட் ஆட்டத்தில் களமிறங்கியதன் மூலம் சச்சினின் இந்த சாதனையை ஆண்டர்சன் முறியடித்துள்ளார்.
ஒட்டுமொத்த கிரிக்கெட் வரலாற்றில் அதிவிரைவில் 23 ஆயிரம் ரன்கள் கடந்து சாதனை..!!
💠ஒட்டுமொத்த கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 23 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சிறப்பை இந்திய கேப்டன் வீராட் கோலி பெற்றார்.
💠இங்கிலாந்துக்கு எதிரான 4 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்சில் கோலி 50 ரன்கள் அடித்தார். இதன்மூலம் அனைத்து விதமான கிரிக்கெட்டையும் சேர்த்து 490 இன்னிங்சில் விராட் கோலி 23 ஆயிரம் ரன்களை கடந்தார்.
💠இதற்கு முன் இந்திய வீரர் சச்சின் தெண்டுல்கர் 522 இன்னிங்சுகளில் 23 ஆயிரம் ரன்களை கடந்து முதலிடத்தில் இருந்தார்.
பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம்..!!
💠டோக்கியோ பாரா ஒலிம்பிக் உயரந் தாண்டும் போட்டியில் இந்தியாவின் பிரவீன் குமார் ஆசிய சாதனை படைத்ததுடன் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
💠முன்னதாக 2 மீட்டர் ஒரு சென்டிமீட்டர் உயரம் தாண்டியிருந்த அவர் இறுதிப் போட்டியில் 2 மீட்டர் 7 சென்டிமீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் பெற்றார்.
💠பிரிட்டன் வீரர் ஜோனதன் புரூம் எட்வர்ட்ஸ் தங்கப்பதக்கம் பெற்றார்.
மகளிருக்கான 50மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெண்கலப் பதக்கம்..!!
💠டோக்கியோ பாரா ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இரண்டாவது பதக்கமாக வெண்கலம் வென்று அவனி லெகாரா அசத்தியுள்ளார்.
💠மகளிருக்கான 50மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இன்றைய போட்டியில் பங்குபெற்ற இந்தியாவின் அவனி, 445.9 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடம் பிடித்தார். இதன்மூலம் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
💠ஏற்கனவே மகளிர் 10மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை அவனி தங்கப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
💠இதன்மூலம், பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரர்கள் இதுவரை 2 தங்கம், 6 வெள்ளி மற்றும் 4 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 12 பதக்கங்களை வென்றுள்ளனர்.
சாதனைகள்
இங்கிலாந்தின் 140 ஆண்டு டெஸ்ட் வரலாற்றில் ஷர்துல் தாக்குர் நிகழ்த்திய சாதனை..!!
💠முதல்தர கிரிக்கெட்டில் 16 ரன்கள் மட்டுமே பேட்டிங் சராசரியைக் கொண்டுள்ள ஷர்துல் தாக்குர், இங்கிலாந்தில் ஒரு புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார்.
💠இங்கிலாந்தில் குறைந்த பந்துகளில் அரை சதம் எடுத்த பெருமையை இதற்கு முன்பு ஐயன் போத்தம் வைத்திருந்தார். 1986 இல் நியூசிலாந்துக்கு எதிராக 32 பந்துகளில் அரை சதம் எடுத்தார். அந்தச் சாதனையை முறியடித்துள்ளார் ஷர்துல் தாக்குர்.
💠லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் 4 ஆவது டெஸ்டில் 31 பந்துகளில் அரை சதம் எடுத்து புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார். நூறு ஆண்டு வரலாறு கொண்ட இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த பந்துகளில் அரை சதம் எடுத்தவர் என்கிற பெருமையை ஷர்துல் தாக்குர் அடைந்துள்ளார்.
💠மேலும் இங்கிலாந்துக்கு எதிராக குறைந்த பந்துகளில் எடுக்கப்பட்ட அரை சதங்களில் ஷர்துல் தாக்குருக்கு 3 ஆவது இடம். இந்திய வீரர்களில் கபில் தேவ் 1982 இல் 30 பந்துகளில் பாகிஸ்தானுக்கு எதிராக அரை சதம் எடுத்ததே இன்று வரை சாதனையாக உள்ளது. 31 பந்துகளில் அரை சதம் எடுத்த ஷர்துல் தாக்குருக்கு 2 ஆவது இடம்.
தமிழ்நாடு
கப்பலோட்டிய தமிழன் விருது வழங்கப்படும் - முதல்வர் ஸ்டாலின்..!!
💠வ.உ.சிதம்பரனார் பெயரில் ஆண்டுதோறும் கப்பலோட்டிய தமிழன் விருது வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
💠தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இன்றைய கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில், ஆண்டுதோறும் வ.உ.சிதம்பரனார் பெயரில் கப்பலோட்டிய தமிழன் விருது வழங்கப்படும். இவ்விருதுடன் ரொக்க பரிசாக ரூ. 5 லட்சம் வழங்கப்படும்.
💠தூத்துக்குடியில் உள்ள பெரிய காட்டன் சாலை வ.உ.சி. சாலை என பெயர் மாற்றப்படும். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வ.உ.சி. பெயரில் புதிய ஆய்வறிக்கை வெளியிடப்படும். மேலும், அவரது நினைவு நாளான நவம்பர் 18ஆம் தேதி தியாக திருநாளாக கொண்டாடப்படும் எனத் தெரிவித்தார்.