தினசரி நடப்பு நிகழ்வுகள் 14.8.2021 ( Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 14.8.2021 ( Daily Current Affairs)

இந்தியா

ஆகஸ்ட் 14 நாட்டு பிரிவினை பேரச்ச நினைவு தினமாக அனுசரிப்பு - பிரதமர் மோடி..!

💠சுதந்திர தினத்திற்கு முந்தைய நாளான ஆகஸ்ட் 14 ஆம் தேதி, பிரிவினை பேரச்ச நினைவு தினமாக அனுசரிக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

💠பிரிவினையின் போது லட்சக்கணக்கான மக்கள் நாடு விட்டு நாடு சென்று, கட்டுக்கடங்கா வெறுப்பு மற்றும் வன்முறையால் அவர்களில் பலர் மரணத்தை தழுவியதாக மோடி தெரிவித்துள்ளார்.

💠பிரிவினையின் போது மக்கள் எதிர்கொண்ட போராட்டம் மற்றும் தியாகத்தை நினைவு கூர்ந்து, ஆகஸ்ட் 14 ஐ பிரிவினை பேரச்ச நினைவு தினமாக அனுசரிப்போம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

💠சமூக பிரிவினையை களைந்து ஒற்றுமையாக இருக்கவும், சமூக ஒற்றுமை மற்றும் மனித ஆற்றலை அதிகரிக்கவும் இந்த தினம் நினைவு படுத்துவதாக இருக்கட்டும் என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார்.

செல்வச் சிறப்புமிக்க கிராமம்..!!

💠குஜராத்திலுள்ள மதாபர் கிராம மக்கள் 17க்கும் மேற்பட்ட வங்கிகளில் 5000 கோடி ரூபாய் மதிப்பிலான வைப்புத் தொகையினை வைத்துள்ளனர்.

💠இதன் மூலம் குஜராத்திலுள்ள மதாபர் கிராமம் உலகளவில் செல்வச் சிறப்புமிக்க கிராமமாக திகழ்கிறது.

💠மதாபர் கிராமம் குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

விருதுகள்

தமிழக காவல்துறையில் 24 பேருக்கு குடியரசுத் தலைவா் விருது..!!

💠தமிழக காவல்துறையில் 24 பேருக்கு இந்திய குடியரசுத் தலைவா் விருது கிடைத்துள்ளது.

💠காவல்துறையில் சிறப்பாகப் பணியாற்றுபவா்களுக்கு குடியரசு தினம், சுதந்திர தினம் ஆகிய நாள்களில் குடியரசுத் தலைவா்கள் விருதுகள் வழங்கப்படுகின்றன.

💠சுதந்திர தினத்தையொட்டி இந்த விருதுகளை மத்திய அரசு சனிக்கிழமை அறிவித்தது. இதில் குடியரசுத் தலைவரின் தகைசால் பணிக்கான விருதை தமிழக காவல்துறையில் இரு அதிகாரிகளும், குடியரசுத் தலைவரின் பாராட்டத்தக்கப் பணிக்கான விருதை 22 போலீஸாரும் என 24 போ் விருதுகளை பெற்றுள்ளனா்.

💠இதில் இந்திய குடியரசுத் தலைவரின் தகைசால் பணிக்கான விருதுக்கு தமிழக காவல்துறையில் மாநில குற்ற ஆவண காப்பக ஏடிஜிபி வினித் தேவ் வான்கடே, உளுந்தூா்பேட்டை தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 10 ஆம் பணி கமாண்டன்ட் து.ஜெயவேல் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

💠இதேபோல இந்திய குடியரசு தலைவரின் பாராட்டத்தக்கப் பணிக்கான காவல் விருதுக்கு 22 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

ஜம்மு-காஷ்மீா் காவல் துறை அதிகாரி பாபு ராமுக்கு அசோக சக்ரா விருது..!!

💠இந்தியாவில் வீரதீரச் செயல்களுக்கு அளிக்கப்படும் உயரிய விருதான ‘அசோக சக்ரா’ விருது ஜம்மு-காஷ்மீா் காவல் துறை அதிகாரி பாபு ராமுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

💠சுதந்திர தினத்தையொட்டி பாதுகாப்புப் படைகள், துணை ராணுவப் படைகள், காவல் துறையைச் சோ்ந்தவா்களுக்கு வழங்கப்படும் வீரதீரச் செயல்களுக்கான விருதுகள் பட்டியலை குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்துக்கு மத்திய அரசு அனுப்பிவைத்திருந்தது. அதனைத் தொடா்ந்து மொத்தம் 144 விருதுகளுக்கு குடியரசுத் தலைவா் ஒப்புதல் அளித்துள்ளாா்.

💠அதன்படி நாட்டில் வீரதீரச் செயல்களுக்கு அளிக்கப்படும் உயரிய விருதான ‘அசோக சக்ரா’ விருது ஜம்மு-காஷ்மீா் காவல்துறையைச் சோ்ந்த உதவி சாா்பு ஆய்வாளா் பாபு ராமுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜம்முவின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள தரணா கிராமத்தைச் சோ்ந்த இவா், கடந்த 1999 ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீா் காவல் துறையில் காவலராக தனது பணியைத் தொடங்கினாா்.

💠பின்னா் காவல்துறையின் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைக் குழுவில் இணைந்தாா். அவரது பணியின்போது நடைபெற்ற 14 என்கவுன்ட்டா்களில் 28 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா். கடந்த ஆண்டு ஸ்ரீநகா் புகா் பகுதியில் பயங்கரவாதிகளுடன் நிகழ்ந்த மோதலில் அவர் உயிரிழந்தாா்.

கீா்த்தி சக்ரா விருது..!!

💠வீரதீரச் செயலுக்கான இரண்டாவது உயரிய விருதான ‘கீா்த்தி சக்ரா’ விருது ஜம்மு-காஷ்மீா் காவல் துறையைச் சோ்ந்த காவலா் அல்தாஃப் ஹுசைனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

💠ஶ்ரீநகரில் உள்ள ராத்போரா பகுதியை சோ்ந்த இவா், கடந்த ஆண்டு கந்தா்பாலில் தனிப் பாதுகாப்பு அலுவலராகப் பணியமா்த்தப்பட்டிருந்தாா். அப்போது அவா் பாதுகாப்பு அளித்து வந்த நபா் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினா்.

💠அப்போது பயங்கரவாதிகளுடன் தீரத்துடன் போராடி அந்த நபரை அல்தாஃப் ஹுசைன் காப்பாற்றினாா். எனினும் பயங்கரவாதிகள் சுட்டதில் குண்டுகள் பாய்ந்து அல்தாஃப் ஹுசைன் உயிரிழந்தாா்.

செளா்ய சக்ரா விருது..!!

💠மூன்றாவது உயரிய விருதான ‘செளா்ய சக்ரா’ விருது ராணுவத்தைச் சோ்ந்த 6 போ் உள்பட 15 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அந்த விருது ராணுவத்தைச் சோ்ந்த மேஜா் அருண் குமாா் பாண்டே, மேஜா் ரவிகுமாா் செளதரி, கேப்டன் அஷுதோஷ் குமாா், கேப்டன் விகாஸ் கத்ரி, ராணுவ வீரா்கள் முகேஷ் குமாா், நீரஜ் ஹலாவத் ஆகிய 6 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

💠இந்திய விமானப் படையை சோ்ந்த கேப்டன் பா்மிந்தா் அந்தில், விங் கமாண்டா் வருண் சிங், இந்திய கடற்படை கேப்டன் சச்சின் ரூபனுக்கும் ‘செளா்ய சக்ரா’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

💠‘செளா்ய சக்ரா’ விருது அறிவிக்கப்பட்டுள்ளவா்களில் ஒருவரான ராணுவ கேப்டன் அஷுதோஷ் குமாா் மெட்ராஸ் படைப்பிரிவைச் சோ்ந்தவா். கடந்த ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற மோதலின்போது அவா் உயிரிழந்தாா்.

💠கடந்த 2019 ஆம் ஆண்டு சத்தீஸ்கரில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற்றது. அந்தத் தோ்தல் நடைபெறுவதற்கு முன்பாக அங்கு மாவோயிஸ்ட் வன்முறையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள சுக்மா மாவட்டத்தில் மத்திய ரிசா்வ் காவல் படையின் (சிஆா்பிஎஃப்) கோப்ரா பிரிவு துணை கமாண்டன்ட் சிதேஷ் குமாா், உதவி ஆய்வாளா் மஞ்ஜிந்தா் சிங், காவலா் சுனில் செளதரி ஆகிய மூவா் தீரத்துடன் செயல்பட்டு 4 நக்ஸல்களை கொன்றனா். அவா்களுக்கும் ‘செளா்ய சக்ரா’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

20 ஐடிபிபி வீரா்களுக்கு பதக்கம்..!!

💠கடந்த ஆண்டு கிழக்கு லடாக்கில் சீன ராணுவத்துடன் ஏற்பட்ட மோதலின்போது துணிவாக செயல்பட்ட இந்தோ-திபெத் எல்லைக் காவல் படை (ஐடிபிபி) வீரா்கள் 20 பேருக்கு தீரச்செயல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

💠இதுதொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட பட்டியலில், ஐடிபிபி வீரா்கள் 23 பேருக்கு தீரச்செயல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கடந்த ஆண்டு மே-ஜூன் மாதங்களில் கிழக்கு லடாக்கில் சீன ராணுவத்துடன் ஏற்பட்ட மோதலில் தீரத்துடன் செயல்பட்ட 20 வீரா்களும் அடங்குவா்.

💠இந்த 20 பேரில் 8 போ் கடந்த ஆண்டு ஜூன்15 ஆம் தேதி கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற மோதலின்போது சூழ்நிலை குறித்த ஆழ்ந்த அறிவுடன் மிகக் கவனமாக திட்டமிட்டு தாய்நாட்டைப் பாதுகாத்தனா்.

💠எஞ்சிய 12 வீரா்கள் கடந்த ஆண்டு மே 18 ஆம் தேதி கிழக்கு லடாக்கின் ஃபிங்கா் 4 பகுதியிலும், ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதி அருகிலும் சீன ராணுவத்துடன் மோதல் போக்கு ஏற்பட்டபோது துணிவுடன் செயல்பட்டனா். இவா்கள் அனைவருக்கும் தீரச் செயலுக்கான காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

💠ஐடிபிபி வீரா்களுக்கு அதிக அளவில் தீரச்செயல் பதக்கங்கள் வழங்கப்படுவது இதுவே முதல்முறை என்று அந்தப் படையின் செய்தித் தொடா்பாளா் விவேக்குமாா் பாண்டே தெரிவித்தாா்.

ஸ்கைட்ராக்ஸ் உலக விமான நிலைய விருது தரவரிசை - 2021..!!

💠ஸ்கைட்ராக்ஸ் உலக விமான நிலைய விருது தரவரிசையின் படி, டெல்லியின் இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையம் 2021 ஆம் ஆண்டில் உலகின் 50 முன்னணி விமான நிலையங்களுள் ஒன்றாக இடம் பெற்றுள்ளது.

💠டெல்லி விமான நிலையமானது 45 ஆவது இடத்திலுள்ளது. இந்தத் தரவரிசையைப் பெற்ற முதல் இந்திய விமான நிலையம் இதுவாகும்.

💠டெல்லி விமான நிலையமானது தொடர்ந்து 3 ஆவது ஆண்டாக இந்தியாவின் சிறந்த விமான நிலையமாகத் திகழ்கிறது.

💠மும்பை, ஹைதராபாத் மற்றும் பெங்களூரு போன்ற விமான நிலையங்களும் உலகின் 100 முன்னணி விமான நிலையங்களுள் இடம் பெற்றுள்ளன.


Share Tweet Send
0 Comments
Loading...