இந்தியா
பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்டம் - 15.30 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் விநியோகம்..!
🔷 பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்ட 4 ஆம் கட்டத்தின் கீழ் இதுவரை தமிழகம் உள்பட 31 மாநிலங்களுக்கு 15.30 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
🔷இந்தத் திட்டத்தின் 4 ஆம் கட்டம் இவ்வாண்டு நவம்பா் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டத்தின் கீழ் விநியோகிக்க 198.79 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. அதில் கடந்த 12 ஆம் தேதி வரை தமிழகம் உள்பட 31 மாநிலங்களுக்கு 15.30 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
🔷இந்த ஆண்டு மே மாதம் முதல் நவம்பா் மாதம் வரை மாதந்தோறும் 5 கிலோ உணவு தானியங்களை 80 கோடிக்கும் அதிகமானவா்களுக்கு இலவசமாக வழங்க மத்திய அரசு ரூ.93,869 கோடி செலவிடவுள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு
முதல்முறையாக 211 போட்டியாளர்களை ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்பும் நியூசிலாந்து..!!
🔷டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் 211 போ் கொண்ட நியூசிலாந்து அணி பங்கேற்கிறது.
🔷ஒலிம்பிக்ஸ் போட்டிக்காக இத்தனை போ் கொண்ட அணியை நியூசிலாந்து அனுப்புவது இது முதல் முறையாகும்.
🔷டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டி வரும் 23 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை டோக்கியோவில் நடைபெறவுள்ளது.
🔷இந்தப் போட்டியில் 22 விளையாட்டுகளில் நியூசிலாந்து அணியின் 211 போட்டியாளர்கள் பங்கேற்கிறார்கள். இவர்களில் 101 பேர் வீராங்கனைகள். 211 பேரில் 118 பேர் ஒலிம்பிக்ஸுக்கு அறிமுகமாகிறார்கள்.
உலக பாட்மிண்டன் 2026 இல் இந்தியா நடத்துகிறது..!!
🔷2026 ஆம் ஆண்டு உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியை இந்தியா நடத்தும் என உலக பாட்மிண்டன் சம்மேளனம் அறிவித்தது.
🔷முன்னதாக, 2023 இல் சுதிர்மான் கோப்பை போட்டியை இந்தியா ஒருங்கிணைக்க இருந்த நிலையில், அந்தப் போட்டியை ஒருங்கிணைக்கும் பொறுப்பை சீனாவிடம் ஒப்படைத்தது உலக பாட்மிண்டன் சம்மேளனம். நடப்பாண்டில் சீனாவில் நடைபெற இருந்த சுதிர்மான் கோப்பை போட்டி, தற்போது ஃபின்லாந்தில் நடைபெறவுள்ளது.
🔷உலக சாம்பியன்ஷிப் போட்டியை இந்தியா நடத்துவது இது 2 ஆவது முறையாகும். முன்னதாக 2009 இல் ஹைதராபாதில் அந்தப் போட்டியை இந்தியா ஒருங்கிணைத்துள்ளது.
மத்திய அமைச்சரவை ஒப்புதல்
சுகாதாரத் துறையில் டென்மாா்க் உடன் ஒப்பந்தம் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!!
🔷இந்தியாவும் டென்மாா்க்கும் மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறையில் ஒத்துழைப்புடன் செயல்படும் வகையில் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
🔷இந்த ஒப்பந்தப்படி, இந்திய அரசின் சுகாதார அமைச்சகமும், டென்மாா்க் அரசின் சுகாதார அமைச்சகமும் சுகாதாரத் துறையில் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் இணைந்து செயல்படும். இதனால், இரு நாட்டு மக்களின் சுகாதாரம் மேம்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கால்நடைத் துறையில் திட்டங்கள் ஒருங்கிணைப்பு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!!
🔷கால்நடை மற்றும் பால்வளத் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் அனைத்துத் திட்டங்களையும் 3 பிரிவுகளாக ஒருங்கிணைக்க பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
🔷கால்நடைத் துறையில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு மொத்தம் ரூ.54,618 கோடி நிதியை மத்திய அரசு செலவிடவுள்ளது.
🔷இந்தத் துறையில் சுமாா் 10 கோடி விவசாயிகள் ஈடுபடுத்தப்படுவா். இதன்மூலம் கால்நடைத் துறையின் வருமானம் பன்மடங்கு அதிகரிக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆயுஷ் திட்டம், மத்திய அரசின் திட்டமாக தொடரும் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!!
🔷தேசிய ஆயுஷ் திட்டம், வரும் 2026 ஆம் ஆண்டு மாா்ச் 31 ஆம் தேதி வரை, அடுத்த 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசின் நிதியுடன் செயல்படுத்தப்படும்.
🔷இந்தத் திட்டத்துக்காக ரூ.4,607.30 கோடி (மத்திய அரசின் பங்கு ரூ.3,000 கோடி, மாநில அரசின் பங்கு ரூ.1,607.30 கோடி) செலவிடப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் பாரம்பரிய மருத்துவ முறைகள் மேம்படுத்தப்படும். ஆயுஷ் நல மையங்கள், மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள், மருந்தகங்கள் மேம்படுத்தப்படும்.
🔷மேலும், ‘வடகிழக்கு பாரம்பரிய மருத்துவக் கல்வி நிறுவனம்’ என்ற பெயரை ‘வடகிழக்கு ஆயுா்வேதம் மற்றும் பாரம்பரிய மருத்துவக் கல்வி நிறுவனம்’ என்று மாற்றுவதற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.