சாதனைகள்
சீன பெண் ஒருவர் 8 அங்குல நீள கண் இமைகளுடன் 5 ஆண்டுகளுக்கு பின் சொந்த சாதனையை முறியடித்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்து உள்ளார்.
🔷மிக நீண்ட கண் இமைகளை வளர்த்து சீனாவை சேர்ந்த யூ ஜியாங்சியா என்ற பெண் கின்னஸ் சாதனை படைத்து உள்ளார்.
🔷அவரது இமைகளின் மொத்த நீளம் 8 அங்குலம் ஆகும். கடந்த 2016ஆம் ஆண்டில் ஏற்படுத்திய சொந்த சாதனையை அவர் முறியடித்து உள்ளார்.
உலகம்
பால்வெளி மண்டலத்தில் மின்னும் புதிய நட்சத்திரம் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
🔷சிலி நாட்டிலுள்ள விஸ்டா என்ற தொலைநோக்கி கொண்டு நடத்தபட்ட ஆய்வில் இந்த VVV-WIT-08 என்ற நட்சத்திரத்தைக் கண்டறிந்தனர். ஏறத்தாழ 25 ஆயிரம் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் இருக்கும் இந்த நட்சத்திரம் அவ்வப்போது மிகவும் பிரகாசமாக ஒளிர்வதைக் கண்டுபிடித்துள்ளனர்.
🔷துணைக் கோள் ஒன்றினை இந்த நட்சத்திரம் சுற்றி வருவதால் அந்தத் துணைக் கோளிடமிருந்து வெளிச்சத்தை உள்வாங்கி, பின்னர் வெளியிடும் தன்மையை VVV-WIT-08 நட்சத்திரம் பெற்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
🔷இதன் அருகிலேயே சூரியனை விட 100 மடங்கு பெரிதான மற்றொரு நட்சத்திரம் இருப்பதைக் கண்டுபிடித்துள்ள விஞ்ஞானிகள் அது குறித்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.
இஸ்ரேலில் 1000 ஆண்டுகள் பழமையான உடையாத கோழி முட்டை கண்டெடுப்பு..!!
🔷யவ்னே (Yavne ) நகரில் நடந்த அகழாய்வின்போது கழிவுநீர் தொட்டியிலிருந்து தொல்பொருள் ஆய்வாளர்கள் இந்த கோழி முட்டையை எடுத்துள்ளனர்.
🔷இந்த முட்டை இத்தனை ஆண்டுகளாக கெட்டு போகாமலும், சேதம் அடையாமலும் இருப்பது ஆய்வாளர்களுக்கே ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது. முட்டையின் ஓட்டை வைத்து அதன் பழமையை கண்டுபிடித்த ஆய்வாளர்கள், முட்டையின் அடிப்பகுதியில் லேசான விரிசல் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கின்றனர்.
🔷கழிவுநீர் தொட்டியிலிருந்து முட்டையுடன், பழங்கால பொம்மைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
காவல்துறை அதிகாரியால் ஜார்ஜ் பிளாய்ட் கொல்லப்பட்டபோது அதனை வீடியோ எடுத்த பெண்ணுக்கு புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
🔷அமெரிக்காவின் மின்னசொட்டா மாகாணத்தில் உள்ள மினியபொலிஸ் நகரில், கடந்த 2020-ஆம் ஆண்டு மே 25 ஆம் தேதி கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்ட், சாலையில் வைத்து டெரிக் சாவின் என்ற காவல்துறை அதிகாரியால் கழுத்தில் அழுத்தப்பட்டு கொல்லப்பட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி அமெரிக்காவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
🔷இதனை வீடியோவாக பதிவு செய்தவர் டார்னெல்லா ஃபிரேசியர் என்ற இளம்பெண். அப்போது அவருக்கு வயது 17. ஜார்ஜ் பிளாய்டின் கொலை வெளி உலகிற்கு தெரிய அந்த வீடியோ தான் மிக முக்கியமான காரணம் ஆகும்.
🔷உலகம் முழுவதும் பரவிய வீடியோவால், இந்த சம்பவத்திற்கு பல்வேறு நாட்டு மக்கள் தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர். மேலும் ‘பிளாக் லைவ்ஸ் மேட்டர்’ (Black Lives Matter) என்ற பெயரில், கருப்பினத்தவர்கள் மீது நடத்தப்படும் வன்முறைக்கு எதிராக அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் போராட்டம் வெடித்தது.
🔷இதனை தொடர்ந்து போலீஸ் அதிகாரி டெரிக் சாவின் பணி நீக்கம் செய்யப்பட்டார். அவர் மீது விசாரணைகள் நடத்தப்பட்டு சிறை தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த வீடியோவை பதிவு செய்த இளம்பெண் டார்னெல்லா ஃபிரேசியருக்கு உலகின் உயரிய கவுரவம் என கருதப்படும் புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
🔷புலிட்சர் விருது 1917 ஆம் ஆண்டு முதல் ஊடகம், இலக்கியம், இசை ஆகிய துறைகளுக்கு வழங்கப்படுகிறது. அந்த வகையில் டார்னெல்லா ஃபிரேசியர் ஊடக பிரிவில் புலிட்சர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்தியா
6 முதல் 14 வயதுக்கு உட்பட்ட பள்ளி செல்லா குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் திட்டம் - மத்திய அரசு தொடங்கியது..!!
🔷6 வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து பள்ளியில் சேர்க்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய கல்வி மந்திரி ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார்.
🔷நாட்டின் ஒவ்வொரு குழந்தையின் மீதும் அக்கறை செலுத்துவதுதான் மத்திய அரசின் முன்னுரிமை பணி. எனவே, ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தில் பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து, அவர்களை பற்றிய விவரங்களை ‘பிரபந்த்’ இணையதளத்தில் தொகுக்க ஆன்லைன் பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
🔷6 முதல் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளாக இருந்தால், அவர்களது கற்றல் இடைவெளியை சரிசெய்ய சிறப்பு பயிற்சி மையங்கள் மூலம் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். பிறகு அவர்கள் பள்ளியில் சேர்த்து விடப்படுவார்கள். இதற்காக ‘சமக்ரா சிக்ஷா’ திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.