தினசரி நடப்பு நிகழ்வுகள் 1.6.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 1.6.2021 (Daily Current Affairs)

சாதனைகள்

மராட்டிய மாநிலத்தில் ஒரே நாளில் 39.69 கி.மீ. சாலை அமைத்து சாதனை..!!

🔷சத்தாரா மாவட்டத்தில் ஒரே நாளில் 39.69 கி.மீ. சாலை போட்டு சாதனை படைத்து உள்ளதாக பொதுப்பணித்துறை மந்திரி அசோக் சவான் கூறினார்.

🔷மராட்டிய மாநிலம் சத்தாரா மாவட்டத்தில் பொதுப்பணித்துறை சார்பில் சாலை போடும் பணிகள் நடந்து வந்தது. இதில் அவர்கள் 24 மணி நேரத்தில் 39.69 கி.மீ. தூரம் சாலை போட்டு சாதனை படைத்து உள்ளதாக பொதுப்பணித்துறை மந்திரி அசோக் சவான் கூறியுள்ளார்.

🔷இதுகுறித்து அவர் டுவிட்டர் பதிவில், ‘‘சத்தாரா மாவட்டத்தில் பால்தன் முதல் மகாசுர்னே வரை 39.69 கி.மீ. தூரத்துக்கு தரமான கான்கிரீட் சாலை 24 மணி நேரத்தில் போடப்பட்டு உள்ளது. இது மாநில பொதுப்பணித்துறையினரின் சாதனையாகும். இந்த சாதனை லிம்கா புத்தகத்தில் இடம்பிடித்து உள்ளது’’ என்று தெரிவித்து உள்ளார்.

🔷மேலும் மந்திரி அசோக் சவான் சாதனை படைத்த பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்து உள்ளார். இதேபோல மாநில பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, சாலை போடும் பணி கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி, திங்கட்கிழமை காலை 7 மணிக்கு முடிந்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது.

விளையாட்டு

ஆசிய குத்துச்சண்டை - தங்கம் வென்ற இந்திய வீரர் சஞ்சீத்..!!

🔷துபையில் நடைபெற்ற ஆசிய குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் சஞ்சீத் தங்கம் வென்றுள்ளார்.

🔷ஆசிய குத்துச்சண்டை போட்டி தில்லியில் மே 21 முதல் 31 வரை நடைபெறுவதாக இருந்தது. எனினும் இந்தியாவில் கரோனா பரவல் அதிகமாக உள்ளதால் ஆசிய குத்துச்சண்டை போட்டி டெல்லியில் நடைபெறுவதற்குப் பதிலாக துபையில் நடைபெற்றது.

🔷ஆடவர் 91 கிலோ பிரிவின் இறுதிச்சுற்றில் இந்தியாவின் சஞ்சீத், 2016 ஒலிம்பிக்ஸில் வெள்ளிப் பதக்கம் வென்ற கஸகஸ்தானின் வாஸ்ஸில்லி லெவிட்டை 4-1 என்கிற புள்ளிக் கணக்கில் தோற்கடித்து தங்கம் வென்றுள்ளார்.

🔷இதற்கு முன்பு டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ள இந்தியாவின் பூஜா ராணி, மகளிர் 75 கிலோ பிரிவில் தங்கம் வென்றார்.

🔷இதையடுத்து ஆசிய குத்துச்சண்டை போட்டியில் இந்திய அணி இரு தங்கங்கள் உள்பட 15 பதக்கங்களை வென்றுள்ளது. இதற்கு முன்பு 2019-இல் பாங்காங்கில் நடைபெற்ற ஆசிய குத்துச்சண்டை போட்டியில் இந்திய அணி 13 பதக்கங்களை வென்றது. இந்தமுறை எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகப் பதக்கங்களை இந்திய அணி வென்றுள்ளது.

சுற்றுச்சூழல்

60 ஆண்டுகளுக்கு பிறகு அதிக கோடை மழை: கேரளா 5 ஆவது சாதனை..!!

🔷கேரளாவில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. கேரளாவில் வழக்கமாக ஜூன் 1ஆம் தேதி தொடங்கும் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு நாளை தான் தொடங்கும் என மத்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

🔷இதற்கிடையே ஆலப்புழா, பத்தனம்திட்டா, கொல்லம் மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்யும் என்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இடி, மின்னல் மற்றும் சூறைக்காற்றுக்கு வாய்ப்புள்ளது. மணிக்கு 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், கேரள கடலில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

🔷இந்நிலையில், கடவுளின் பூமி என அழைக்கப்படும் கேரளாவில் வருணன் கருணை, இந்த கோடையில் அதிகமாக மழை கிடைத்துள்ளது. இம்மாநில வரலாற்றில் மிக அதிகளவில் பொழிந்த 5ஆவது கோடை மழை இம்முறை கிடைத்துள்ளது. மார்ச் 1 முதல் மே 31 வரை சராசரியாக 362.50 மி.மீ மழை பொழிவு இருக்க வேண்டும். ஆனால், தற்போது 750.90 மி.மீ மழை பெய்துள்ளது.

🔷இது, 108 சதவீதம் அதிகமாகும். இதற்கு முன்பு கடந்த 1933இல் 915.20 மி.மீ, 1960இல் 791 மி.மீ, 1932இல் 788 மி.மீ மற்றும் 1918இல் 767 மி.மீட்டரும் கோடை மழை கிடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு கேரளாவில் 386 மி.மீ மற்றும் 2018இல் 521.8 மி.மீட்டரும் கோடை மழையும் பெய்திருந்தது.

விளையாட்டு

மும்பை அணியின் பயிற்சியாளராக அமோல் முசும்தார் தேர்வு..!!

🔷மும்பை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக அமோல் முசும்தார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

🔷முன்னாள் வீரர்கள் வாசிம் ஜாஃபர், சைராஜ் பஹுதுலே, அமோல் முசும்தார் போன்ற பலரும் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்து இருந்தார்கள். இந்நிலையில் மும்பை கிரிக்கெட் சங்கம் அமோல் முசும்தாரை மும்பை அணியின் பயிற்சியாளராகத் தேர்வு செய்துள்ளது.

🔷ரஞ்சி கோப்பையை 41 முறை வென்று சாதனை படைத்த மும்பை அணி, 2015-16-க்குப் பிறகு ரஞ்சி கோப்பையை வெல்லவில்லை. இதனால் ரஞ்சி கோப்பையை வெல்வதே முதல் லட்சியமாக இருக்கும் என முசும்தார் கூறியுள்ளார்.

🔷ஐபிஎல் போட்டியில் கடந்த மூன்று வருடங்களாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பேட்டிங் ஆலோசகராகவும் 2019-இல் இந்தியாவில் டெஸ்ட் தொடரில் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணியின் பேட்டிங் பயிற்சியாளராகவும் முசும் தார் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

இந்தியா

வங்கிகள் கிரிப்டோகரன்சி வாயிலான வர்த்தகத்தை அனுமதிக்கலாம்-ஆர்பிஐ..!!

🔷வங்கிகள் கிரிப்டோகரன்சி வர்த்தகத்தை அனுமதிக்ககூடாது என்ற 2018 ஆண்டு சட்டத்தை நீக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளதால் அந்த வர்த்தகத்தில் ஈடுபடுவோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

🔷கிரிப்டோகரன்சி வர்த்தகம் தொடர்பான நடவடிக்கைகளை அனுமதிக்ககூடாது என சட்டத்தை அகற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், வங்கிகள் இனி தாராளமாக அதை அனுமதிக்கலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

🔷இந்தியாவின் மிகப்பெரிய கிரெடிட் கார்டு நிறுவனங்களில் ஒன்றான எஸ்பிஐ கார்டு, எச்டிஎப்சி வங்கி ஆகியன கிரிப்டோகரன்சிகளை அனுமதிக்க மாட்டோம் என தங்களது வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்திய நிலையில் ரிசர்வ் வங்கி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

🔷கிரிப்டோகரன்சியை ஊக்குவித்தால், சட்டவிரோத பணப்பரிமாற்றம், தீவிரவாத நடவடிக்கைகள் உள்ளிட்டவை உருவாகும் என புலனாய்வு அமைப்புகள் தெரிவித்திருந்த நிலையில் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்வது 100 சதவிகிதம் சட்டபூர்வமானது என இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது.


Share Tweet Send
0 Comments
Loading...