தேக்கடி-சுற்றுலா

தேக்கடி-சுற்றுலா

Thekkadi Tourism

மனதிற்கு இதமான பசுமை மாறாத
தென்னகத்தின் மகாராணி கேரளாவின் தேக்கடி

தேக்கடி


கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள குமுளி என்னும் ஊரின் ஓர் சுற்றுலா  தலம்தான் தேக்கடி. மேற்குத் தொடர்ச்சி மலையின் பசுமைக்கு மத்தியில் பதுங்கியிருக்கும் வனப்பகுதிகளால் ஆசீர்வதிக்கப்பட்ட இயற்கையின் சொர்க்கம் இந்த தே‌க்கடி.

தே‌க்கடி கடல் மட்டத்திலிருந்து 1,800 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.கேரளா-தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலங்களின் எல்லைப்பகுதியில் அமைந்திருப்பதால் இரண்டு மாநில பாரம்பரியம் மற்றும் கலாச்சார அடையாளத்துடன் தேக்கடி காட்சியளிக்கிறது.தேக்கடி என்றாலே அனைவரின் நினைவிற்கும் வருவது படகுசவாரிதான். பசுமைச் சூழல் நிறைந்த மலைப் பிரதேசங்களுக்கும், இயற்கைச் சூழல் நிறைந்த காடுகள் நிறைந்த சுற்றுலாத் தலங்களுக்கும் செல்ல வெண்டும் என்றால்  கேரளாவில் பல இடங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் தேக்கடி. அந்தளவிற்கு இடுக்கியில் பிரசித்தி பெற்றது இந்த சுற்றுலாத் தலம்.

தேக்கடி ஏரி

இந்தப் பகுதி காடுகளுக்காகவும், சவான்னாப் புல்வெளிகளுக்காகவும் மற்றும் இயற்கை கொஞ்சும் அழகுக்கு  தேக்கடி புகழ் பெற்றது. இங்கு சுற்றுலா வருபவர்கள் சுமார் 15 கிலோ மீட்டர் நீளமுள்ள ஏரியில் படகில் சென்று வனத்தின் அழகை ஆழமாக கண்டு ரசிக்கலாம்.. தேக்கடி ஏரியில் வந்து படகு சவாரி செய்து இந்த ஏரிக்கு வரும் வனவிலங்குகளை கண்டு புகைப்படம் எடுத்து செல்கின்றனர் குறிப்பாக யானைகள்,புலிகள் மற்றும் காட்டெருமைகள் போன்ற பல மிருகங்கள் இந்த ஏரி நீர் அருந்துவதற்காக வருகின்றன. புலம் பெயரும் பறவைகளை உள்ளிட்டு பல வகை பறவைகள் உள்ளன. மலபார் சாம்பல் இருவாயன், இந்திய கருப்பு வெள்ளை இருவாயன், வெள்ளை வயிற்று வால் காக்கை, பலவகை கரிச்சான்கள், மரங்கொத்திகள், ஈப்பிடிப்பான்கள், சிலம்பன்கள், கண்கவர் தீக்காக்கைள் முதலியன படகுத் துறைக்கு அருகில் காணலாம்.

மற்றும் படகிலிருந்து நீர்க்கீரியை அடிக்கடி பார்க்கலாம். வண்ணமயமான மலபார் பறக்கும் தவளைகள் போன்ற தவளைகள், பூஞ்சைத் தவளை, இரு நிறத் தவளைகள்,  பலவகை தேரை இனங்கள், மற்றும் சிசீலியன்கள் பார்க்கலாம்.தேக்கடி காட்டுயிர் சரணாலயம் இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளிலிருந்தும் சுற்றுலாப்பயணிகள் தேடி வரும் அளவுக்கு பிரசித்தி பெற்றிருப்பது பெருமைக்குரிய விஷயமாகும்.இங்குள்ள ஏரிப் பகுதியில் படகில் பயணம் செய்தபடியே இந்த நீர்நிலையைத் தேடி வரும் வன விலங்குகளைப் பார்ப்பதற்கு மிகச் சிறந்த சுற்றுலாத் தலமாக தேக்கடி இருக்கிறது. எவ்வித இடையூறும் இன்றி ரசிப்பது தனிச்சிறப்பு.

இங்கு யானைகள் மீது அமர்ந்தபடி ஏரிப்பகுதியையும் இயற்கை அழகையும் ரசித்து வருவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. யானையின் முதுகில் வசதியாக அமர்ந்து கொள்வதற்கான சதுர வடிவிலான பாதுகாப்புடைய இருக்கைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த யானை பயணத்திற்கு சுற்றுலாப் பயணிகள் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்.

தேக்கடி பூங்கா

தேக்கடி படகுத்துறைக்குள் செல்வதற்கு முன்புள்ள பகுதியில் சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக சிறு பூங்கா ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இப்பூங்கா முழுவதும் அழகிய புல்வெளிகளால் நிரம்பியுள்ளது. இப்பூங்காவில் சுற்றுலாப் பயணிகள் அமர்ந்து ஓய்வெடுப்பதற்காக பூங்காவின் சுற்றுப்பகுதியில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பகுதி பு‌லிகள் சரணாலயம் என்பதை நினைவூட்டும் வகையில் இப்பூங்காவின் நடுப்பகுதியில் மரக்கிளைகளின் மேல் புலி நிற்பது போன்ற கற்சிலை அமைக்கப்பட்டுள்ளது.

பெரியார் வனவிலங்கு சரணாலயம்

இந்தியாவின் முக்கிய வனவிலங்கு சரணலாயங்களில் தேக்கடியின் பெரியார் காடுகளும் ஒன்றும்.
பெரியார் வனவிலங்கு சரணாலயம் 777 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது.  போடோகார்பஸ் வாலிசியானஸ் என அறிவியல் ரீதியாக அறியப்படுகிற ஒரே தென்னிந்திய ஊசியிலை மரங்கள் பெரியார் புலிகள் காப்பகத்தில் தான் வளர்க்கப்படுகின்றன. பெரியார் புலிகள் காப்பகத்திற்குள்ளே சில கண்காணிப்புக் கோபுரங்கள் உள்ளன, அவை வனவிலங்குகளைப் பார்ப்பதற்கு அற்புதமானவை.

சிங்கவால் குரங்குகள்  காடுகளில் காணலாம். பொன்னிறக் குரங்கு மற்றும் நீலகிரி லங்கூர் குரங்குகள் இரைதேடிக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம்.
இந்த சரணாலயத்தில் யானைகள், காட்டு எருமைகள், மான்கள், மற்றும் அதிர்ஷ்டம் இருந்தால் நீங்கள் புலி கூட காணலாம். இந்த சரணாலயத்தில் 350 ச.கி.மீ வனவிலங்கு காப்பகமாக  (புலிகள் காப்பகம்) அறிவிக்கப்பட்டுள்ளது.

முரிக்கடி

இப்பகுதி தேக்கடியில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. தேக்கடி வரும் சுற்றுலா பயணிகள் இந்த இடத்திற்கு வந்து செல்கின்றன. இங்கு காப்பி மற்றும் மசாலா வகைகள் பயிரிடப்பட்டுள்ளன.
பல்வகையான வாசனைப்பயிர்களிலிருந்து வீசும் நறுமணம் இப்பகுதி முழுவதும் விரவியிருப்பதை நுகரும் அனுபவமே புத்துணர்ச்சியூட்டும் ஒன்றாகும்.
இங்கு பரந்து விரிந்திருக்கும் மலைத் தோட்டங்கள் கண்கொள்ளாக் காட்சியாக அமைந்துள்ளது.  இந்த இடம் பெரியார் வனவிலங்கு சரணாலயம் அருகில் உள்ளது.

மங்களாதேவி கோயில்

தேக்கடி பகுதியிலிருந்து 15 கி.மீ தூரத்தில் உள்ள மங்களாதேவி கோயில் இப்பகுதியின் முக்கியமான சுற்றுலா அம்சங்களில் ஒன்றாகும். இந்த கோயிலானது கடல் மட்டத்திலிருந்து 1337 மீட்டர் உயரமுள்ள சிகரத்தில் வீற்றுள்ளது.மேலும் இந்த கோயில் ஸ்தலத்திலிருந்து சுற்றிலுமுள்ள மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகள் போன்ற இயற்கை எழில் காட்சிகளை பார்த்து ரசிக்க முடிவது விசேஷமான அம்சமாகும். கோயிலைச்சுற்றிலும் அடர்ந்த வனப்பகுதி நிறைந்திருப்பதால் இந்த கோயில் தரிசனம் பயணிகளுக்கு பரவசமூட்டும் அனுபவமாக இருக்கும். புராதனமான இந்த மங்களாதேவி கோயிலானது பாண்டியர் காலத்து கோயில் பாணியில் கற்பாறைகளால் அமைக்கப்பட்டுள்ளது. சிலப்பதிகார காவிய நாயகியான கண்ணகியே இங்கு மங்களாதேவி ரூபத்தில் குடிகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த இடத்திற்கு செல்வதற்கு அனுமதி கிடையாது ஆனால் சித்திரா பௌர்ணமி அன்று மட்டும் இங்கு வன அதிகாரிகளுடன் அனுமதி பெற்றுச் செல்லலாம்.

சேலார் கோவில்

சேலார் கோவில் குமுளியில் இருந்து தேனி செல்லும் வழியில் 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த இடத்தில் பல அழகிய நீர்வீழ்ச்சிகளும் மற்றும் ஏரிகளும் அமைந்துள்ளன. இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு இந்த இடம் புகைப்படம்  எடுப்பதற்கு மிகச் சிறந்ததாக உள்ளது.வளைந்து நெளிந்து செல்லும் மலைகளின் பின்னணியில் திரும்பும் இடமெல்லாம் தோன்றும் எழிற்காட்சிகள் இப்பகுதியை புகைப்பட ஆர்வலர்கள் நேசிக்கும் ஒரு சொர்க்கமாக மாற்றியுள்ளன.

கவி

கேரளாவில் சமீபகாலமாக பிரபலமாகி வரும் சுற்றுலாத் தலங்களில் ஒன்று பந்தனம்திட்டா மாவட்டத்தில் இருக்கும் கவி என்னும் பகுதியாகும். இயற்கை எழில் சூழ்ந்த இந்த இடம் தேக்கடியில் இருந்து 28 கிலோ மீட்டர் தொலைவிலும், வண்டிப்பெரியாரில் இருந்து 14 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்திருக்கிறது.
இயற்கை நடைப்பயணத்தை விரும்புபவர்களுக்கும், மலையேற்றப் பயிற்சிக்கும் பிடித்தமான அம்சங்களாக, ஏராளமான ஒற்றையடிப்பாதைகள் மற்றும் மலையேற்றப்பாதைகள் இந்த பகுதியில்
நிறைந்துள்ளன.

பலவிதமான வாசனைப்பயிர்கள் பயிராகும் தேக்கடியில் தரமான லவங்கம், வெந்தயம், வெள்ளை மற்றும் பச்சை மிளகு, ஏலக்காய், ஜாதிக்காய், கிராம்பு, நட்சத்திர சோம்பு மற்றும் கொத்துமல்லி போன்றவற்றை வாங்கிக்கொள்ளலாம். தேக்கடி பகுதியை ஒட்டி அமைந்திருக்கும் மலைக் கிராமமான குமுளி பிரசித்தி பெற்ற சந்தைத் தலமாக திகழ்கிறது. தேக்கடி வனப்பகுதியில் கிடைக்கும் வாசனைப்பொருட்கள் இங்கே விற்பனை செய்யப்படுகின்றன.

உணவுப்பிரியர்களின் விருப்பத்திற்கேற்ப பாரம்பரிய கேரள உணவுவகைகள் விதவிதமான சுவைகளில் இங்குள்ள உணவகங்களில் பரிமாறப்படுகின்றன. தேக்கடி மலைப் பிரதேசம் கேரளத்திற்கும், தமிழகத்திற்கும் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளதால் உணவு விசயத்தில் சற்று மாறுபாட்டை உணர முடியும். நம்மூர் மற்றும் கேரளா மாநில சுவையோடு இங்கே உணவுகள் பரிமாறப்படுகிறது.

தேக்கடியில் ,171 புல் வகைகள், 143 மல்லிகை வகைகள் உட்பட 1965க்கும் மேலான பூக்கும் தாவரங்கள் இங்கு காணப்படுகின்றன. வெளி நாடுகளிலிருந்து வந்த பறவைகளோடு சேர்ந்து 265 வகை பறவைகள் உள்ளன.
குளுமையான சூழல் மற்றும் நவீன வசதிகள் நிறைந்த ஏராளமான ரிசார்ட் விடுமுறை விடுதிகளின் சேவைகள் போன்றவை இப்பகுதியை தேனிலவுப்பயணம் மற்றும் குடும்பச்சுற்றுலாவுக்கு ஏற்ற இடமாகவும் பிரபலப்படுத்தியுள்ளன. தேக்கடி வனப்பகுதியில் நுழைவிற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நுழைவுக் கட்டணச் சீட்டைக் கொண்டுதான் படகுப் பயணச் சீட்டு பெற முடியும். ஒருவருக்கு இரு நபர்களுக்கான பயணச் சீட்டுகளை மட்டுமே பெற முடியும். படகுப் பயணச் சீட்டுகளைப் பெறுவதற்கு முழு முகவரியுடன் விண்ணப்பம் அளிக்க வேண்டும்.

கோட்டாயம் இரயில்நிலையம், தேக்கடியிலிருந்து சுமார் 110 கி.மீ. அருகாமை விமானநிலையம் : மதுரை சுமார் 140 கி.மீ. மற்றும் கொச்சின் சர்வதேச விமானநிலையம், சுமார் 190 கி.மீ தேக்கடியிலிருந்து. கோயம்புத்தூர், மதுரை, தேனி போன்ற நகரங்களில் இருந்து குமுளி செல்லும் பேருந்துகள் மூலம் தேக்கடிக்கு சென்று மகிழ்ச்சியாக கோடையைக் கழிக்கலாம்.


நடைபயணங்கள் மற்றும் மலைபாதைளை தழுவியிருக்கிற அழகிய தோட்டங்கள் மற்றும் மலை நகரங்கள் மாவட்டம் முழுவதும் பரந்திருக்கிறது.
பசுமைமாறா காடுகளும், புல்வெளிகள் மற்றும் இயற்கை கொஞ்சும் அழகுக்கு  தேக்கடி புகழ் பெற்றது.
மன அழுத்தத்தை குறைத்து புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது. அவ்வாறு சுற்றுலா செல்ல திட்டமிடுவோருக்கு ஏற்ற தலங்களில் ஒன்று தேக்கடி.
ஏகாந்தமான இயற்கைச்சூழல் என்று சுற்றுலாப்பயணிகள் விரும்பும் பலவித அம்சங்களையும் இந்த தேக்கடி சுற்றுலாத்தலம் தன்னுள் கொண்டுள்ளது.
அப்புறம் என்ன ? காடுகளும், மலைகளும், பசுமைத் தோட்டங்களும் நிறைந்த தென்னகத்தின் மகாராணியாய்
இருக்கும் தேக்கடிக்கு ஒரு சுற்றுலா செல்ல முடிவு பண்ணுங்க.


Share Tweet Send
0 Comments
Loading...