தெய்வீக தென்காசி!!

தெய்வீக தென்காசி!!

தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் பொங்கும் சுற்றுச்சூழலில் அமைந்துள்ளது. குற்றாலம் அருவிகள் இந்நகரத்தில் அருகாமையில் உள்ளதால் இது சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தரும் ஒரு நகரமாக அமைந்துள்ளது. இவ்வூர் பருவ மழைத் தூறலுக்குப் பெயர் போனது. மக்கள் இதை சாரல் மழை என்றும் அழைப்பதுண்டு.
அதில் மிக முக்கியமான ஒன்றுதான் தென்காசி கோவில்களின் சிறப்புகளும் அடங்கும்.

அருள்மிகு காசி விஸ்வநாதசுவாமி திருக்கோவில்

சுவாமி : அருள்மிகு காசிவிஸ்வநாதர்.

அம்பாள் : அருள்மிகு உலகம்மன்.

தீர்த்தம் : சகஸ்ரநாம தீர்த்தம், ஆனந்த தீர்த்தம், காசிக் கிணறு, வயிரவ தீர்த்தம், ஈசான  தீர்த்தம், அன்னபூரணி தீர்த்தம், விசுவ தீர்த்தம்.

தலவிருட்சம் : செண்பக மரம்.

தலச்சிறப்பு : இந்திரன், மைநாகம், நாரதர், அகத்தியர், மிருகண்டு முனிவர், வாலி, கண்ம முனிவர் போன்றோர் வழிபட்ட தலம்.  நந்தியின் அவதார தலம் எனவும் போற்றப்படுகிறது.  சிலாகித முனிவர் குழந்தை வரம் வேண்டிய பயன் பெற்றதாக தலவரலாறு குறிப்பிடுகிறது.  திருக்கோயிலிலைக் கட்டிய பராக்கிரம பாண்டிய மன்னனின் உற்சவர் சிலை சுவாமி சந்நிதியில் உள்ளது.  திருக்கோயில் விழாக்களுக்கு தலைவராக அம்மன்னன் மதிக்கப்பட்டு மன்னனுக்கு முதல் மரியாதை செய்யப்படுவது இன்றளவும் கடைப்பிடிக்கப்படுகிறது.

தல வரலாறு : தென்காசியை ஆண்ட பராக்கிரம பாண்டியன் என்ற மன்னன் காசிக்குச் சென்று காசி விசுவநாதரை வழிபட எண்ணம் கொண்டார்.  மன்னனின் குலதெய்வமான முருகப்பெருமான் மன்னனுக்கு சக்தி வாய்ந்த அபூர்வ குளிகை ஒன்றை கொடுத்து வான் மார்க்கமாக காசி சென்று வழிபடச் செய்தார். இவ்வாறு காசிக்குச் சென்று தினமும் காசி விசுவநாதரை வழிபட இயலாததை எண்ணி, மன்னன் மனம் வருந்தினான்.  இறைவன் மன்னனது கனவில் தோன்றி நான் இங்கிருந்து அரைக்காத தூரத்தில்தான் இருக்கிறேன்.  நான் இருக்குமிடத்தில் நீ காண உனக்கு எறும்புகள் சாரைசாரையாக ஊர்ந்து சென்று வழிகாட்டும் என்று கூறி மறைந்தார்.  மறுநாள் எறும்பு சாரைசாரையாக செல்லுமிடத்தை மன்னன் அடையாளம் கண்டு அங்கு சிவலிங்கமும் நந்தியும் இருப்பதைக் கண்டு வணங்கினான்.  அந்த இடத்தில் கோயில் கட்டி, கோபுரமும் கட்டி, தென்காசி  நகரையும் நிர்மாணித்து தென்காசி கண்ட பாண்டியன் ஆனான். 1445-ல் பராக்கிரம பாண்டியனால் ராஜகோபுர திருப்பணி துவங்கப்பட்டு 6 ஆண்டுகளுக்குப் பின் பட்டத்துக்கு வந்த பராக்கிரம பாண்டியனின் தம்பி சடையவர்மன் குலசேகர பாண்டியனால் 1505-ல் ராஜகோபுரத் திருப்பணி முடிவடைந்தது என்று கல்வெட்டு செய்திகள் கூறுகின்றன.

நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

திருவிழாக்கள் :

மாசிமகப் பெருந்திருவிழா 10 நாள் சிறப்பாக கொண்டாடப்படும்,

புரட்டாசி நவராத்திரி கொலு திருவிழாவும்,

ஐப்பசி திருக்கல்யாணமும்,

ஆவணி மூல தெப்பத்திருவிழாவும்,

தை அமாவாசை பத்திர தீப திருவிழாவும் முக்கியமானதாகும்.

இங்கு வீசும் காற்று உங்களைத் தழுவிக்கொண்டுச் செல்கையில், மனதில் எவ்வளவு பாரம் இருந்தாலும் அப்படியே கரைந்து போகும். வாழ்க்கையில் நிச்சயமாகப் பார்த்து, ரசித்து, லயித்து இருக்க வேண்டிய இடங்களில் தென்காசி கோவில்களும்  ஒன்று…

அருள்மிகு குற்றாலநாதர் திருக்கோயில்

குற்றாலநாதர் திருக்கோயில்

மூலவர்:குற்றாலநாதர்
அம்மன்/தாயார்:குழல்வாய்மொழி, பராசக்தி (இரண்டு அம்மன் சன்னதிகள்)
தல விருட்சம்:குறும்பலா
தீர்த்தம்:சிவமதுகங்கை, வட அருவி, சித்ரா நதி
ஆகமம்/பூஜை :மகுடாகமம்
புராண பெயர்:திரிகூட மலை
ஊர்:குற்றாலம்
மாவட்டம்:திருநெல்வேலி
மாநிலம்:தமிழ்நாடு

திருவிழா

ஆடி அமாவாசையில் லட்ச தீபம் ஏற்றப்படுகிறது. நவராத்திரியில் பராசக்திக்கு 10 நாள் திருவிழா. ஐப்பசி, பங்குனியில் பிரம்மோற்ஸவம், மார்கழி திருவாதிரை, தை மகத்தில் தெப்போற்ஸவம் பங்குனி உத்திரம். ஆடி அமாவாசையன்று கோயில் முழுதும் 1008 தீபம் ஏற்றும், “பத்ரதீப’ விழா இங்கு வெகு விமரிசையாக நடக்கும்.

தல புராண வரலாறு: கந்தபுராணம் திருக்குற்றாலப் படலத்தில் அகத்தியர் இத்தலத்தில் திருமாலை சிவனாக்கி வழிபட்ட வரலாறு கூறப்பட்டுள்ளது. கைலாயத்தில் சிவனுக்கும் பார்வதிக்கும் திருமணம் நடைபெற்ற போது, அங்கு கூடியிந்தவர்களின் பாரம் தாங்காமல் பூமியின் வடதிசை தாழ்ந்து தென்திசை உயரத் தொடங்கியது. பூமியின் நிலையை சரிப்படுத்த சிவபெருமான் அகத்தியரை தென்திசையிலுள்ள பொதிகை மலைக்கு அனுப்புகிறார். அகத்தியருக்கு அங்கு தனது திருமணக் கோலத்தைக் காட்டுவதாகவும் வாக்களிக்கிறார். அகத்தியரும் பொதிகை மலை வந்து அருவியில் நீராடிவிட்டு அருகிலுள்ள கோவிலுக்குச் சென்றார். ஆனால் அக்கோவில் ஒரு வைணவக் கோவில். அகத்தியர் வைணவர் இல்லை என்று கோவிலுக்குள் செல்ல தடை விதித்தனர். மிகுந்த கவலையுடன் அருகிலுள்ள இலஞ்சி சென்று அங்குள்ள முருகரை வழிபட்டார். முருகப் பெருமான் அகத்தியரை வைணவர் வேடத்தில் கோவிலுக்குள் செல்லும் படியும், உள்ளே சிவனின் திருமணக் கோலத்தைக் காணலாம் என்றும் கூறினார்.

கோவிலுக்குள் அவ்வாறே சென்ற அகத்தியர் விஷ்ணு சிலாவுருவில் கருவறையில் இருப்பதைக் கண்டார். கண்களை மூடிக்கொண்டு சிவனை பிரார்த்தனை செய்பவாறு அச்சிலையின் தலையில் தனது கையை வைத்து அழுத்த, விஷ்ணுவின் சிலை குறுகி ஒரு சிவலிங்கமாக மாறியது. அகத்தியருக்கு சிவபார்வதி திருமணக் காட்சியும் கிடைத்தது. அகத்தியரால் சிவத் திருமேனியாக மாற்றப்பட்டதால் லிங்கத் திருமேனியின் மீது அகத்தியரின் ஐந்து விரல்களும் பதிந்த அடையாளம் இருப்பதைக் காணலாம். விஷ்ணுவின் சிலாரூபம் லிங்கமாக மாறியதைப் போல ஸ்ரீதேவியை குழல்வாய் மொழியம்மை ஆகவும், பூதேவியை பராசக்தியாகவும் மாற்றியதாகவும் ஐதீகம்.

தல சிறப்பு

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் 64 சக்தி பீடத்தில் இது, “பராசக்தி பீடம்’ ஆகும். இத்தலத்தில் உள்ள தலமரம் லிங்க வடிவ பலாச்சுளை காய்கிறது இத்தலத்தில் உள்ள தலமரம் பலா மரத்தில் வருடத்தின் அனைத்து நாட்களிலும், பலா காய்த்துக் கொண்டிருக்கும். இதை யாரும் பறிப்பதில்லை. இந்த பலாவில் உள்ள சுளைகள், “லிங்க’த்தின் வடிவில் இருப்பது கலியுக அதிசயம்.

திறக்கும் நேரம்

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

செண்பகாதேவி அம்மன் கோவில்
குற்றாலம் மலைப் பகுதியில் உள்ள செண்பகா தேவி அம்மன் கோவிலுக்கு பவுர்ணமி உள்ளிட்ட முக்கிய விரத நாட்களில் தென்காசி, குற்றாலம், செங்கோட்டை மற்றும் நெல்லை மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள பக்தர்கள் செண்கபாதேவி அம்மன் கோவிலுக்கு வருகை தருவார்கள்.

தேனருவி, சிற்றருவி, செண்பகாதேவி அருவி, ஐந்தருவி, பழையகுற்றால அருவி என அருவிகள் சூழ்ந்த இடம் குற்றாலம்.மலையின் உச்சியில் மூன்று சிகரங்கள் இருப்பதால் திரிகூடமலைஎன பெயர் பெற்றது.

இந்த மலை குற்றால மலை என்றும் அழைக்கப்படுகிறது.

வறட்சி காலத்திலும் இயற்கை மாறுபடாமல் இருப்பதால் குற்றால மலை சிகரத்திற்கு பஞ்சந்தாங்கி எனும் பெயரும் உண்டு.அரிய வகை மூலிகை நிறைந்த இப்பொதிகை மலைச்சாரல் அகத்தியபெருமானுக்கு பிடித்த இடங்களில் ஒன்று.

தென்மேற்கு பருவக்காற்றால் பெய்யும் மழையால் உற்பத்தியாகி வரும் ஆறு சிற்றாறு என்றழைக்கப்படும் சித்ராநதி தாமிரபரணியின் கிளை நதியாக இருக்கிறது.

குற்றாலம் மெயின் அருவிக்கு மேல் சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் செண்பகாதேவி அம்மன் கோவில் உள்ளது.

குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலின் கட்டுப்பாட்டில் இந்த கோவில் செயல்பட்டு வருகிறது.

செண்பகாதேவி அம்மன் கோயில் பெருமையை குற்றால ஸ்தல புராணத்தில் சிறப்பாக பாடப்பட்டுள்ளது

இக்கோவில் செண்பகாதேவி அருவி அருகில் அமைந்துள்ளது.

இங்கு செண்பகாதேவி அம்மன் கோவில் இருப்பதாலேயே இங்குள்ள அருவிக்கு செண்பகாதேவி அருவி எனப் பெயர் பெற்றது.

அகத்திய மாமுனிவர் ஸ்ரீ செண்பகாதேவி அம்மனை பிரதிஷ்டை செய்துள்ளார்.

ஒன்பதின் கீழ் சித்தர், பதினென்கீழ் சித்தர் என இருவகையாக சித்தர்களை பிரித்து கூறினாலும் அனைத்து சித்தர்களுக்கும் தலைமையானவராய் திகழ்பவர் அகத்தியரே ஆவார்.

இந்த தேவியானவள் ஸ்ரீ துர்க்கை அம்மனின் பிறப்பாக பராசக்தி வடிவில் அருள்பாலிக்கிறார்.

இந்த ஆலயத்தில் கருவறை, அர்த்தமண்டபம், மகா மண்டபம் என்ற அமைப்புகளுடன் உள்ளது. இங்கு லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் இணைந்து செண்பகாதேவி அம்மன் கருவறையில் காட்சியளிக்கின்றனர்.

இங்குள்ள அம்மனுக்கு ஆண்டு தோறும் சித்ரா பௌர்ணமி அன்று திருவிழா சிறப்பாக நடைபெறும்.

இந்த வனத்தில் ஆண்டு தோறும் சித்ரா பௌர்ணமியன்று மஞ்சள் மழை பெய்திருக்கிறது.

ஆனால் இப்பொழுது பருவநிலை மாற்றம் காரணமாக சந்தனமழையை ஓரிரு துளிகள் மட்டுமே பெய்வதாக கூருகின்றனர்.

செண்பகதேவி அம்மன் கோயிலில் விழாக்களும், வழிபாடுகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

செண்பகாதேவி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் பவுர்ணமி நாளில் திருவிழா
வெகு சிறப்பாக பூஜை வழிபாடுகளும் மேற்கொள்ளப்பட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்று வருகின்றனர்.

பொதிகை மலையிலிருந்து 30 கி.மீ.,தூரத்தில் 7 ஆயிரத்து 500 அடி உயரத்தில் திரிகூட மலையில் செண்பகாதேவி அருவிக்கு மேலே உள்ளது. இப்பகுதியில் தட்சிணாமூர்த்தி குகை, ஜோதீஸ்வரர் குகை, கரடி குகை, பரதேசி குகை, அகத்தியர் கோவில், அகத்தியர் பாதம், அகத்தியரின் முதல் சீடரான புலத்தியரின் சமாதி போன்றவை உள்ளன. அகத்தியர் வழிபட்ட பாலவிநாயகர் சிலை மூன்றரை அடி உயரத்தில் இருப்பது சமீபத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இம்மலை பகுதியில் பால விநாயகர் சிலை பளிச்சிட்டு வருவதை பக்தர்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். விநாயகர் இடது காலை நீட்டியும், வலது காலை மடக்கி வைத்தும் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். விநாயகர் சிலை இருக்கும் மலை சிவலிங்கம் போல் தோற்றம் அளிக்கிறது.

இங்குள்ள பாறைகளில் விநாயகரை சித்தர்கள் வழிபடுவது போன்ற சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அகத்தியர் பயன்படுத்திய பண்டைய தமிழ் எழுத்துக்களின் கல்வெட்டுகள் இருப்பது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. மேலும் சேர, பாண்டிய மன்னர்கள் கட்டிய மிகவும் தொன்மையான கட்டடம் இருந்ததற்கான அறிகுறிகள் காணப்படுகிறது.
பக்தர்கள் எளிதில் செல்ல முடியாத அளவிற்கு இப்பகுதி முழுவதும் வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பில் உள்ளது. வனத்துறையினர் மனம் வைத்தால் பக்தர்கள் அகத்தியர் வழிபட்ட பால விநாயகரை தரிசனம் செய்யலாம். மதுரை ராஜபாளையம் தென்காசி  வழியாக குற்றாலம் சென்றடையலாம்.

திருமலை முத்துக்குமார சுவாமி கோவில்

சிவபெருமானின் நெற்றிக்கண் தீப்பொறியில் இருந்து அவதரித்தவர் சிவக்குமாரன். பார்வதிதேவியால் ஞானப் பால் ஊட்டி வளர்க்கப்பட்ட சக்தி மைந்தன் முருகப்பெருமான். அந்தக் குமரன், குன்றிருக்கும் இடத்தில் எல்லாம் குடியிருந்து தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார்.

தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை நகரில் இருந்து வடக்கு திசையில் 8 கிலோமீட்டர் தொலைவில் பண்பொழி (பைம்பொழில்) என்ற ஊர் உள்ளது. இங்கு இயற்கை அழகு கொஞ்சித் தவழும் மேற்குத்தொடர்ச்சி மலைத் தொடர்களின் சிறிய குன்றில் திருமலை முத்துக்குமார சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு மூலவராக இருந்து முருகப்பெருமான் அருள்பாலித்து வருகிறார். இவரை ‘முத்துக்குமாரசுவாமி’ என்றும், ‘குமாரசாமி’ என்றும் அழைக்கின்றனர்.

இந்த முருகப்பெருமான் நான்கு கரங்களுடன் மேல்நோக்கிய வலது கையில் சக்தி ஆயுதம், இடது கையில் வச்சிராயுதம் தாங்கியும், கீழ்நோக்கிய வலது கையில் அபயக்கரம், இடது கையில் சிம்ம கர்ண முத்திரையும் காட்டி நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். தேவார வைப்புத் தலமான இந்தக் கோவில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 520 அடி உயரத்தில் உள்ளது. கோவிலுக்கு செல்ல சுமார் 600 படிக்கட்டுகள் ஏற வேண்டும். அந்த படிக்கட்டுகள் ஸ்கந்த கோஷ்டப் பித்ருக்கள் வசிக்கும் தேவ படிக்கட்டுக்கள் எனச் சொல்லப்படுகிறது. ஆகையால், இந்த தலத்திற்கு வந்து முன்னோருக்கு தர்ப்பணம் செய்தால், நம் சந்ததிகளுக்கு நல்ல சிறப்பான வாழ்வு அமையும். நல்ல வாரிசுகள் உருவாகும் என்பது ஐதீகம்.

தல வரலாறு

முன்னொரு காலத்தில் திருமலைக் கோவிலில் ஒரு வேல் மட்டும் இருந்தது. அந்த வேலுக்கு, பூவன்பட்டர் என்ற அர்ச்சகர் அபிஷேகம் மற்றும் பூஜைகளைச் செய்து வந்தார். ஒருநாள் நண்பகல் பூஜையை முடித்து விட்டு, ஓய்வுக்காக ஒரு புளிய மரத்தடியில் அர்ச்சகர் படுத்திருந்தார். அப்போது, முருகப்பெருமான் அவரது கனவில் எழுந்தருளி, “பட்டரே! இந்த மலை எனக்குச் சொந்தமானது. நான் இங்கிருந்து சற்று தொலைவிலுள்ள கோட்டைத்திரடு என்ற இடத்தில் சிலை வடிவில் இருக்கிறேன். நீ அங்கு சென்று எறும்புகள் சாரை சாரையாக செல்லும் ஒரு குழியை தோண்டிப் பார். அதற்குள் சிலை இருக்கும். அதை எடுத்து வந்து இந்த மலையில் பிரதிஷ்டை செய்து வழிபடு” என்றார்.

அதன்படியே பந்தளத்தை ஆண்ட அரசருக்கு தகவல் தெரிவித்துவிட்டு, குறிப்பிட்ட இடத்தில் இருந்து முருகப்பெருமான் சிலையை எடுத்து வந்து இங்கு பிரதிஷ்டை செய்து வழிபடத் தொடங்கினார்.

இத்தலத்தில் வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு, பார்வதிதேவி தன் வாயால் அருளிச் செய்த ‘தேவி பிரசன்ன குமார விதி’ப்படி எட்டுக்கால பூஜைகள் சிறப்பாக நடைபெறுகின்றன. இக்கோவிலில் மற்ற கோவில்கள் போன்று பள்ளி யறையில் சுவாமியைப் பாதுகை செய்வது இல்லை. மூலவருக்குப் பால், பழம், ஊஞ்சலுடன் சயனப் பூஜை மட்டுமே செய்யப்படுகிறது.

திருமலையின் வெளிப்பிரகாரத்தில் வடமேற்குப் பகுதியில் தனிக் கோவிலாகத் திருமலைக்காளி கோவில் இருக்கிறது. இங்கே காளியம்மன் வடதிசை நோக்கி அமர்ந்து அருள்பாலிக்கிறார். இந்த ஆலயம் முருகப்பெருமானின் பிரதிஷ்டை நடைபெறுவதற்கு முன்பே இருந்த ஆலயம் என்கிறார்கள். இந்தக்காளி திருமலையின் காவல் தெய்வமாக பார்க்கப்படுகிறார். முருகனை தரிசிக்க படிகள் செல்லும் இடத்தின் மேற்கே, தனிச்சன்னிதியாக இடும்பன் சன்னிதி அமைந்துள்ளது.

கோவில் உள்பிரகாரத்தில் வடகிழக்கில் ஈசானத்தில் தெற்கு நோக்கி காலபைரவர் சன்னிதி உள்ளது. இங்கு 5½ அடி உயரமுள்ள கம்பீரமான தோற்றத்துடன் பைரவர் வீற்றிருக்கிறார். முருகன் சன்னிதியை அடுத்து 16 படிகள் ஏறிச்சென்றால், விநாயகருக்கு தனி சன்னிதி இருக்கிறது. அவர் ‘உச்சிப்பிள்ளையார்’ என அழைக்கப்படுகிறார்.

திருமலைக்கோவில் வரலாற்றை எழுதிய பேராசிரியர் கணபதிராமன், “சிலப்பதிகாரத்தில் வரும் நெடுவேள்குன்றம் என்பது இக்குன்றமே” என்றும், “கண்ணகி இக்குன்றைக் கடந்தே சேரநாடு சென்றாள்” என்றும் ஆராய்ச்சிக் குறிப்பேட்டில் கூறியுள்ளார். அருணகிரிநாதர் தமது நூலான திருப்புகழில் திருமலை முருகனைப் புகழ்ந்து பாடியுள்ளார்.

இந்த ஆலய முருகனுக்கு மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமை, மாதாந்திர கார்த்திகை நட்சத்திர நாள், தமிழ் மாதப்பிறப்பு நாட்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. முருகப்பெருமான் அவதரித்த விசாக நட்சத்திரத்திற்கு உகந்த கோவிலாக திருமலை முத்துக்குமரசுவாமி கோவில் உள்ளது. இதனால் விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், இந்தக் கோவிலுக்கு வாழ்வில் ஒரு முறையாவது வந்து செல்ல வேண்டும். விசாகம், கார்த்திகை, உத்திரம் ஆகிய முருகனுக்குரிய நட்சத்திர நாட்களில் இம்மலையில் தங்கள் ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் ஓடவள்ளி, நள மூலிகை, திருமலைச் செடி ஆகிய மூலிகைகள் வளர்கின்றன. செல்வ விருத்திக்காக, திருமலை செடியின் வேரையும், தனகர்ஷண யந்திரத்தையும் இணைத்து ஒரு காலத்தில் பூஜை செய்திருக்கிறார்கள். இன்று இந்த மூலிகைகளை அடையாளம் காண முடியவில்லை.

‘வி' என்றால் ‘மேலான' என்றும், ‘சாகம்' என்றால் ‘ஜோதி' என்றும் பொருள்படும். விசாக நட்சத்திரம் விமலசாகம், விபவசாகம், விபுலசாகம் என்ற மூவகை ஒளிக்கிரகணங்களைக் கொண்டது. இந்த கிரகணங்கள் அனைத்தும் இம்மலையில் படுவதால், விசாக நட்சத்திரத்தினர் இங்கு சென்று வழிபட்டுவந்தால் வாழ்வில் திருப்பம் ஏற்படும்.

தீர்த்தக்குளம்

‘ஓம்’ என்ற வடிவம் கொண்ட உயர்ந்த குன்றில் அமைந்துள்ள, இந்தக் கோவிலின் தீர்த்தத்தை ‘பூஞ்சுனை’ என்று அழைக்கின்றனர். இது அகத்திய முனிவரால் உருவாக்கப்பட்டது. நாள்தோறும் ஒரு தாமரை மலர் இந்தச் சுனையில் மலரும். அதைப் பறித்து, இந்திராதி தேவர்களும், சப்த கன்னியர்களும் முருகனுக்குச் சூட்டி வழிபடுவதாக நம்பிக்கை நிலவுகிறது. இத்தகைய அற்புதமான இந்த ஆலயத் தீர்த்தத்தில் நீராடினால் பலவித நோய்கள் நீங்குவதாக சொல்கிறார்கள். இங்குள்ள தீர்த்தக்கரையில் சப்த கன்னியர்களும் வாசம் செய்கின்றனர்.

கேரள மாநிலத்தின் எல்லையில் இக்கோவில் அமைந்துள்ளது. பழனி தண்டாயுதபாணி கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் இங்கு வந்து தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றி செல்கின்றனர்.

அமைவிடம்

செங்கோட்டையில் இருந்து வடமேற்கில் 10 கிலோமீட்டர் தொலைவில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் செங்கோட்டை ரெயில் நிலையத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் வடமேற்குத் திசையில் இருக்கின்றது. தென்காசி மற்றும் செங்கோட்டையில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன. 2012-ம் ஆண்டு முதல் மலை மேல் வாகனங்கள் சென்று வர தார் சாலையாக மலைப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

புளியரை தட்சிணாமூர்த்தி கோயில்

குரு பகவான் ஆலயம்: அருள்மிகு சதாசிவ மூர்த்தி திருக்கோயில் புளியரை

தமிழக கேரளா எல்லைப்பகுதி மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியான நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே புளியரையில் அமைந்துள்ள அருள்மிகு சிவகாமியம்மாள் சமேத சதாசிவமூர்த்தி தட்சிணாமூர்த்தி ஆலயம் சிறந்த குரு பரிகார ஆலயமாகும்.

புளியரை சதாசிவ மூர்த்தி திருக்கோயிலில் சதாசிவமூர்த்தி எனும் சிவ லிங்கம் மூலவராக இருந்தாலும், மூலவருக்கும் நந்திக்கும் இடையே அமைதிருக்கும் தட்சிணாமூர்த்திக்கே சிறப்பு வாய்ந்த தலமாக பார்க்கப்படுகின்றது.

தல சிறப்பு:
இங்குள்ள மூலவர் சதாசிவ மூர்த்தி சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கின்றார். பொதுவாக சிவன் கோயிலில் தட்சிண மூர்த்தி, தெற்கு திசை பார்த்து அமர்ந்திருப்பார். ஆனால் இங்கு மூலவர் சதாசிவ மூர்த்தி லிங்கத்திற்கும், வாசலில் உள்ள நந்திக்கும் இடையே தெட்சிணா மூர்த்தி அருள்பாலிக்கின்றார்.

வேண்டுதல் :
இந்த கோயிலில் திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் வேண்டி, கல்வி, வேலை, தொழில் ஆகியவை சிறக்க, நாக தோஷம் நீங்க நட்சத்திர தினத்தில் வேண்டிக்கொள்ளலாம்.
வேண்டுதல் பலித்த உடன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், அர்ச்சனை, வஸ்திரம் சாத்தி பூஜை செய்து வழிபடலாம்.

தட்சிணாமூர்த்திக்கு முல்லைப் பூ மாலை, கொண்டைக்கடலை மாலை சாத்தி, தயிர்சாதம் நைவேத்யம் படைக்கலாம். சனீஸ்வரருக்கு எள் தீபம் ஏற்றப்படுகிறது.

கோயில் பெருமைகள் :
கோயிலுக்கு செல்ல 27 படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த 27 படிக்கட்டுகள் 27 நட்சத்திரங்களாகப் பார்க்கப்படுகின்றது. நட்சத்திர தோஷம் உள்ளவர்கல் இங்கு வந்து 27 படிகள் வழியாக ஏறி சிவனை பூஜித்தால் தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

புளிய மரத்தடியில் சிவன் காட்சி அளித்ததால் புளியரை என அழைக்கப்பட்டது. இந்த ஊர் சின்ன சிருங்கேரி என்ற சிறப்பையும் பெற்றது.

சிவ தலமாக இருந்தாலும், தட்சிணாமூர்த்திக்கே உரிய ஆலயம் என்பது போல் அதிக சிறப்பு வாய்ந்ததாகப் பார்க்கப்படுகின்றது. வியாழக்கிழமைகளிலும், குரு பெயர்ச்சியின் போதும் அதிகளவில் பக்தர் கூட்டம் வந்து செல்கின்றனர்.

இங்குள்ள அம்மன் சிதம்பரத்திலிருந்து கொண்டுவரப்பட்டதாகக் கூறப்படுவதால் சிவகாமி என அழைக்கப்படுகின்றாள்.

இலஞ்சி குமார கோயில்

சுவாமி : குமாரர் சுவாமி
தீர்த்தம் : சித்ராநதி
தலவிருட்சம் : மகிழம்
தலச்சிறப்பு : அகத்தியரால் வெண்மணலில் பிடித்து வைக்கப்பட்ட சிவன் இங்கு இருவாலுக நாயகராக அருள்பாலிக்கிறார்.

தல வரலாறு : இமயமலையில் அம்மை அப்பனின் திருமணத்தைக் காண அனைத்தப் பகுதியில் உள்ளவர்களும் வடதிசையில் வந்து குவிந்ததால், வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. அதை சரி செய்ய சிவபெருமான் அகத்திய மாமுனிவரை தென்திசை செல்ல பணித்தார். இறைவனின் கட்டளையை சிரமேற்கொண்டு தென்திசை புறப்பட, அகத்தியர் பொதிகை மலையின் குற்றாலத்திற்கு வந்தார் .

அப்போது குற்றாலத்தில் உள்ள திருக்கோயில் வைணவ திருக்கோயிலாக இருந்ததால் வைணவர்கள் அவரை உள்ளே அனுமதிக்கவில்லை. எனவே அவர் சித்ரா நதி தீர்த்தத்ற்கு வந்து வெண்மணலால் சிவலிங்கம் அமைத்து சிவபூஜை செய்தார். வெண்மணலுக்கு “தேவாகைரியில் இருவானுகம்” என்ற பெயர் இருந்ததால் அதற்கு “இருவாலுக ஈசர்” என்ற பெயர் ஏற்பட்டது. வந்த வேலை முடிய வேண்டுமே, இன்னும் முடியவில்லையே என எண்ணிய, அகத்தியர் முருகபெருமானை வேண்டினார்.

முருகபெருமானும் அகத்தியர் முன்னே தோன்றி, “வைணவ வேடத்திலேயே குற்றாலம் செல். அங்கு சென்று அங்குள்ள திருமாலை குறுக்கி குற்றாலநாதராக்கு” என பணித்தார். அகத்தியரும் அவ்வாறே செய்து தான் வந்த பணியை முடித்தார்.


நடைதிறப்பு : காலை 6.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.
பூஜை விவரம் : தினசரி ஆறுகால பூஜைகள் நடைபெறுகின்றன.

திருவனந்தல், விளாபூசை, காலசந்தி, உச்சிகாலம், சாயரட்சை, அர்த்த சாமம் ஆகிய ஆறு கால பூசைகள் தினமும் நடைபெறுகிறது.
திருவிழாக்கள் : சித்திரை பிரமோத்ஸவம், வைகாசி விசாகம், நவராத்திரி, கந்தசஷ்டி தனுர்பூஜை தைபூசம், மாசி மகம் ஆகிய விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

கோவிலுக்கு முன் அழகான மண்டபம்

Share Tweet Send
0 Comments
Loading...