முளைகட்டிய பயறுகளை உண்பதால் கிடைக்கும் நன்மைகள்!

முளைகட்டிய பயறுகளை  உண்பதால் கிடைக்கும் நன்மைகள்!

முளைக்க வைக்கப்பட்டு பயன்படுத்தும் அனைத்து பயறு வகைகளுமே சிறந்த புரதச்சத்து உடையதாக இருக்கிறது. இதன் காரணமாகவே பயறு வகையை நீரில் ஊற வைத்து, பின்பு முளைக்க வைத்து அதனை பச்சையாகவோ அல்லது வேக வைத்தோ சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது.

முளை கட்டிய தானியங்கள் என்றவுடன் பெரிதாகவும் நினைக்க வேண்டியதில்லை. நம்முடைய அன்றாட வாழ்க்கையில், எளிதில் கிடைக்கும் பயறு வகைகளையே முளைகட்டச்செய்து பயன்படுத்தலாம். அந்த வகையில் பாசிப்பயறு, கொண்டைக் கடலை, தட்டைப்பயறு, உளுத்தம்பயறு, சோயா பயறு இந்த ஐந்து முளை கட்டிய தானியங்களிலும் புரதச்சத்துக்கள் மிகுந்து காணப்படுகிறது.

முளைக்கட்டுதல் என்பது பயறுகளை ஒரு இரவு முழுவதும் நீரில் ஊறவைத்து, நீரை வடிகட்டி, ஊறிய பயறுகளை, ஒரு பருத்தித் துணியில் தளர்வாகக் கட்டி தொங்கவிட வேண்டும். ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று முறைகள், நீரை தெளித்து ஈரப்பதத்தில் வைக்கும் நிலையில், முளையானது 6 முதல் 8 மணி நேரத்திற்குள் தோன்றும்.

எப்படி சாப்பிடலாம்?

* ஒரு நாளில் காலை, மதியம், மாலை, இரவு என நான்கு வேளைகளில் எந்த வேளையிலும் முளைகட்டிய தானியங்களை சாப்பிடலாம். ஒரு நாளைக்கு எதாவது ஒரு வேளைதான் சாப்பிட வேண்டும். மதிய உணவில் சாப்பிடுவது இன்னும் சிறந்தது.

* காலை உணவு எனில் 50-65 கிராம், மதிய உணவு எனில் 70 - 80 கிராம், இரவு உணவு எனில் 70 - 75 கிராம் என்ற அளவில் முளைகட்டிய தானியங்கள் சாப்பிடலாம். அப்படி சாப்பிடும்போது, அவ்வேளை உணவில் 50-50, அதாவது பாதி அளவு சாப்பாடு, பாதி அளவு முளைகட்டிய தானியம் என்று இருக்குமாறு சாப்பிடலாம். இந்த அளவுகள் குறையலாம், ஆனால் அதிகமாகக் கூடாது.

* மதிய மற்றும் இரவு உணவுகளுடன், வேகவைக்காத முளைகட்டிய தானியங்களை சேர்த்துச் சாப்பிடலாம். அல்லது சாப்பிடுவதில் பாதி அளவு வேகவைக்காமலும், பாதி அளவு வேகவைத்தும் சாப்பிடலாம்.

எப்படிச் சாப்பிடக்கூடாது?

* காலை நேரம் வெறும் வயிற்றில் முளைகட்டிய தானியங்கள் சாப்பிட கூடாது. காரணம், தானியங்களை தண்ணீரில் ஊறவைத்து முளைகட்டச் செய்வதால் (germination process), அவற்றில் அமிலத்தன்மை அதிகரித்து வைட்டமின் ‘சி’ சத்து அதிகமாகச் சேர்ந்திருக்கும். பொதுவாக, காலை நேரம் வெறும் வயிற்றில் அமிலத்தன்மை அதிகமாகச் சுரக்கும். அப்போது முளைகட்டிய தானியத்தை சாப்பிட்டால் அசிடிட்டி, அல்சர் போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே, இட்லி, தோசை, சப்பாத்தி, சாப்பாடு என ஏதாவது ஒரு காலை உணவுடன் வேகவைக்காத முளைகட்டிய தானியங்கள் சாப்பிடுவது நல்லது. ஒருவேளை காலையில் முளைகட்டிய தானியங்களை மட்டும் சாப்பிடுவதாக இருந்தால், அவற்றை வேகவைத்துச் சாப்பிடுவது பரிந்துரைக்கத்தக்கது.

* காலை, மதியம், இரவு என எந்த வேளையாக இருந்தாலும், முளைகட்டிய தானியங்களை மட்டும் அவ்வேளைக்கான உணவாகச் சாப்பிடக் கூடாது. ஏனெனில், முளைகட்டிய தானியத்தில் புரோட்டீன், விட்டமின் சத்துகள் கிடைத்தாலும், நம் உடலுக்கு அவை மட்டுமே போதாது. எனர்ஜி, கார்போஹைட்ரேட்ஸ், மினரல்ஸ் போன்ற சத்துகளும் சமச்சீர் அளவுகளில் தேவை என்பதால், முளைகட்டிய தானியங்களை மட்டும் ஒரு வேளைக்கான உணவாகச் சாப்பிடக்கூடாது.

முளைகட்டிய தானியங்களைச் சாப்பிடும்போது சிலருக்கு செரிமானக் கோளாறுகள் ஏற்படலாம் என்பதால், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அவற்றைத் தவிர்க்க வேண்டும். முளைகட்டிய பச்சைப்பயறு எளிதில் செரிமானம் ஆகக்கூடியது என்பதால், 5 - 10 வயதுக்  குழந்தைகளுக்கு அதை அடிக்கடி தரலாம். மற்ற வகை முளைகட்டிய தானியங்களை அவர்களுக்கு எப்போதாவது கொடுக்கலாம். 10 வயதுக்கு மேற்பட்டவர்கள் எல்லா வகையான முளைகட்டிய தானியங்களையும் சாப்பிடலாம். முளைகட்டிய தானியங்களை வறுத்து ஸ்நாக்ஸாகக் கொடுக்கும்போது குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

* தினமும் ஒரே வகை தானியத்தை முளைக்கவிட்டு சாப்பிடுவது தவறு. மாறாக, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தானிய வகைகளை உட்கொள்வதே சிறந்தது.

தானியங்களை ஊறவைக்க தூய்மையான தண்ணீரையே பயன்படுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும். இந்தக் காரணத்தினாலேயே, கடைகளில் ரெடிமேடாக கிடைக்கும் முளைகட்டிய தானியங்களைத் தவிர்த்து, வீட்டில் தயாரித்து சாப்பிடுவதே சிறந்தது.

* அசிடிட்டி, அல்சர், நெஞ்சு எரிச்சல் பிரச்னைகள் உள்ளவர்களும், கர்ப்பிணிகள் மற்றும் வயதானவர்களும் முளைகட்டிய தானியங்களை நிச்சயமாக வேகவைத்துதான் சாப்பிடவேண்டும்.''

இளைஞர்களுக்கு அவசியம்

இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள், டென்னிஸ், கபடி, ஓட்டப்பந்தயம் சிலம்பம் மற்றும் உடற்பயிற்சி இளைஞர்கள் கட்டாயம் முளை கட்டிய தானிய வகை ஏதாவது ஒன்றினை தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும். இது அவர்கள் விரும்பும் உடல் ஆரோக்கியத்தையும் கட்டுமஸ்தான உடலையும் தரும். தற்போது முளை கட்டிய பயறு எல்லா டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களிலும் கிடைக்கிறது. வாய்ப்பு இருப்பவர்கள் வீட்டிலேயே தயார் செய்து உண்பது சாலச் சிறந்தது.

குழந்தைகளுக்கு அத்தியாவசியம்

இன்றைய சூழலில் குழந்தைகளின் திண்பண்டங்கள் ரசாயனங்கள் நிறைந்தவையாக இருக்கிறது. நேரடியாக எண்ணெயில் பொரித்த உணவுகள், சிப்ஸ் வகைகள், பிஸ்கட் வகை உணவுகள், சாக்லெட் வகை உணவுகள், செயற்கை நிறமூட்டப்பட்ட மிட்டாய் வகைகள் என இதுபோன்ற திண்பண்டங்களை குழந்தைகள் தின்று, வளரும்போதே தங்களது ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொள்கிறார்கள். அதற்கு பெற்றோரும் முக்கிய காரணமாக இருக்கிறார்கள். அதனால் வளரும் பருவத்தில் உள்ள குழந்தைகளுக்கு கட்டாயம் முளைகட்டிய தானியங்களை நன்றாக வேக வைத்து தினமும் 30 முதல் 50 கிராம் வரை காலை உணவோடும், மதிய உணவோடும் தரலாம்.

முளைக்கட்டிய தானியங்களில் புதைந்திருக்கும் நன்மைகள்

இயற்கை உணவான தானியங்கள் புரதச்சத்தும் (Proteins), ஊட்டச்சத்தும் (Nutrients) நிரம்பியது. அவற்றை முளை கட்டப்படுவதால் செரிமானப்பிரச்சனையை ஏற்படுத்தும் பைரேட்ஸ் என்ற சத்து குறைக்கப்படும், சிக்கலான ஸ்டார்ச்சுகள் உடைக்கப்பட்ட எளிதில் செரிமானம் ஆகிடும்.

காய்கறி பழங்களை விட அதிக சத்து

பச்சைக் காய்கறிகள் (Vegetables) மற்றும் பழங்களை விட அதிக அளவில் வைட்டமின்கள், தாதுக்கள், அமினோ அமிலங்கள் மற்றும் அவசியமான கொழுப்பு (Fat) ஆகியவை உள்ளன. இவை எடையைக் குறைக்கவும், செரிமானத்தை சீராக்கவும் உதவுகிறது. உடலில் உள்ள தேவையற்ற நச்சுப் பொருட்கள் மற்றும் கொழுப்புகளை வெளியேற்றுவதில் முளை கட்டிய தானியங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

விட்டமின் :

முளை கட்டிய தானியங்களில், சாதாரண தானியங்களில் உள்ளதை விட 20 மடங்கு அதிகமான அளவில் ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். குறிப்பாக வைட்டமின் ஏ (Vitamin A), பி-காம்ப்ளக்ஸ், சி மற்றும் ஈ ஆகியவை அதிரிகரிக்கின்றன.

முளைவிட்ட பச்சைப்பயிறு சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுபாட்டில் இருக்கும். நோய்களைத் தீர்ப்பது மட்டுமல்ல, எந்தவித  நோய்களும் வராமல் தடுக்கும் சக்தியும் இந்த முளைவிட்ட தானியங்களுக்கு அதிகம் உண்டு. முக்கியமாக இது போன்ற முளை  கட்டிய பயிறுகளிலிருந்து வைட்டமின் சி என்ற உயிர் சத்து மிக அதிக அளவில் பெற முடியும்.

சரிவிகித உணவு :

தொடர்ந்து சரிவிகிதமான உணவை சாப்பிட முடியாத காரணத்தால், கொழுப்பை (Fat) எரிக்கக் கூடிய அமினோ அமிலங்கள் (Amin Acids) போதிய அளவு உற்பத்தி ஆகாமல் இருப்பது இன்று பலரும் எதிர் கொள்ளும் உடல் ரீதியான பிரச்னையாகும். முளை கட்டிய தானியங்களை உட்கொள்வதால் உடலுக்கு அவசியமான அமினோ அமிலங்களை போதிய அளவில் சுரக்கச் செய்ய முடியும்.

எப்போதும் கிடைக்கக் கூடியது:

காய்கறி பழங்கள் போன்றவற்றில் சில அந்தந்த சீசன்களில் தான் கிடைக்கும். ஆனால் தானியங்கள் அப்படியல்ல அத்துடன் இந்த முளைகட்டிய பயிரை வீட்டிலேயே எளிதாக தயாரித்து விடலாம் அதிக செலவும் ஏற்படாது.

இதனால் உடல் உறுதி, உடல் சுறுசுறுப்பு, மனத்தெளிவு, புத்திக் கூர்மை, ஞாபக சக்தி அதிகரிப்பு, மனத்தெளிவு போன்றவற்றுடன் அவர்களின் இளம் வயதிலயே உடல் எடை கூடாமல் இருக்கும் வண்ணமும் பார்த்துக் கொள்ள முடியும். முக்கியமாக கூந்தல் வளர்ச்சி, தோலுக்கு மினுமினுப்பு தருவதோடு கொலஸ்ட்டிராலை சமன்படுத்தும் வேலையையும் முளைகட்டிய தானியங்கள் செய்கின்றன. வீட்டிலேயே செய்யக்கூடிய ஓர் எளிய ஆரோக்கியமான உணவும் கூட.

பலர் காலை உணவாகவோ அல்லது நொறுக்குத் தீனியாகவோ முளைகட்டிய பயறுகளை உட்கொள்கின்றனர்.
அவை பார்வைத்திறனை மேம் படுத்துவதுடன் சருமத்துக்கும் புத்துணர்வு அளிக்கின்றன. இவற் றில் அதிக அளவில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால், உடலில் சுரப்பிகளைச் சீராகச் செயல்பட வைக்கின்றன. இவற்றில் உள்ள பொட்டாசியம் உடலில் ரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகிறது. இவற்றில் இருக்கும் வைட்டமின் ‘பி’, நியாசின், தைய மின் போன்ற சத்துகள் உடலில் ரத்த விருத்தியையும் ஏற்படுத்து கின்றன. உயர் ரத்த அழுத்தம், ரத்தசோகை போன்றவற்றைத் தவிர்க்க இவை உதவக்கூடும்.

வைட்டமின் ‘இ’ சத்து இவற் றில் அதிகமிருப்பதால் கருப்பை, சினைப்பையை சீராக இயங்கச் செய்யும். முளைகட்டிய பாசிப்பயறில் அதிகப் புரதச்சத்து இருப்பதால், வளரும் குழந்தைகளுக்கு அது நல்ல ஊட்டச்சத்தைக் கொடுக்கும். சருமப் பளபளப்புக்கு உதவுவதுடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் முளைகட்டிய வெந் தயத்தை ஒரு கிண்ணம் அளவுக்கு சாப்பிட்டு வர, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படும்.

முளைகட்டிய கொள்ளு உடல் சூட்டைத் தணிப்பதுடன் தொப்பை யைக் கரைத்து உடல் பருமனைக் குறைக்கிறது. உடல் மெலிவாக இருப்பவர்கள் தினமும் 100 கிராம் முளைகட்டிய எள், வேர்க்கடலை சாப்பிட்டு வர, உடல் எடை கூடும்; உடல் வலுப்பெறும்.
முளைகட்டிய கம்பு உடலுக்கு பலம் கூட்டும். ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்கள் தினமும் சாப்பிட்டு வர உடல் உறுதியாகும். முளைகட்டிய கம்புடன் தேங்காய்த் துருவல், சர்க்கரை சேர்த்து சாப்பிடலாம்; அரைத்து, காய்ச்சி கஞ்சியாகவும் குடிக்கலாம்.
கேழ்வரகை எட்டு மணி நேரம் ஊறவைத்து ஈரத்துணியில் கட்டி முளைகட்ட வைக்கலாம். அப்படியே பச்சையாகவும் சாப்பிடலாம். அரைத்துப் பாலாகவும், கூழாகவும், கஞ்சியாகவும் சாப்பிடலாம். இது உடலுக்கு பலம் கூட்டும். ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்கள் தினமும் சாப்பிட்டு வர உடல் உறுதியாகும்.

முளைகட்டிய பயறுகள், தானியங்களின் செரிமானம் தாமதப்படும் என்பதால் வயிற்றுக்கோளாறு உள்ளவர்களும் வயதானவர்களும் மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகு இவற்றை உட்கொள்ளலாம்.

இதில் புரதம், கலோரி, பாஸ்பரஸ், ஃபோலிக் ஆசிட், பொட்டாசியம், நார்ச்சத்து ஆகியவை அதிகளவில் இருக்கின்றன. மாவுச்சத்து, கொழுப்பு, கோலின், பீட்டா கரோட்டின், கால்சியம், இரும்பு, மெக்னீஷியம், தாமிரம், சோடியம் ஆகியவையும் உள்ளடங்கி இருக்கிறது. இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள் அன்றாட உணவில் எடுத்துக் கொள்ளலாம். எலும்பு வளர்ச்சிக்கும், ரத்த ஓட்டத்துக்கும், வளர்ச்சி குறைபாடு உள்ள குழந்தைகளின் தசைகளை வலுவாக்குவதற்கும் ஏற்றது முளைகட்டிய பச்சைப் பயறு.

முளைகட்டிய கொண்டைக்கடலை
முளைகட்டிய கொண்டைக் கடலையில் ஃபோலிக் அமிலத்துக்கு அடிப்படையான ஃபோலேட்டும், மக்னீசியமும் போதுமான அளவில் உள்ளது. இரும்புச்சத்து, சோடியம், செலினியம், துத்தநாகம், மாங்கனீசு, தாமிரம் போன்ற கனிமச்சத்துகள் உள்ளன. இது மாரடைப்பு காரணிகளைத் தவிர்க்கிறது. முளைகட்டிய கொண்டைக் கடலையை வேகவைத்து சாப்பிடுவது கர்ப்பிணிகளுக்கு மிகவும் நல்லது. இதனால் அவர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்கிறது. ஆன்ட்டி ஆக்சிடென்ட் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது. நீரிழிவு நோயாளிகள் தொடர்ந்து எடுத்து வந்தால் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க முடியும்.

முளைகட்டிய தட்டை பயறு
முளைகட்டிய தட்டை பயறில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ், ரிபோஃபிளேவின் போன்ற சத்துக்கள் அதிக அளவில் இருக்கிறது. இது உடலுக்கு நல்ல ஊட்டத்தை அளிக்கிறது. முளை கட்டிய தட்டை பயறுகளில் நார்ச்சத்து அதிக அளவில் இருப்பதால் உடல் எடையை குறைக்க உதவுகிறது. மேலும் இதில் வைட்டமின் ஏ, ஆன்ட்டி-ஆக்சிடென்ட்டுகள், ஃப்ளேவனாய்டுகள், பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் போன்ற கனிமங்கள் மற்றும் கரையா நார்ச்சத்து அதிகம் அடங்கியிருக்கிறது.

இத்துடன் அதிக அளவு நார்ச்சத்தும், புரதமும் இருப்பதால் மலச்சிக்கல் பிரச்னைகள் நீங்கி, வயிறு சம்பந்தப்பட்ட செரிமானம், மற்றும் வயிற்றுக் கோளாறுகளுக்கு சிறந்த உணவாக முளைகட்டிய தட்டை பயறு இருக்கிறது. முளைகட்டிய சோயா பயறு முளைகட்டிய சோயா பயறை எடுத்துக்கொள்ளும்போது உடலில் கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது. குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது. ஹார்மோன் பிரச்னைகளுக்கு உள்ளான பெண்கள் இதை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம். இதில் புற்றுநோயை வராமல் தடுக்கும் மூலக்கூறுகள் உள்ளது.

இதில், புரதம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஃபோலிக் ஆசிட், ஒமேகா 3 வகை கொழுப்பு, மாவுச்சத்து, தயாமின், ரிபோஃபோமின், பீட்டா கரோட்டின், மெக்னீசியம், தாமிரம், துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கியிருக்கிறது. (சோயா பயறு வகையை ஊற வைத்து முளைகட்டி சாப்பிடும்போது அதை நன்றாக வேக வைத்து பயன்படுத்த வேண்டும். இதை முளைகட்டிய சோயாவை நேரடியாக எடுத்துக் கொள்ளும்போது அஜீரண தொந்தரவுகள் இருக்கும்.)

முளைகட்டிய உளுந்து

முளை கட்டிய உளுந்தை வேகவைத்து சாப்பிடும்போது உடல் சோர்வு நீங்கி, உற்சாகம் தரும் உணவாக உளுந்து இருக்கிறது. குறிப்பாக, நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டவர்களின் உடல் சோர்வாக இருக்கும். அவர்கள் வலுப்பெறுவதற்கு உளுந்து உதவுகிறது. இது எலும்பு, தசை, நரம்புகளுக்கு ஊட்டமளிக்கிறது. மன அழுத்தத்தை போக்கி தூக்கமின்மை பிரச்னையை தீர்க்கிறது. இதில் அதிக அளவு புரதம் உள்ளது. பொட்டாசியம், கால்சியம், இரும்பு, நியாசின், தியாமின், ரிபோஃப்ளேவின், அமினோ அமிலங்களும் நிறைந்து காணப்படுகிறது.

முளைவிட்ட கொண்டைக்கடலையை தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும். இரும்பு, புரதம், சுண்ணாம்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் பல்வேறு ஊட்டச்சத்துகள் கொண்டைக்கடலையில் உள்ளன.

சிறுதானியமான கம்பை முளைகட்டிச் சாப்பிட்டால் உடலுக்குபலம் தரும். சத்துக்குறைபாடு உள்ளவர்கள் தினமும் கம்புப்பயறு சாப்பிட்டு வந்தால் உடல் உறுதியாகும். இது உடல் சூட்டைக் குறைக்கும். வயிற்றுப்புண், மலச்சிக்கல் பிரச்சனைகளைச் சரிசெய்யும். இதயத்தை  வலுவாக்கும் நரம்புகளுக்கு புத்துணர்வு தரும் இரத்தத்தைச் சுத்திகரிக்கும்.

முளைகட்டிய வெந்தயத்தில் வைட்டமின் சி, புரோட்டீன், நியாசின், பொட்டாசியம், இரும்புச்சத்து போன்றவை இருக்கின்றன. வெந்தயத்தில்  உள்ள மூலக்கூறுகளால் உடலில் இன்சுலின் சுரப்பு அதிகரிக்கும். அதனால் இது, சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதம், கொலஸ்ட்ரால் சேராமல் பார்த்துகொள்ளும். தொப்பை, உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் முளைகட்டிய வெந்தயத்தைச் சாப்பிடுவது நல்லது.

கொள்ளுப்பயறை முளைகட்டிச் சாப்பிட்டால் வைட்டமின் ஏ,பி,சி போன்ற சத்துகள் கிடைக்கும். இது கொலஸ்ட்ரால், தொப்பை, உடல் பருமன்  போன்றவற்றைச் சரிசெய்ய உதவும். நரம்பு, எலும்புக்கு ஊட்டமளிக்கும். மூட்டுவலியால் அவதிப்படுவர்கள் முளைகட்டிய கொள்ளுப்பயறைச் சாப்பிடுவது நல்லது.

உளுந்தை முளைக்கட்டி சாப்பிட்டால் மூட்டுவலியைப் போக்கும். சர்க்கரை நோயாளிகளும் முளைகட்டிய உளுந்தை சாப்பிடுவது நல்லது.  தாய்ப்பால் சுரப்பதை அதிகரிக்கச் செய்யும்.

முளைகட்டிய பச்சைப் பயறைச் (பாசிப்பயறு) சாப்பிட்டால், அதிகப் புரதம், கால்சியம் சத்து கிடைக்கும். இது வளரும் குழந்தைகளுக்கு ஊட்டம் தரும் உணவு. அல்சரைக் குணப்படுத்துவதோடு, நோய் எதிர்ப்பு சக்தி தரும்.

பாதாம் கொட்டைகள் போன்றவற்றை முளைக்கட்டி வைக்கும் போது, அதில் மறைந்துள்ள எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் வெளிப்படுகின்றன. பாதாம் கொட்டைகளில் முளைக்கட்டும் போது, உடலின் கொழுப்பு அளவை குறைக்கக் கூடிய லைபேஸ் என்ற என்சைமை உருவாக்குகிறது. ஆக்ஸிஜன் எதிர்பொருட்கள் மிகுந்திருக்கும் முளைக்கட்டப்பட்ட தானியங்களை தொடர்ந்து சாப்பிடுவதால், முதுமை தள்ளிப்போகும். முழுமையான ஊட்டச்சத்துக்கள் எளிதாக கிடைக்க, முளைக்கட்டிய பயிர் வகைகள் துணை புரிகின்றன.

முளை கட்டிய வெந்தயம் சாப்பிடுவதால், சர்க்கரை அளவு கட்டுப்படும். கர்ப்பப்பை நோய்கள், வெள்ளைப்படுதல் மற்றும் அல்சரை குணப்படுத்தலாம். ஒரு கப் அளவுக்கு எடுத்துக் கொள்ளலாம்.

கொள்ளு முளைப்பயிரை தொடர்ந்து சாப்பிட்டால், அதிக உடல் சூடு, தொப்பை, கெட்ட கொலஸ்ட்ரால், நீரிழிவு நோய், உடல் பருமன் போன்ற பிரச்னைகளுக்கு மிகவும் நல்லது.

முளைகட்டிய பயறு செய்யும் முறை
பச்சைப்பயறு 100 கிராம் அளவு எடுத்துக்கொண்டு அதனை ஒரு பாத்திரத்தில் நன்றாக நீரில் ஊற வைக்க வேண்டும். 10 மணி நேரம் ஊறவைத்து, பின்பு தண்ணீரை வடிகட்டி பயரினை ஒரு நல்ல சுத்தமான காட்டன் துணியில் வைத்து கட்டிவிட வேண்டும். பின்பு 12 மணிநேரம் கழித்து பார்க்கிறபோது முழுவதுமாக முளை கட்டிய பயறு தயாராகிவிடும். முளை கட்டிய தானியங்களை பயன்படுத்தும் போது அதனுடைய முழுமையான புரதச்சத்தை நாம் பெறமுடியும் ஏனெனில் முளைகட்டுவதால் அதில் அதிகஅளவு புரதச்சத்து இருக்கும்.


Share Tweet Send
0 Comments
Loading...