மகத்துமிக்க மதுரை!

மகத்துமிக்க மதுரை!

தமிழின் மதுரத்தை பெயரிலேயே கொண்ட ஊர். சங்ககாலச் சுவடுகளின் அழியாத வரலாற்று சாட்சியாக எஞ்சி நிற்கும் தொன்மத்தின் தொடர்ச்சி. தமிழ்நாட்டில் உள்ள தொன்மையான நகரம் மதுரை ஆகும்.  இந்நகரம் சுமார் 2500 ஆண்டுகள் பழமையானது, மதுரை வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. மல்லிகை மாநகர், கூடல் நகர், மதுரையம்பதி, கிழக்கின் ஏதென்ஸ் என்பன மதுரையின் வேறு பல பெயர்களாகும். மதுரை மாநகர் முற்காலத்தில் கடம்பவனம் என்ற வனப்பகுதியாக இருந்தது.கடம்பவனம் என்று தமிழ் இலக்கியங்களில் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும். மதுரை என்றாலே மண் மணம் மணக்கும் மதுரையின் பண்பாடுகளும், தமிழின் வரலாறும் கண்கூடவே தெரியும் அளவுக்கு மதுரையைச் சுற்றிலும் சுற்றுலாத் தளங்களும், அழகிய வழிபாட்டுத் தலங்களும் இருக்கின்றன.

உலகம் எங்கிலுமிருந்தும் இந்தியாவுக்கு சுற்றுலா வருபவர்கள் நிச்சயமாக மதுரைக்கு வருகை தருகின்றனர். அந்த அளவுக்கு மதுரை உலக புகழ் பெற்று விளங்குகிறது. தமிழ் நிலம் மற்றும் பண்பாட்டு பரப்பின் இதயம் என்று மதுரையைச் சொல்லலாம். மதுரை நகரும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் தமிழர்களின் பண்டைய வாழ்க்கை முறை, கலை அறிவு, நாகரிக மேன்மை இவற்றின் அழிக்க முடியாத அடையாளங்களாக நிமிர்ந்து நிற்கின்றன.

தமிழ் வளர்ச்சிக்குத் தனியே சங்கம் வைத்து வளர்த்த பெருமையும் இந்த நகரத்துக்கு உண்டு என்று பழமையான வரலாறுகள் தெரிவிக்கின்றன.இந்த நகரில் அமைந்துள்ள மீனாட்சியம்மன் கோவிலுக்காக இந்த நகரம் அதிகம் அறியப்படுகிறது. சுல்தான்கள், நாயக்கர்கள் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பல சாதனைகளையும் சோதனைகளையும் தாண்டி வந்தது இம்மதுரை நகரம்.

இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையை ஆட்சி செய்த விசயன் என்ற மன்னன் தன்னுடைய பட்டத்தரசியாக மதுராபுரி (மதுரை) இளவரசியை மணந்ததாக இலங்கையின் பண்டைய வரலாற்று நூலான மகாவம்சம் கூறுகிறது. பராசக்தியின் வடிவமான அன்னை மீனாட்சி பிறந்து, வளர்ந்து, ஆட்சிசெய்து, தெய்வமான இடமாகக் கருதப்படும் மதுரை, இந்து சமயத்தைச் சேர்ந்தவர்களின் மிக முக்கிய சக்திஸ்தலமாக விளங்குகிறது. இக்கோயிலில் நடக்கும் திருவிழாக்கள் சமுதாய ஒருங்கிணைப்பிற்கு ஒரு எடுத்துக்காட்டாக மட்டுமன்றி, அன்றைய மன்னராட்சியின் ஆட்சிச் சிறப்பையும் எடுத்துரைக்கும் வண்ணம் கொண்டாடப்படுகின்றன.

இன்றைய தமிழகத்தின் முதன்மை நகரங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது. மதுரை என்னும் சொல்லுக்கு இனிமை என்பது பொருள். தமிழும் மதுரையும் இனிமையின் இயல்பால் அமைந்தவை. தமிழ் என்றால் மதுரை; மதுரை என்றால் தமிழ். இங்ஙனம், இவை இரண்டும் பிரிக்க இயலாதவை. அதனாலேயே மதுரையைப் போற்றப் புகுந்த புலவர் எல்லாரும் தமிழோடு சேர்த்தே போற்றிப் புகழ்ந்தனர். கோவில்களுக்குப் பெயர் போனது மதுரை .மதுரையிலும், நகரைச் சுற்றிலும் பல கோவில்கள் உள்ளன. நகரின் மையப் பகுதியில் மீனாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது.

மீனாட்சி அம்மன்

மதுரை என்றாலே பலருக்கும் உடனடியாக நினைவுக்கு வருவது மீனாட்சி அம்மன் கோவிலாகும். சிவபெருமான் மற்றும் அம்மன் இருவருக்குமான கோவில்களில் முதன்மைச் சிறப்பு பெற்றது மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில். மதுரையில் மீனாட்சி பிறந்ததாகக் கருதப்படுவதால், மீனாட்சி சன்னிதானம் முதன்மையாக உள்ளது. அம்மனை வணங்கிய பின்பே சிவபெருமானை வணங்கும் மரபு கடைபிடிக்கப்படுகிறது.

இந்த ஆலயம் மீனாட்சி , சுந்தரேஸ்வரரை முதன்மை விகிரகங்களாகவும் கடம்ப மரத்தினை தலவிருட்ஷமாகவும் கொண்டுள்ளது. பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியனின் கனவில் சிவபெருமான் வந்ததால் அவன் கடம்பவனம் என்ற காட்டை அழித்து மதுரை மாநகரையும் இந்த சிவசக்தி தலத்தையும் அமைத்ததாகக் கருதப்படுகிறது.

மீனாட்சி அம்மன் கோவிலைச்சுற்றி நான்கு மாடங்கள் அமைத்துள்ளதால் நான்மாடக்கூடல் என்ற பெயரும் மதுரைக்கு உண்டு. சிவபெருமானின் அணிகலன்களில் ஒன்றான பாம்பு வட்டமாக தன் வாலை வாயினால் கவ்விக் கொண்டு இத்தலத்தின் எல்லையைக் காட்டியதால் ஆலவாய் என்ற பெயர் இத்தலத்திற்கு ஏற்பட்டது என்று ஒரு வரலாறு கூறுகிறது. விருத்தாசுரன் என்ற அசுரனை வென்ற தேவேந்திரன், தனது பிரம்மகத்தி தோஷம் நீங்க கடம்பவனத்தில் இருந்த இந்த சிவலிங்கத்தை பூசித்து தனது தோஷத்தை போக்கிக் கொண்டதாகவும் ஒரு வரலாறு கூறுகிறது.


குலசேகர பாண்டியன் காலத்தில் கட்டப்பட்ட  இந்த கோவிலானது திருமலை நாயக்கர் காலத்தில் முடிவு பெற்றது. மதுரை நகரின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துள்ள கோவிலை சுற்றிலும் அமைந்துள்ள நான்கு வெளி வீதிகள் தான் நகரின் அன்றைய எல்லையாக இருந்தது. தென்னிந்தியாவின் பழம்பெரும் புராதனக் கோவில்களில் இதுவும் ஒன்று. கிழக்கு, தெற்கு, வடக்கு மற்றும் மேற்கு கோபுரங்கள் வானுயர அமைந்திருப்பது காண்பதற்கு அழகூட்டுவதாக உள்ளது. நான்கு கோபுரங்களிலும் தெற்கு கோபுரம்தான் அதிக உயரமானது. 170 அடி உயரம் கொண்ட இக் கோபுரம் 9 நிலைகளைக் கொண்டது. இந்த கோவிலில் பொற்தாமரை குளம் உள்ளது.

மரகத கல்லால் ஆன மீனாட்சி அம்மன் இங்கு 32 சிங்கங்கள் 8 கல்யானைகள் தாங்கி நிற்கும் பிரம்மாண்ட கருவறையில் அமர்ந்துள்ளார். அழகிய சிற்ப வேலைப்பாடுகள் ஒவ்வொரு மண்டபத்துக்கும் வேறு பட்டு மிக அழகிய நுணுக்கங்களோடு தனிச் சிறப்புகளையும் உள்ளடக்கி காட்சி தருகிறது. வடக்கு ஆடி வீதியில் காணப்படும் இசைத் தூண்கள் , ஆயிரம் கால் மண்டபத்தில் இரு இசைத் தூண்கள் என மொத்தம் 7 இசைத் தூண்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருக்கின்றன. இவை மிக அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன.

பெரியார் பஸ் நிலையத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது மீனாட்சி அம்மன் கோவில்.

அழகர் கோவில்

இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் அழகர் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள அழகர் கோவில், பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டது. கோவிலை சுற்றி உள்ள மலைகளும், இயற்கை காட்சிகளும், நிலவும் அமைதியான சூழ்நிலையும் பெருமாளைத் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு திவ்யமான நிம்மதியை தரக் கூடியதாக உள்ளது. மஹாவிஷ்ணுக்காக அர்ப்பணிக்கப்பட்டிருக்கும் இந்த அழகர் கோயிலானது மதுரை மாநகரிலிருந்து 21 கி.மீ தூரத்தில் சோலைமலை அடிவாரத்தில் வீற்றுள்ளது.

இக்கோயில் பல நுணுக்கமான கற்சிற்ப வேலைப்பாடுகளுக்கும் கலையம்சம் பொருந்திய சிலைகளுக்கும் பிரசித்தி பெற்று விளங்குகிறது.கல்லால் ஆன ஒரு பிரமாண்ட விஷ்ணு சிலையை இங்கு பக்தர்கள் தரிசிக்கலாம். வெவ்வேறு கோலத்தில் காட்சியளிக்கும் விஷ்ணுவின் சிலைகளையும் இங்கு பார்க்கலாம். முழுக்க முழுக்க கல்லால் செய்யப்பட்ட சிலை கள்ளழகர் ஆகும். விஷ்ணுவின் பல அவதாரங்களும் சிலையாக வடிக்கப்பட்டு இந்த கோவிலில் அமைக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு கோவில்.

பாண்டியர்களின் சிற்ப கலைக்கு எடுத்துகாட்டாக இந்த கோவில் விளங்குகிறது. இந்த கோவிலில் 300 மீ உயரமுள்ள மலையில் சிலம்புரு, நுபுரு கங்கை எனப்படும் அருவிகள் உள்ளன. இங்கு வரும் பக்தர்கள் அருவியில் விழும் மூலிகை நீரில் தீர்த்தமாடியை பின்னரே கோவிலுக்குள் செல்கின்றனர். அழகர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. அதில் முக்கியமானது சித்திரை திருவிழா. சித்திரை திருவிழாவின் போதுபெருமாள் கள்ளழகர் திருக்கோலம் பூண்டு மதுரைக்கு எழுந்தருளும் நிகழ்வு கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.

இக்கோயிலுக்கு அருகிலேயே உள்ள இயற்கை ஊற்றிலிருந்து பெறப்படும் நீரால் கோயிலில் வீற்றிருக்கும் பஹவானுக்கு அபிஷேகம் செய்விக்கப்படுகிறது. கோயில் அர்ச்சகர் மூலம் நேரடியாக இந்த அபிஷேக நீர் ஊற்றிலிருந்து எடுத்துச் செல்லப்படுகிறது.

மீனாட்சி அம்மனின் சகோதரராக விஷ்ணு பஹவான் இந்த அழகர் கோயிலில்  எழுந்தருளியிருப்பதாக ஐதீகமாக நம்பப்படுகிறது. யாத்ரீகர்கள் மற்றும் பயணிகள் விஜயம் செய்யவேண்டிய ஒரு சுற்றுலா அம்சமாக இது திகழ்கிறது.இங்கு செல்ல மிகச் சிறப்பான போக்குவரத்து வசதிகள் உள்ளன.

கூடல் அழகர் கோயில்

தென்னிந்தியாவிலுள்ள பழமையான கோயில்களில் ஒன்றான இந்த கூடல் அழகர் கோயில் ஒரு வைணவத்திருக்கோயிலாகும். இங்கு மஹாவிஷ்ணுவின் திருவுருவம் கோயிலுக்கு எதிரிலேயே பிரமாண்டமாக வடிக்கப்பட்டிருக்கிறது.

நகரின் மையப்பகுதியிலேயே அமைந்துள்ள இந்த கோயிலில் மஹாவிஷ்ணு நின்ற, அமர்ந்த மற்றும் சாய்ந்த நிலைகளில் காட்சியளிக்கின்றார். ராமர் பட்டாபிஷேகத்தை சித்தரிக்கும் மரச்சிற்ப அலங்கரிப்புகளையும் இக்கோயிலில் பார்க்கலாம்.ஒன்பது கிரகங்களை குறிக்கும் நவக்கிரக தெய்வச்சிலைகளும் உள்ளன, பொதுவாக நவக்கிரக விக்கிரகங்கள் சைவத்திருக்கோயில்களில் மட்டுமே காணப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.  மதுரைக்கு விஜயம் செய்யும் ஆன்மீகப்பிரியர்கள் தவறாது தரிசிக்க வேண்டிய கோயில்களில் கூடல் அழகர் கோயில் ஒன்றாகும்.

சமணர் மலை

மதுரையை அடுத்த கீழக் குடி பகுதியில் அமைந்துள்ளது இந்த சமணர் மலை. தமிழ் சமணர்களின் இடமாக கருதப் படும் இந்த இடம் மிக பிரபலமானது. பல அழகிய கற் சிற்பங்களையும் கொண்டது. இங்கு சுற்றுலா பயணிகள் அதிகம் செல்லும் இடம் தாமரை கோவில் ஆகும்.

காந்தி மியூசியம்

1957ம் ஆண்டு பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களால் மதுரையில் ராணி மங்கம்மாளின் அரண்மனை இருந்த இடத்தில் காந்தி மியூசியம் அமைக்கப்பட்டது.சுமார் 13 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள  இந்த மியூசியத்தில் அமைதி பூங்கா என்றொரு இடம் இருக்கிறது. இங்கு காந்தியின் அஸ்தியில் ஒரு பகுதி வைக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் உள்ள ஐந்து காந்தி மியூசிங்களில் இந்த மதுரை காந்தி மியூசியமும் ஒன்று என்பது பெருமைக்குரிய விஷயமாகும்.

தேசப்பிதா காந்தியடிகள் தொடர்புடைய பல ஞாபகார்த்தப் பொருட்களை இந்த அருங்காட்சியகத்தில் பார்க்கலாம். காந்திஜியின் பல அரிய புகைப்படங்களும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.

இங்கு காந்தியின் வாழ்க்கையை வரலாற்றை படம்பிடித்து காட்டும் அரிய புகைப்படங்கள், காந்தி கொல்லப்பட்ட போது அவரின் மேல் இருந்த ரத்தக்கறை படிந்த துண்டு இன்றும் இந்த அருங்காட்சியகத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.மூக்குக் கண்ணாடி, அவர் நூற்ற ராட்டை மற்றும் நூல், கைக்குட்டை, செருப்பு, தலையணை, கம்பளி உள்ளிட்ட 14 பொருள்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

நாயக்க வம்சத்தின் மிகச்சிறந்த பெண் ஆட்சியாளரான ராணி மங்காவுக்கு சொந்தமான மாளிகையே காந்தி மெமோரியல் டிரஸ்ட் எனும் அறக்கட்டளை மையத்தின் மூலம் காந்தி மியூசியமாக மாற்றப்பட்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இங்கு காந்திய தத்துவ நெறிகள் மற்றும் காந்திஜி வாழ்க்கை வரலாறு தொடர்பான நூல்களும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த அருங்காட்சியக வளாகத்திலேயே உள்ள திறந்தவெளிக்கூடத்தில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், படக்காட்சி திரையிடல்கள், கலந்துரையாடல் கூட்டங்கள் போன்றவையும் நிகழ்த்தப்படுகின்றன. ஐக்கிய நாடுகள் சபையால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைதிக்கான அருங்காட்சியகங்களில் ஒன்று இந்த இடம். மதுரையில் இருந்து சென்னை செல்லும் சாலையில் காந்தி மியூசியம் அமைந்துள்ளது.  

திருமலை நாயக்கர் மஹால்

நாயக்கர்களின் அழகிய கட்டிடக் கலையை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அதற்கு ஒரு சிறந்த சான்று திருமலை நாயக்கர் மஹால். இது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் பின்புறத்தில் எட்டயபுரம் சாலையில் அமைந்துள்ளது. திராவிட இஸ்லாமிய கூட்டு கட்டிடக் கலையில் உருவாக்கப்பட்ட இந்த மாளிகை மிகவும் அழகாக கம்பீரமாக இன்று வரை நிலைத்து நிற்கிறது. ஆரம்பத்தில் கட்டப்பட்ட இந்த மாளிகையின் நான்கில் ஒரு பகுதியே இன்று எஞ்சியுள்ளதாக கூறப்படுகிறது.

திருமலை நாயக்கர் மகால் மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களில் ஒருவரான திருமலை நாயக்கரால்  17ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. மதுரையில் திருமலை நாயக்கர் அரண்மனை தென்னிந்திய அதிசயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த கட்டிடம் சுண்ணாம்பு மற்றும் மென்மை மற்றும் பளபளப்பான தோற்றத்தை பெறுவதற்காக முட்டையின் வெள்ளை கலந்த கலவையால் கட்டப்பட்டது. திருமலை நாயக்கர் மஹால் அதன் பெரிய தூண்களுக்கு புகழ் பெற்றது. தூண் உயரம் 82 அடி மற்றும் அகலம் 19 அடி. 58 அடி உயரமும், 248 பெரிய பிரம்மாண்டமான தூண்களும் கொண்ட இந்த மாளிகை மதுரைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்க்கும் இடமாகும்.

இந்த அரண்மனை மாளிகையில் தற்போது பயணிகளுக்காகவே சிலப்பதிகார இலக்கியம் மற்றும் திருமலை நாயக்கர் குறித்த ஆவண விளக்கபடக்காட்சிகள் நிகழ்த்தப்படுகின்றன.மாளிகையின் கூரையில் விஷ்ணு மற்றும் சிவனைப்பற்றிய ஐதீக புராணக்காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன.அற்புதமான கட்டிடக்கலை அம்சங்களை கொண்டுள்ள இந்த அரண்மனையில் ஸ்டுக்கோ பாணி அலங்கார அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. அக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பாத்திரங்கள் மற்றும் மரச்சாமான்களையும் இந்த அரண்மனையில் காணலாம்.அரண்மனை முகப்பு, நாட்டிய அரங்கம் மற்றும் பிரதான மண்டபம் போன்றவை இந்த அரண்மனையின் முக்கிய அம்சங்களாக பிரசித்தி பெற்றுள்ளன. 1860-70ம் ஆண்டுகளில் இந்த அரண்மனை மாளிகை ஆங்கிலேயரால் புதுப்பிப்பு செய்யப்பட்டிருக்கிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தென்கிழக்குத் திசையில் அமைந்துள்ளது. இந்த அரண்மனை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும்.

வைகை அணை

வைகை அணை சிறந்த சுற்றுலா ஸ்தலமாகும். இந்த அணை மதுரை மாவட்டம் தமிழக மற்றும் கேரள மாநில எல்லையில் அமைந்துள்ளது. இந்த அணையானது காண்பவர் மனதுக்கு இதம் தரக் கூடியதாக உள்ளது. மதுரை நகரங்களுக்குத் தேவையான குடிநீரையும் வழங்கி வருகிறது. வைகை அணையின் இருபுறமும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்ல வசதியாக அழகிய பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அணையின் முன்புறமுள்ள சிறிய பாலத்தின் வழியே இரு புறமும் உள்ள பூங்காக்களுக்குச் செல்ல முடியும். மதுரை மற்றும் திண்டுக்கல் பகுதிக்கான விவசாய நீராதாரமாக வைகை அணை திகழ்கிறது.மிக முக்கியமான சுற்றுலா அம்சங்களில் ஒன்று இந்த வைகை அணை.மேலும் அணைக்கருகிலேயே தமிழ்நாடு விவசாய ஆராய்ச்சி மையமும் அமைந்துள்ளது.
இந்த மையமானது நெல், பருத்தி, உளுந்து மற்றும் கொள்ளு போன்ற தானியங்கள் பற்றிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளது.வைகை நீர்மின்னுற்பத்தி திட்டமும் இந்த அணையில் இயங்கி வருகிறது. ரம்மியமான இயற்கை சூழலின் மத்தியில் இந்த வைகை அணை அமைந்துள்ளதால் சுற்றுலா ரசிகர்களுக்கு பிடித்த ஸ்தலமாக பிரசித்தி பெற்றுள்ளது.அணை நீர்த்தேக்கத்தில் படகுச்சவாரி செல்வதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. அமைதியான ஒரு பிக்னிக் சிற்றுலாவுக்கு ஏற்ற இடமாக இந்த வைகை அணைப்பகுதி அமைந்துள்ளது.

காலை 6 மணி முதல் இரவு 6 மணி வரை மக்கள் பார்வைக்காகஅனுமதிக்கப்படுகின்றனர் மதுரையிலிருந்து 1 மணி நேரத் தொலைவில் இது அமைந்துள்ளது.

வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம்

வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் எனும் இந்த குளம் 1646-ம் ஆண்டில் வெட்டுவிக்கப்பட்டிருக்கிறது. திருமலை நாயக்கரால் உருவாக்கப்பட்ட இந்த பிரமாண்டமான குளம் 16 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.இது மீனாட்சி அம்மன் கோயிலுக்கு கிழக்காக 5 கி.மீ தூரத்தில் உள்ளது. குளத்தின் மையத்தில் விநாயகர் சன்னதி வீற்றிருக்கிறது. திருமலை நாயக்கர் அரண்மனையை கட்டுவதற்கான கற்களை உருவாக்க மண் தோண்டியபோது உருவாகிய குளம் இது என்பதாகவும் பின்னாளில் படித்துறைகளுடன் கூடிய தீர்த்தக்குளமாக வடிவமைக்கப்பட்டதாகவும் கருதப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் ஜனவரி/பிப்ரவரி மாதத்தில் இந்த குளத்தில் தெப்ப உற்சவம் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த குளத்திற்கான நீர் வரத்து வைகை ஆற்றிலிருந்து வருவதாகவும் நம்பப்படுகிறது. மதுரைக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் இந்த வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தை பார்க்காமல் திரும்புவதில்லை.

காஜிமார் மசூதி

ஜங்ஷன் மற்றும் பெரியார் பேருந்து நிலையத்திற்கு அருகில் இந்த காஜிமார் மசூதி அமைந்துள்ளது. பழமையான மசூதியான இது ஹஸ்ரத் காஜி சையத் தாஜுதீன் அவர்களால் கட்டப்பட்டிருக்கிறது.13ம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர் இறைத்தூதர் முகமதுவின் வழித்தோன்றலாக அறியப்படுகிறார். மதுரையில் உள்ள மசூதிகளிலேயே மிக பழமையானதாக இது கருதப்படுகிறது. ஓமன் நாட்டிலிருந்து வந்த அவருக்கு பாண்டிய மன்னர் குலசேகர பாண்டியன் இந்த மசூதி அமைந்துள்ள இடத்தை கையளித்ததாக சொல்லப்படுகிறது. பெரிய மசூதி அல்லது பெரிய பள்ளிவாசல் என்று இது பிரசித்தமாக மதுரையில் அறியப்படுகிறது. 2500 பேர் ஒரே சமயத்தில் தொழுகை புரியக்கூடிய அளவிற்கு இடவசதியை கொண்டுள்ள இம்மசூதி இப்பகுதியில் மிகப்பெரியதாகும்.

பழமுதிர்ச்சோலை கோயில்

முருகப்பெருமானுக்கான இந்த பழமுதிர்ச்சோலை கோயில் மதுரை மாநகரில் அழகர் கோயிலுக்கு அருகில் சோலைமலை உச்சியில் அமைந்துள்ளது. முருகன் திருத்தலங்களில் முக்கியானதாக பிரசித்தி பெற்றிருக்கும் இக்கோயிலின் விக்கிரகம் தங்கத்தேரில் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்படும்போது ஏராளமான பக்தர்கள் இங்கு குழுமுகின்றனர்.நாபுரகங்கை எனும் இயற்கை நீரூற்று ஒன்றும் இந்த கோயிலுக்கு அருகிலேயே அமைந்துள்ளது. இதில் பக்தர்கள் புனிதநீராடலில் ஈடுபடுகின்றனர். மரம் மற்றும் பளிங்குக்கல்லில் செதுக்கப்பட்ட முருகப்பெருமானின் சிலைகளை இக்கோயிலில் பக்தர்கள் தரிசிக்கலாம். பிரம்மாண்டமான படிக்கட்டுகள் மூலமாக பக்தர்கள் கோயிலுக்கு ஏறிச்செல்லலாம்.

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதலாவது படை வீடாக திகழ்கின்றது. இங்குதான் முருகன் தெய்வானையை திருமணம் செய்து கொண்ட நிகழ்வு நடந்ததாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன. இக்கோவிலில் முருகன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார். இந்த கோவிலின் கருவறை ஒரு குகைக்கோவிலாகும். கருவறையில் ஐந்து குகைகள் மலையைக் குடைந்து அமைக்கப்பட்டுள்ளன. சுப்ரமணியசுவாமி சந்நிதி, துர்காதேவி சந்நிதி, கற்பக விநாயர் சந்நிதி, சத்தியகிரீஸ்வரர் சந்நிதி, பவளக்கனிவாய்ப் பெருமாள் சந்நிதி ஆகிய ஐந்து சந்நிதிகள் இங்கு உள்ளன.
மதுரைக்கு தென்மேற்கில் சுமார் எட்டு கி.மீ தொலைவில் உள்ளது.


இராஜாஜி பூங்கா

மதுரை மாநகராட்சி கட்டடமான அண்ணா மாளிகைக்கு அருகில் உள்ளது அழகிய இராஜாஜி  பூங்கா. மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான இந்த பூங்காவை மாநகராட்சியே பராமரித்து வருகிறது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை குடும்பங்களுடன் பொழுதுபோக்கை களிக்கும் இடமாக இராஜாஜி பூங்கா திகழ்கிறது. ராஜாஜி பூங்காவை அழகுச் சேர்க்கும் விதத்தில் மீன் அருட்காட்சியகம் ஒன்று பூங்காவின் உட்புறத்தில் அமைந்துள்ளது. அதில் நம் கண்களை கவரும் வகையில் அழகிய வண்ணமயமான மீன்களும், அவை பார்ப்பதற்கு வித்தியாசமான விதத்தில் அமைந்திருக்கும்.
மதுரையிலிருந்து ஏறத்தாழ 3கி.மீ தொலைவிலும், கோரிப்பாளையத்திலிருந்து ஏறத்தாழ 1கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள அழகிய பூங்காதான் இராஜாஜி பூங்கா ஆகும்.

குட்லாடம்பட்டி அருவி

குட்லாடம்பட்டி அருவி மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை அடுத்த குட்லாடம்பட்டி கிராமத்திற்கு வடக்கே சிறுமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. குட்லாம்பட்டியில் இருந்து 7 கி.மீ. தொலைவில் இருக்கும் சிறுமலை குன்றில் 87 அடி உயரத்திலிருந்து கொட்டும். இந்த அருவியில் வருடத்தில் ஐந்து முதல் எட்டு மாதங்கள் வரை தண்ணீர் வரத்து இருக்கும்.  இந்த நீர்வீழ்ச்சியில் குளிப்பது குதூகலமான அனுபவம். விடுமுறை மற்றும் திருவிழா நாட்களில் இந்தப் பகுதி மக்கள் இங்கு வந்து குளித்து கொண்டாடுவது வழக்கமாக உள்ளது. இந்த அருவியின் அருகில் 500 ஆண்டு பழமையான தாடகை நாச்சியம்மன் கோயிலும் அமைந்துள்ளது. மதுரையிலிருந்து கொடைக்கானல் செல்லும் சாலையில் 36 கி.மீ. தொலைவில் இந்த அருவி உள்ளது.

மதுரையிலிருந்து 160 கிலோமீட்டர் தொலைவில் தேக்கடி உள்ளது. மதுரை மாவட்டத்தில் முன்பு இருந்த கொடைக்கானல் இப்போது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது. ஊட்டிக்கு அடுத்து தமிழகத்தில் உள்ள இரண்டாவது பெரிய சுற்றுலா மலைவாசஸ்தலம் மதுரையிலிருந்து 120 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர்களை கொடைக்கானலில் காணலாம். கோக்கர்ஸ் வாக், ஏரி, தற்கொலைப் பள்ளத்தாக்கு, குறிஞ்சியாண்டவர் கோவில் என கொடைக்கானலுக்கு அணி செய்பவை பல.

மதுரை மாநகரிலிருந்து 48 கி.மீ தூரத்தில் இந்த அருப்புக்கோட்டை நகரம் அமைந்துள்ளது.மல்லிகைப்பூ தோட்டங்கள், பழமையான கோயில்கள், மசூதிகள் மற்றும் தேவாலயங்களுக்கு இந்நகரம் புகழ் பெற்றுள்ளது.மாநகரில் ஷாப்பிங் செய்வது ஒரு சுவாரசியமான அனுபவம் என்பதை மதுரைக்கு விஜயம் செய்தபின் புரிந்துகொள்வீர்கள். பொருட்களை வாங்குவதை விடவும் இந்த பழமையான நகரத்தின் கடைவீதிகளையும், பாரம்பரியமான அங்காடிகளையும் வேடிக்கை பார்த்தபடி நடப்பது அலுக்கவே அலுக்காது.இங்கு ஜவுளி மற்றும் கைவினைப்பொருட்கள் முக்கியமான சந்தைப்பொருட்களாக உள்ளன. பட்டு, பருத்தி, பத்திக் மற்று சுங்கிடி புடவைகள் இங்கு வெகு பிரசித்தம். மதுரை சுங்கிடிப்புடவைகள் பிடிக்காத பெண்கள் வெகு குறைவு எனலாம்.

மதுரை என்றாலே மீனாட்சி அம்மன் கோயிலை அடுத்து எல்லோருக்கும் ஞாபகம் வரும் ஒரு விஷயம் அங்கு கிடைக்கும் மணமணக்கும் உணவுகள் தான். ஆவி பறக்கும் மல்லி இட்லியும், கோழிக் குழம்பும் பரோட்டாவும், ஜிகிர்தண்டாவும் எத்தனை முறை வேண்டுமானாலும் சாப்பிடலாம்.குளிர்ந்த இதயம்' என பெயர் பொருள்படும் ஜிகிர்தண்டா மதுரை ஸ்பெஷல் உணவுகளில் முக்கியமானது. பால், பாதாம் பருப்பு, வெண்ணிலா ஐஸ்கிரீம் போன்றவை கொண்டு தயாரிக்கப்படும் ஜிகிர்தண்டாவை அருந்தும் போது அது அப்படியே சென்று நம் இதயத்தை குளிர்விப்பது போன்ற உணர்வு ஏற்படும். உலகத்தில் மக்கள் சாப்பிடும் மிகச்சிறந்த காலை உணவு எது என்று அறிவியலாளர்கள் ஆராய்ச்சி செய்கையில் அவர்கள் தென் இந்தியாவில் மக்கள் சாப்பிடும் இட்லி தான் மிக சிறந்த காலை உணவு என்ற முடிவுக்கு வந்துள்ளனர். அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த இட்லி மதுரையில் வேறெங்கும் கிடைக்காத மெதுமெதுப்புடன் கிடைக்கிறது.

தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பஸ் வசதி உண்டு.  ரயில் வசதியும் உள்ளது. மதுரை தெற்கே கன்னியாகுமரியில் இருந்தும், வடக்கில் பெங்களூர், சென்னை, மேற்கில் கோவை, கிழக்கில் ராமேஸ்வரம், புதுச்சேரி என பல்வேறு முக்கிய நகரங்களோடு பேருந்து மற்றும் ரயில் வழியாக இணைக்கப்பட்டுள்ளது. இந்த நகரங்களிலிருந்து குறிப்பிட்ட இடைவெளியில் அதிக அளவில் பேருந்து வசதிகள் உள்ளன.


Share Tweet Send
0 Comments
Loading...