மேதகு பிரபாகரன்

மேதகு பிரபாகரன்

பிறப்பு: நவம்பர் 26, 1954
இறப்பு: 18 மே 2009
தேசியம்: ஈழத்தமிழர்
மற்ற பெயர்கள்: தம்பி, ஈழத்து கரிகாலன்,எல்லாளன்.
பணி: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர்

பிறப்பு

1954 நவம்பர் 26-ம் தேதி தனது பெற்றோருக்கு நான்காவது மகனாக பிறந்தவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். ஜாஃப்னா தீபகற்பத்தில் அதாவது யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வல்வெட்டித்துறையில் இவர் பிறந்தார்.

இளமை

பிரபாகரன் தனது கல்வியை வல்வெட்டித்துறையில் ஊரிக்காடு எனும் இடத்திலுள்ள சிதம்பரா கல்லூரியில் 10ம் வகுப்பு வரை கற்றார். யாழ்ப்பாணத்தில் அந்நாட்களில் செல்வம் மிக்க குடும்பங்களில் பிறந்த பிள்ளைகள் ஆங்கிலம் கற்பதும் வெளிநாடுகளுக்கு வேலைக்குப் போவதும் அரச பணிகளில் அமர்வதுமே வாழ்வின் லட்சியமாகக் கொள்வது நடைமுறையாக இருந்து வந்தன. 
ஆனால் பிரபாகரன் அவர்களின் சிந்தனை வேறுவிதமாக இருந்தது. தந்தையுடன் செல்லும்போது சிங்களக் போலீஸார், அப்பாவித் தமிழர்களை அடித்து இம்சிப்பதையும் உதைப்பதையும் கண்ட அவருக்கு அது மனதில் பாதிப்பை ஏற்படுத்தியது.சிங்கள வன்முறையால் மனதில் பாதிப்பு...
1958 ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிரான இனவெறி தாக்குதலை சிங்களர்கள் நடத்தினர். பாணாந்துறையில் ஒரு இந்து குருவை உயிருடன் தீ மூட்டிய சம்பவமும், சிறுவர்களை உயிருடன் கொதிக்கும் தார் பீப்பாக்களினுள் தூக்கி வீசி கொன்ற சம்பவமும், இந்த சம்பவங்களைக் கண்டு, கேட்டு, அறிந்த பிரபாகரன் மனதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இவரின் பெற்றோர்க்கு நெருக்கமான விதவைதாய் தனக்கு நேர்ந்த துயரச் சம்பவத்தை பிரபாகரனின் சிறுவயதில் கூறிய போது அவர் கேட்ட கேள்வியே அவரின் பயணத்திற்கு அடித்தளம் அமைத்தது. "நாம ஏன் திருப்பி அடிக்கயில்ல" என்ற அவரின் கேள்வி அவரின் பெற்றோர், சுற்றத்தாரை வியப்பில் ஆழ்த்தியது.அன்றே அவரின் சிந்தனை ஓட்டத்தில் தமிழர் விடுதலையும், ஆயுத போராட்டமும் விதையாக விழுந்திருந்தது. இதன் பின் சிங்கள இனவெறியிலிருந்து தமிழ் மக்களை மீட்டெடுக்க வேண்டும் என்ற வேகம் அவருக்குள் பிறந்தது. அமைதி வழியை விட அவர்களது வழியிலேயே போய், ஆயுதத்தின் மூலம்தான் சிங்கள இனவெறியை ஒடுக்க முடியும் என்ற முடிவுக்கு அவர் வந்தார். நீ என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை உன் எதிரியே தீர்மானிக்கிறான் என்பதில் உறுதியாக இருந்தார். 
கரிகாலன்...
இதனால் சிறு வயதிலேயே தனது நண்பர்களுடன் சேர்ந்து கையெறி குண்டுகளை தயாரிக்கக் கற்றுக் கொண்டார் பிரபாகரன். இப்படி செய்தபோது ஒருமுறை குண்டு ஒன்று வெடித்துச் சிதறியதில் பிரபாகரனின் காலில் காயம் ஏற்பட்டு விட்டது. இதன் காரணமாகவே அவருக்கு கரிகாலன் என்ற பெயரும் ஏற்பட்டது. இதுவே அவரது புனைபெயராகவும் மாறியது. 
10ம் வகுப்புவரை படித்த பிரபாகரன் அதன் பின்னர் போராட்டக் களத்தில் குதித்ததால் படிப்பை விட்டு விட்டார். ஆனால் மகனின் போக்கு பெற்றோருக்கு கவலை தந்தது. சரியாக படிக்காமல் சுற்றி வரும் மகன் குறித்து அவர்கள் கவலை கொண்டனர். 
ஆனால் தங்களது மகன் ஒரு போராளி என்பது ஒரு நாள் அதிகாலையில்தான் வேலுப்பிள்ளை, பார்வதி தம்பதிக்குத் தெரிய வந்தது. அதிகாலை 3 மணியளவில் பிரபாகரன் வீட்டை போலீஸார் முற்றுகையிட்டு கதவைத் தட்டினர். அப்போது பிரபாகரன் வீட்டிலிருந்து தப்பி வெளியேறினார். ஒன்றும் புரியாமல் அவரது தாய் கதவைத் திறந்து பார்த்தபோது போலீஸார் குழுமியிருந்தனர். பிறகுதான் தனது மகன் போராளி இயக்கத்தைச் சேர்ந்தவர் என்று அவருக்குத் தெரிய வந்தது. 
இந்த சம்பவத்திற்குப் பின்னர் பிரபாகரன் மீண்டும் வீடு திரும்பவில்லை. தனது இயக்கத்தில் தீவிரமாக இறங்கி விட்டார். இதையடுத்து அவரது தந்தை, பிரபாகரன் இருந்த இடத்திற்குப் போய் வீட்டுக்குக் கூட்டி வந்தார். ஆனால் பிரபாகரன், என்னால் இனி உங்களுக்கு ஒரு பயனும் கிடையாது. என்னை என் போக்கில் விட்டு விடுங்கள். உங்களுக்கு என்னால் எந்தத் தொல்லையும் வரக் கூடாது என்று கூறி வீட்டை விட்டு வெளியேறினார். அதன் பின்னர் தனது இயக்கத்தில் தீவிரமானார். இந்த நிலையில், 1970ம் ஆண்டு தமிழ் மாணவர் பேரவை என்ற இயக்கம் தொடங்கப்பட்டது. சிங்கள அரசு கொண்டு வந்த தரப்படுத்தல் திட்டத்திற்கு எதிராக மாணவர்களை ஒன்று திரட்டி மாபெரும் ஆர்ப்பாட்டங்களைத் தமிழ் மாணவர் பேரவை நடத்தியது. 
தமிழ் மாணவர்கள் மத்தியில் பெரும் சக்தியாக இப்பேரவை வளர்ந்தது. ஆயுதம் தாங்கிய புரட்சியின் மூலமே சிங்கள இனவெறியர்களின் கொடுமைகளில் இருந்து தமிழர்கள் விடுதலை பெறமுடியும் என்பதை மெல்ல மெல்லத் தமிழ் இளைஞர்கள் உணரத் தொடங்கினர். தமிழ் மாணவர்கள் பேரவை பலம் பொருந்திய இயக்கமாக உருவெடுத்தது. இந்த அமைப்பின் ஆயுதம் தாங்கியப் பிரிவில் பிரபாகரன் இடம் பெற்றார். அப்பிரிவின் முக்கியஸ்தராக உருவெடுத்தார்.

புதிய தமிழ்ப் புலிகள் :
ஆரம்பத்தில் இயக்கத்தில் இருந்தவர்கள் பிரபாகரனின் சொந்த ஊரான வல்வெட்டித்துறையை சேர்ந்தவர்களாகவும், நண்பர்களாகவும் 25பேர் இருந்தனர். இவர்கள் குண்டு எறிவதற்கும், துவக்கு சுடவும் தானாகவே கற்றுக்கொண்டனர். இந்த காலகட்டத்தில் 1972இல் அவரின் 17வது அகவையில் புதிய தமிழ்ப் புலிகள் என்ற இயக்கம் தொடங்கப்பட்டது. புதிய தமிழ்ப் புலிகள் அமைப்பின் தலைவராகவும், ராணுவத் தளபதியாகவும் பிரபாகரன் முன்னின்றார். புதிய தமிழ்ப் புலிகளின் முதல் ராணுவ நடவடிக்கையாக 1975இல் பொன்னாலை வரதராஜ பெருமாள் கோவில் அருகே யாழ்ப்பாண மேயர் அல்பிரெட் துரையப்பா சுட்டுக் கொல்லப்பட்டார். அவருடைய வாகனத்திலேயே ஏறி போராளிகள் தப்பிச் சென்றனர். இதை முழுமையாக திட்டமிட்டு செயல்படுத்தியதில் பிரபாகரன் அவர்களின் பங்கு அதிகமானது.

தமிழீழ விடுதலைப் புலிகள்: 
1976இல் புதிய தமிழ்ப் புலிகள் அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற புதிய வடிவம் பெற்றது. இயக்கம் தொடங்கி இரண்டு ஆண்டுகளில் பல்வேறு ராணுவ நடவடிக்கை மூலம் சிங்கள அரசிற்கு பெரும் அச்சுறுத்தல் ஆனார் பிரபாகரன். எனவே 1978இல் ஜெயவர்த்தனா அரசு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை தடை செய்து மசோதா ஒன்றை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தது. விடுதலை போரை அழித்து ஒழிக்குமாறு பிரிகேடியர் வீரதுங்காவை வட மாகாணத்திற்கு அனுப்பினார் ஜெயவர்த்தனா. இந்த நிலையில் பிரபாகரன் சிந்தித்து ராணுவ நடவடிக்கையை விடுத்து இயக்கத்தை வலுப்படுத்தும் வேலையில் இறங்கினார். கொரில்லா அமைப்பையும், அரசியல் அமைப்பையும் விரிவுபடுத்தினார். 1979 மற்றும் 80களில் தமிழீழ விடுதலைக்கு குரல் கொடுக்குமாறு சர்வதேச அளவில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கிளைகளை உருவாக்கினார். 1981, மே 31 இல் புலிகளின் மேல் நடவடிக்கை என்ற பெயரில் வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் பொது நூலகம் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதில் 7 பேர் இறந்தனர். 94000 விலைமதிப்பில்லாத நூல்கள் அழிந்தன. அதே 1981இல் புலிகள் காங்கேசன்துறை வீதியில் இராணுவ வாகனம் ஒன்றை தாக்கி ஆயுதங்களை கைப்பற்றினார்கள். இதில் இரண்டு ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இதுவே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதல் ராணுவ நடவடிக்கை. இதன் பின் பல்வேறு நடவடிக்கை மூலம் சிங்கள அரசிற்கும், தமிழின துரோக அமைப்பிற்கும் பதிலடி கொடுத்து வந்தனர். 1983 ஜூன் இல் பிரபாகரன் சிங்கள அரசின் வெற்று தேர்தல் அரசியலில் இருந்து மக்கள் வெளிவர வேண்டும் எனவும், வெகுசன ஆயுதப் போராட்டத்திற்கு அணி திரளுமாறும் வேண்டுகோள் விடுத்தார்.

திருமணம் :
1983, ஜனவரியில் சிங்கள அரசின் கட்டற்ற வன்முறைக்கு எதிராக யாழ்ப்பாண பல்கலைக்கழகம் மாணவிகள் நான்கு பேர் உண்ணா விரதம் இருந்தனர். அவர்களில் ஒரு மாணவியே புங்குடு தீவைச் சேர்ந்த மதிவதனி. இவரையே 1984 அக்டோபர் 1இல் திருப்போரூர் முருகன் கோவிலில் திருமணம் செய்துகொண்டார் பிரபாகரன். இவர்களுக்கு சார்லஸ் அந்தோணி, துவாரகா, பாலசந்திரன் என மூணு குழந்தைகள் இருந்தனர். 

திம்பு பேச்சுவார்த்தை :

திம்பு பேச்சுவார்த்தை தோல்விக்கு பின் தமிழீழ அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் இந்தியாவிலிருந்து நாடுகடத்தப்பட்டார். அதேவேளை தலைவர் பிரபாகரனும் தமிழக காவல்துறையால் கைது செய்யப்பட்டார். பின் எம். ஜி. ஆர் அவர்களால் விடுவிக்கப்பட்ட பிரபாகரன் அவர்கள் பழ. நெடுமாறன் அவர்களின் இல்லத்தில் சிறிதுகாலம் தங்கினார். தமிழ்நாட்டில் இருக்கும் வரை போராட்டம் வளராது என்று எண்ணி 1987 ஜனவரியில் தமிழீழம் திரும்பினார்.

இந்திய -இலங்கை ஒப்பந்தம் :

1987 ஆகஸ்ட் 9இல் சில இந்திய அதிகாரிகள் பிரபாகரனை சந்தித்து ராஜிவ் காந்தி உடனான பேச்சுவார்த்தைக்கு அழைப்புவிடுதனர். முதலில் தமிழகம் வந்து எம்.ஜி.ஆர் அவர்களை சந்தித்துவிட்டு அதன் பின் டெல்லி சென்றார். அங்கு அவருக்கு இந்திய- இலங்கை ஒப்பந்தம் பற்றி சொல்லப்பட்டது. இதை ஏற்க முடியாது என்று பிரபாகரன் மறுத்தார். பிரதமர் ராஜிவ் காந்தியை சந்திக்க எண்ணினார். ஆனால் சந்திக்க வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. புலிகளின் ஒப்புதல் இன்றியே 1987, ஆகஸ்ட் 12இல் இந்திய - இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்திய ராணுவம் அமைதிப்படை என்ற பெயரில் தமிழீழம் பகுதிக்கு அனுப்பப்பட்டது. இந்திய அமைதிப்படை நடவடிக்கை முழுக்க சிங்கள அரசின் நடவடிக்கைக்கு சாதகமாக உள்ளது எனக் கூறி ஐந்து அம்ச கோரிக்கையை முன் வைத்து  1987 செப்டம்பர் 15இல் லெப்டினன்ட் கேணல் திலீபன் உண்ணா விரதம் தொடங்கினார். கோரிக்கையை இந்தியா மற்றும் இலங்கை அரசுகள் ஏற்காமல் போகவே திலீபன் அவர்கள் செப்டம்பர் 26 அன்று உயிர் நீத்தார். திலீபன் மரணத்தைத் தொடந்து பருத்தித்துறை கடற்பரப்பில் லெப்டினன்ட் புலேந்திரன், குமரப்பா உட்பட 17 போராளிகள் சிங்கள ராணுவத்தால் கைது செய்யப்பட்டனர். அமைதி உடன்படிக்கை காலத்தில் கைது செய்தது தவறு எனவும் அவர்களை விடுவிக்க வேண்டும் எனவும் பிரபாகரன் கேட்டுக்கொண்டார். ஆனாலும் இந்திய -இலங்கை அரசு அவர்களை விடுவிக்காமல் வதை முகாம் அழைத்துச் சென்றனர். இதன்பொருட்டு போராளிகள் 17 பேரும் சயனைட் உண்டனர். இதில் 12பேர் மரணித்தனர். இது பற்றி பிரபாகரன் அவர்கள் விடுத்த அறிக்கையில் "எமது மக்களையும் போராளிகளையும் காக்கும் பொறுப்பில் இருந்து சிங்கள இந்திய அரசு தவறியது. இனி யுத்த நிறுத்தத்தை பேணுவதில்லை" என்று அறிவித்தார். இதன் பின் அமைதி பேச்சுவார்த்தை முறிந்து ஆயுத போராட்டம் தொடங்கியது. புலிகள் சிங்கள, இந்திய ராணுவத்தை ஒரு சேர எதிர்த்து போரிடத் துவங்கினர். 1988இல் அன்னையர் முன்னணி அமைப்பாளர் அன்னை பூபதி அவர்கள் இந்திய ராணுவத்திற்கு எதிராக மேற்கொண்ட உண்ணாவிரதமும் இந்திய அரசால் ஏற்கப்படாமல் அன்னை பூபதி அவர்களும் 1988 ஏப்ரல் 19இல் உயிர் நீத்தார். புலிகளின் பலம் பெருகி இருந்தது. மக்களின் பெரும் ஆதரவும் இருந்ததாலும் புலிகள் இந்தியபடைகளை சிதறடித்தனர். 1989இல் புதிய சனாதிபதி பிரேமதாச மீண்டும் அமைதி பேச்சு வார்த்தைக்கு அழைத்தார். இந்தியப் படையை திருப்பி அனுப்ப எண்ணிய பிரபாகரன் அவர்கள் இந்த பேச்சுவார்த்தைக்கு சம்மதித்தார். இதன்படி இந்திய அமைதிப்படை 1990இல் வெளியேறியது. அதன் பின் தமிழீழம் புலிகள் வசம் வந்தது. பிரபாகரன் அவர்கள் தமிழீழத்தை கட்டமைக்கத் தொடங்கினார்.
தமிழீழம்:

"பெண்கள் சுதந்திரமாக, கௌரவமாக, சமத்துவமாக வாழ வழி செய்யும் சமூகமே உண்மையில் ஒரு விடுதலை பெற்ற சமூகமாக இருக்க முடியும்" என்பார் பிரபாகரன். அதற்கு ஏற்ப பெண்களையும் விடுதலைப் போரில் பங்கு பெறச் செய்தார். 1987 போரில் பெண்களும் யுத்தத்தில் பங்கு பெற்றனர். பங்குனி 8 பெண்கள் தினமாகவும் கொண்டாடப்பட்டது. அதே போல் பாலியல் குற்றங்களை மிக தீவிரமாக எதிர்த்த பிரபாகரன் அவர்கள் அதற்கு கடுமையான தண்டனை வழங்கினார்.
அதுமட்டும் இன்றி விடுதலைப் புலிகள் மாணவர் அமைப்பு, தமிழர் புணர்வாழ்வு கழகம், செஞ்சோலை சிறுவர்கள் இல்லம், விடுதலை புலிகள் கலை, பண்பாட்டு கழகம், தமிழீழ வைப்பகம், புலிகள் வானொலி சேவை, தமிழீழச் சட்டக் கல்லூரி, தமிழீழ கல்வி மேம்பாட்டுப் பேரவை, காந்தரூபன் அறிவுச்சோலை, தமிழீழ காவல் துறை, சூழல் நல்லாட்சி ஆணையம், வனவள பாதுகாப்பு பிரிவு, விளையாட்டு துறை, பத்திரிக்கை என்று ஒரு சிறப்பான கட்டமைப்பை உருவாக்கினார் பிரபாகரன்.

ஈழப்போர் இரண்டாம்பகுதி :

பிரேமதாச காலத்தில் எடுக்கப்பட்ட அமைதி பேச்சுவார்த்தை முறிந்தது. அதன் பின் 1994 இல் பதவிக்கு வந்த சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்கா புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மீண்டும் சிறிதுகாலம் அமைதி நிலவியது. ஆனால் 1995இல் இலங்கை படை புலிகள் வசமிருந்த யாழ்ப்பாணம், கிளிநொச்சி போன்ற பகுதிகளை கைப்பற்றியது. இதன் பின் புலிகள் 1998இல் தாக்குதல் நடத்தி வன்னிப் பகுதிகள் பலவற்றை மீளப் பெற்றனர். முக்கியத்துவம் வாய்ந்த ஆனையிரவு தளம் கைப்பற்றப்பட்டது. ஆனாலும் யாழ்ப்பாணம் கைப்பற்றவில்லை. 2001இல் ரணில் விக்கிரமசிங்கே பொறுப்புக்கு வந்ததும் அவரும் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினார். மீண்டும் அமைதிகாலம் நிலவியது. எனினும் 2005இல் ஆட்சிக்கு வந்த மஹிந்தா ராஜபக்சே புலிகள் மேல் வன்மம் கொண்டு செயல்பட தொடங்கினார். இதன் பொருட்டு 2006 ஜூலை முதல் மீண்டும் முரண் நிலை தொடங்கியது. இதுவே புலிகளின் இறுதி போராக அமைந்தது. இந்த இறுதி போரில் புலிகள் தலைவர் பிரபாகரன் மே 18 இறுதி நாள் போரில் கொல்லப்பட்டதாக இலங்கை அறிவித்தது.

பிரபாகரன் பொன்மொழிகள்:
1. நாம் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை நம் எதிரிகளே தீர்மானிக்கிறார்கள்.

2. சத்தியத்திற்காக சாகத் துணித்தால் ஒரு சாதாரண மனிதப்பிறவியும் சரித்திரம் படைக்க முடியும்.

3. விடுதலை போராட்டம் என்பது ஒரு ரத்தம் சிந்தும் ரணகளம்.

4. சுதந்திரம் இல்லாமல் மனித வாழ்வில் அர்த்தமே இல்லை.

5. லட்சியைத்தால் ஒன்றுபட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது.

6. விழிப்பு தான் விடுதலைக்கு முதல் படி.

7. இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி.

8. ஒரு உயிர் உன்னதமானது என்பதை அறிவேன். ஆனால் உயிரினும் மேலானது எமது உரிமை, எமது சுதந்திரம்.

9. நான் பெரிது, நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிது என்று வாழுங்கள். நாடு பெரிதானால் நாம் எல்லோரும் சிறியவர்களே.

10. அரசியல் என்பது மக்கள் மீது ஆட்சியை அதிகாரத்தை செலுத்துவதில்லை. அரசியல் என்பது மக்களுக்கான சேவை.

11. பெண் விடுதலை இல்லாமல் மண் விடுதலை இல்லை. பெண் விடுதலை என்பது அரச அடக்குமுறையிலிருந்தும், சமூக ஒடுக்குமுறையிலிருந்தும், பொருளாதார சுரண்டலில் இருந்தும் விடுதலை பெறுவதாகும்.

12. யாரும் அணியத் துணியாத உடை இந்த சீருடை. அதனால் நான் எப்போதும் இதில் இருக்கிறேன். சுதந்திரம் என்பது பேரம் பேசி பெற்றுக்கொள்ளும் பண்டமல்ல. அது ரத்தம் சிந்தி வெற்றிக்கொள்ள வேண்டிய உரிமை. 


பிரபாகரன் சிற்பம்

நாகப்பட்டினம் மாவட்டத்தில், தெற்குப்பொய்கைநல்லூர் எனும் ஊரில் உள்ள அய்யனார் கோயிலில் பிரபாகரனுக்கு சுதை சிற்பம் அமைக்கப்பட்டது. இரண்டு குதிரை சிலைகளும், ஒரு யானை சிலையும் அமைக்கப்பட்டு அதில் ஒரு குதிரை வீரன் சிலையும், மற்றொரு குதிரை அருகே பிரபாகரன் சிலையும் அமைக்கப்பட்டது. பிரபாகரன் கையில் துப்பாக்கியுடனும், விடுதலைப் புலிகள் சீருடையுடனும் இருப்பதாக அமைக்கப்பட்டிருந்தது.
2015 சூலை மாதம் இந்த சிலை இரவில் அகற்றப்பட்டு சிமெண்ட் தளம் போடப்பட்டது. ஊர்மக்கள் இவ்வாறு காவல் துறையினரே செய்தனர் என தெரிவித்தனர்.
விழுப்புரம் மாவட்டம், சடையாண்டிகுப்பம் எனும் ஊரில் உள்ள ஐயனார் கோயிலில் வீரப்பன் மற்றும் பிரபாகரனின் சுதை சிற்பங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. 2010ல்கட்டப்பட்ட ஐயனார் கோயிலில் இவ்வாறு சிலைகள் இருப்பதை அறிந்த காவல்துறையினர் மக்களிடம் அவற்றை அகற்ற கூறியுள்ளனர்.
தெற்குப் பொய்கைநல்லூர் கிராமத்தில் உள்ள அய்யனார் கோயிலில் இருந்து பிரபாகரன் சிலை அகற்றப்பட்டது குறித்து சூன் 2015ல்சீமான் கண்டன அறிக்கை வெளியிட்டார். அதில் பிரபாகரன் சிலையை மீண்டும் நிறுவ நாம் தமிழர் கட்சி முயலும் என்றார்.வைகோவும் இந்த சிலை உடைப்பிற்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக தெரிவித்தார். 


Share Tweet Send
0 Comments
Loading...