ம.பொ.சி பிறந்த தினம் இன்று

ம.பொ.சி பிறந்த தினம் இன்று

மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம் எனப்படும் ம.பொ.சி சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள சால்வன் குப்பதில் சூன் 26, 1906 இல் பிறந்தார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ம. பொ. சி மூன்றாம் வகுப்போடு பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டு குழந்தை தொழிலாளர் ஆனார். இவருக்கு  31வயதில் திருமணம் நடந்தது. விடுதலைப் போராட்டத்தில் பங்கு பெற்று சிறைவாசம் அடைந்தார். காங்கிரஸ் இயக்கத்தின் சிறந்த சொற்பொழிவாளராகவும் இருந்தார். தன் வாழ்நாளில் 700 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்தார். அந்த சிறை வாழ்க்கையை சிலப்பதிகாரம் கற்க பயன்படுத்திக்கொண்டார். பின்னாளில் சிலம்பு செல்வர் என அழைக்கப்பட இதுவே அடித்தளம்.


தமிழ்நாட்டைத் தாய்நாடாகவும், தமிழ் மொழியை தாய்மொழியாகவும் கொண்டு வாழும் தமிழ்நாட்டின் நிரந்தரக் குடிகள் அனைவரும் தமிழராகக் கொள்ளப்படுவர். தமிழர் எங்கெல்லாம் பெருவாரியாக வசிக்கிறார்களோ அந்தத் தொடர்ச்சியான பிரதேசங்கள் தமிழ்நாடாகக் கொள்ளப்படும்' என்றும், தமிழர் தனித்தேசிய இனம், தமிழ்நாடு தமிழர்களின் தாயகம் என்றும் கூறி 1946ஆம் ஆண்டில், தமிழ்த்தேச விடுதலைப் போராட்டத்தை தொடங்கி வைத்தவர் ம.பொ.சி. அவர்கள் ஆவார். 1945 ஆம் ஆண்டு ம.பொ.சி. தமிழ்முரசு எனும் திங்கள் இதழைத் தொடங்கினார். ஒன்றரை ஆண்டுக்காலம் அவ்விதழ் மூலம் புதிய தமிழகம் எனும் தனது கருத்தாக்கத்தை ம.பொ.சி. பரப்புரை செய்துவந்தார்.  தமிழர் தாயகத்தை படைக்க தமிழரசுக் கழகம் என்ற இயக்கத்தை 1946ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் நாளில் தொடங்கினார்.


ஸ்ரீராமுலு போராட்டத்தின் விளைவாக அமைந்த ஆந்திரா மாநிலத்தின் தலைநகராக சென்னை வேண்டும் என்று தெலுங்கு மக்கள் மெட்ராஸ் மனதே என்னும் முழகத்துடன் போராட்டம் தொடங்கினர். தமிழகத்தில் இதை பற்றிய விழிப்புணர்வு இன்றி அனைவரும் இருந்த நிலையில் ம. பொ. சி அவர்கள் தலை கொடுத்தேனும் தலைநகரம் காப்போம் என்னும் முழகத்துடன் போராட்டம் தொடங்கினார். இவரின் போராட்டத்தின் பயனாகவே சென்னை  தமிழகத்திற்கு கிடைத்தது. மேலும் கோலார் பகுதியை கர்நாடகாவும், திருப்பதி, திருத்தணி பகுதிகளை ஆந்திராவும், பீர்மேடு, தேவிகுளம், செங்கோட்டை, கன்னியாகுமாரி போன்ற பகுதிகளை கேரளாவும் கேட்டு நின்றன. ம. பொ. சி அவர்கள் இதனை தடுக்க  எல்லை போராட்டம் தொடங்கினார். இவரின் போராட்டத்தின் விளைவாக  திருத்தணி, செங்கோட்டை, கன்னியாகுமாரி போன்ற பகுதிகள்  தமிழகத்திற்கு கிடைத்தன. ஆயினஆயினும் பிற பகுதிகள் கைவிட்டுச் சென்றன.


மேலும் மெட்ராஸ் மாகாணம் என்ற பெயரை தமிழ்நாடு என்று மாற்ற வேண்டும் என்று போராடினார். இவரின் போராட்டமே தமிழ்நாடு என்ற பெயர் கிடைக்க முதல் காரணம். இதனை அறிஞர் அண்ணா அவர்கள் தமிழ்நாடு பெயர் மாற்றம் குறித்த சட்டமன்ற கூட்டத்தொடரின் போது குறிப்பிட்டு ம. பொ. சி அவர்களை பெருமைப்படுத்தினார்.


ம. பொ. சி அவர்கள் பாரதி குறித்தும், சிலப்பதிகாரம் குறித்தும், வள்ளலார் குறித்தும், திருக்குறள் குறித்தும், வ.உ. சி குறித்தும் பல நூல்கள் எழுதியும் உள்ளார். சிலம்பு செல்வர், எல்லை காவலன், தமிழ்த்  தேசியத் தந்தை என பல பெயர்களில் பெருமையாக அழைக்கப் படும் ம. பொ. சி அவர்கள் அக்டோபர் 3, 1995 இல் இறந்தார். எல்லை காவலர் ம. பொ. சி.


Share Tweet Send
0 Comments
Loading...