கூர்க் - இந்தியாவின் ஸ்காட்லாந்து

கூர்க் - இந்தியாவின் ஸ்காட்லாந்து

இயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் கூர்க் இந்தியாவின் ஸ்காட்லாந்து.

மலைப்பிரதேசம் கர்நாடக மாநிலத்தின் பிரசித்தி பெற்ற சுற்றுலா ஸ்தலங்களில் ஒன்று கூர்க்.கூர்க் அல்லது குடகு என்று
அழைக்கப்படுகிறது.இந்த அழகை காண ஆண்டுதோறும் பல
ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கூர்க் சுற்றுலா வருகின்றனர்.குடகு மலையில் வெப்பநிலை 20 டிகிரி குறைவாகவே இருக்கும். இங்கு சுற்றுலா வர சிறந்த காலம் நவம்பரிலிருந்து ஏப்ரல் வரை. இங்கு நாம் பல வகையான பறவைகளை காணலாம்.

ஸ்காட்லாந்தின் அதே இயற்கை அழகு,அதே வசீகரிப்பு,அதே தட்பவெப்பம் கொண்டது கூர்க். எங்கு திரும்பினாலும் பசுமையான மலைகள், சிலிர்க்க வைக்கும் அருவிகள், மணக்கும் காபி தோட்டங்கள்.என இயற்கை நம்மை ஈர்க்கிறது. இந்த இடம் பெயருக்கு ஏற்றார் போல கண்ணுக்கு அழகாக நம்மை வெளிநாட்டில் இருப்பது போன்ற உணர்வுடனே வைக்கிறது.

கடல் மட்டத்திலிருந்து 900 மீட்டரிலிருந்து 1715 மீட்டர் வரையான உயரத்தில் இது அமைந்துள்ளது. கர்நாடகா மாநிலம், மைசூருக்கு மேற்கே 120 கிலோமீட்டர் தூரத்தில், மேற்குத்தொடர்ச்சி மலையின் அமைந்திருக்கிறது. இதன் பரப்பளவு 4,100 சதுர கி.மீ. ஆகும். இம்மாவட்டத்தின் தலைநகர் கொடகு மாவட்டம், மடிகேரி வட்டம்.
கூர்க் மாவட்டம்,அந்த மாநிலத்தில் மிக முக்கியமான சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. கர்நாடக மாநிலம்தான் என்றாலும், இங்கே கன்னடம் தாய்மொழி அல்ல. குடகு மக்களின் தாய்மொழியான குடவா மொழியைத்தான் அனைவரும் பேசுகிறார்கள்.  ஆசிய யானைகள், புலிகள், சிறுத்தை மற்றும் காட்டுப் பன்றிகள் உள்ளிட்டவை இந்த பகுதி காடுகளில் காணப்படுகின்றன.

குடகு மலையின் மேற்கு மற்றும் கிழக்குப் பக்கச் சரிவுகளில் அமைந்த ஆரவாரமில்லாத, மிதமான வேகத்தில் நகரும் சிறிய நகரங்களையும், இயற்கை அழகு கொஞ்சும் அமைதியான கிராமப்புறங்களையும் காணலாம். சர்வதேச அளவில் கொடகு பிரதேசம்  சிறந்த காபி பயிர் செய்யும் பகுதியாக புகழ் பெற்று விளங்குகிறது. காபி பயிர் செய்வதற்கேற்ற பருவநிலை இங்கு காணப்படுவதே இதற்கு காரணம். ஆங்கிலேயர்களே இங்கு முதலில் காபி பயிரை அறிமுகப்படுத்தினர்.
கூர்க் இந்தியாவில் மிகப்பெரிய காஃபி உற்பத்தி செய்யும் மாவட்டமாகும். காஃபியைத் தவிரத் தேன், ஏலக்காய், மிளகு மற்றும் ஆரஞ்சு போன்றவையும் கூர்க் பகுதியின் விளைபொருட்களாக உள்ளன. கூர்க் பகுதியில் காணத்தக்க சிறந்த இடங்களில் அழகிய காஃபித் தோட்டங்களும் அடங்கும். இந்தியாவில் அதிக மழைப்பொழிவு கொண்ட இடங்களில் இதுவும் ஒன்றாகும். காஃபி பயிர் செய்வதற்கேற்ற பருவநிலை இங்கு காணப்படுவதே இதற்குக் காரணம்.கூர்க்கில் இரு வகையான காபிகள் பயிரிடப்படுகின்றன. ஒன்று அராபிகா. மற்றொன்று ரோபஸ்டா. இவை தவிர தற்போது உலக அளவில் காஸ்ட்லியான காபியான லூவா காபியும் (Kopi Luwak) தயாரிக்கப்படுகிறது.

துபாரே யானைகள் முகாம்


துபாரே யானைகள் முகாம் மடிகேரி பஸ் நிலையத்திலிருந்து 29.0 கி.மீ. தொலைவிலும்; பைலாகுப்பேயிலிருந்து 26.0 கி.மீ. தொலைவிலும்; அமைந்துள்ளது. நிறைந்தோடும் காவிரி நதிக்கரையோரத்தில் அமைந்திருக்கிறது இந்த யானைகள் முகாம்.துபாரே கர்நாடக வனத்துறையினரின் யானைகள் தங்கும் முக்கியமான தளம் ஆகும். துபாரே யானைகள் முகாம் என்பது வனத்துறையினர் மற்றும் வனம், தங்கும் விடுதிகள் மற்றும் ஓய்வு விடுதிகளால் ஏற்று நடத்தப்படும் ஒரு திட்டம் ஆகும். இங்கு காலை 8:30 மணி முதல் 10 மணிக்குள் செல்வது நல்லது. ஏனென்றால், இந்த நேரத்தில் தான் முகாமில் இருக்கும் யானைகள் குளியலுக்காகக் காவிரி நதிக்கரைக்கு அழைத்து வரப்பட்டுக் குளிப்பாட்டப்படுகின்றன.

மைசூர் தசராவில் வலம் வரும் யானைகள் இங்கு பயிற்றுவிக்கப்படுகின்றன. இங்கு யானைகளின் பயிற்றுநர்கள் யானைகள் பற்றிய வரலாறு, சூழலியல், உயிரியல் பற்றியெல்லாம் விவரிக்கிறார்கள். சுற்றுலாப் பயணியர் இங்கு யானைகளின் பல நடவடிக்கைகளை காணலாம். யானைகளுக்குக் கேழ்வரகு, வெல்லம், கரும்பு. வாழைப்பழம் மற்றும் தேங்காய் போன்ற உணவினைக் கொடுக்கலாம். ஆற்றில் யானைகளைத் தேய்த்துக் குளிப்பாட்டுவதையும், நெற்றிக்கும் தந்தங்களுக்கும் எண்ணெய் பூசுவதையும் காணலாம். குறிப்பிட்ட தொகையைச் செலுத்தினால் நாமும் யானையைக் குளிப்பாட்டலாம். குளியலை முடித்துக்கொண்டு செல்லும் யானைகளுக்கு உணவு கொடுக்கப்படுகிறது. பிறகு அருகில் இருக்கும் மைதானத்தில் சிறிது நேரம் விளையாடுகின்றன.

ராஜா சீட்

மடிகேரி பஸ் நிலையத்திலிருந்து 1.5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ராஜா சீட் புகழ்பெற்ற வியூ பாய்ண்ட்ஆகும். மடிகேரியின் மன்னர் மாலை நேரத்தில் சூரிய அஸ்தமனத்தையும், இயற்கை எழிலையும் இங்கிருந்துதான் கண்டு ரசிப்பாராம். ராஜா சீட் வேடிக்கை பார்ப்பதற்கென்றே உருவான இடம் போல காட்சியளிக்கிறது.இவ்விடம் மடிகேரி கோட்டைக்குத் தெற்கில் நீரூற்றுகள் நிறைந்த ஒரு அழகிய பூங்கா அமைந்துள்ளது. இது மிக முக்கியச் சுற்றுலாத் தலம்
மற்றும்பிரபல சூரிய அஸ்தமனதைக் காணும் இடமாகும்.

ராஜா சீட் என்றால் குடகு அரசர்களின் ஓய்வெடுக்கும் இடம் என்று பொருள். இப்பூங்காவின் நடுவில் சுண்ணாம்பு மற்றும் செங்கல்லால் கட்டப்பட்ட ஒரு அழகிய விதானம் நான்கு தூண்களையும், கூரை மற்றும் அலங்கார வளைவுகளைப் பெற்றுள்ளது. இது அரசர்களின் விருப்பதிற்குகந்த மனமகிழ் மையம் ஆகும். இங்கு அரசர்கள் தங்கள் இராணிகளுடன் சூரிய அஸ்தமனத்தைப் பார்த்து மகிழ்வார்களாம். இன்று இங்கிருந்து மக்களும் பார்க்கிறார்கள்.

உயரமான மலைகளையும், நெல் வயல்களால் நிரம்பிய பசுமையான பள்ளத்தாக்குகளையும் கொண்ட திகைப்பூட்டும்படியான காட்சிகளை இங்கிருந்து வெகுவாக ரசிக்கலாம். இந்தப் பள்ளத்தாக்கிலிருந்து ஒரு நாடாவைப் போல வளைந்து நெளிந்து மங்களூருக்குச் செல்லும் சாலையைப் பார்ப்பது இனிய அனுபவம் ஆகும். இங்கு செல்ல ஒவ்வொரு நபருக்கும் நுழைவுக் கட்டணம் ரூ .5. ஆகும். தினமும் மாலை 6:45 முதல் 7 மணி வரை ஒரு சிறிய ஒளி ஒலி நிகழ்ச்சி நடைபெறுகிறது. குட்டி இரயில் சவாரியை உங்கள் குழந்தைகள் விரும்புவர்.

அபே நீர்வீழ்ச்சி

கூர்க் சுற்றுலாவின் ஒரு அங்கமாக அறியப்படும் இந்த நீர்வீழ்ச்சி, அதிகச் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கிறது. இந்த அருவியை ஆங்கிலேயர்கள், மடிகேரியின் பிரிட்டிஷ் கேப்டன் சாப்ளின் மகள் ஜெஸ்ஸியின் நினைவாக, ஜெஸ்ஸி அருவி என்றும் அழைத்தனர். அடர்ந்த காபி தோட்டத்தின் நடுவே அமைந்திருக்கும் அருவி, காணும்போதே நம்மைக் கவர்ந்திழுக்கிறது. இந்த அருவியில் வருடம் முழுவதும் நீர் விழும் என்கிறார்கள். பருவ மழை காலத்தில் அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அருவியில் குளிக்க அனுமதிக்கப்படுவதில்லை. அருவிக்குச் சற்று தூரத்தில் இருந்தாலும், நீர்த்திவலைகள் உடலை நனைக்க, அருவியைக் கண்டு ரசிக்கலாம். இந்த அருவி தனியர்களின் காஃபி மற்றும் நறுமணப் பொருள் தோட்டங்களின் நடுவே அமைந்துள்ளது. செப்டம்பர் முதல் ஜனவரி வரையிலான மாதங்கள் இங்குச் செல்லச் சிறந்த பருவகாலம் ஆகும். இப்பருவகாலத்தில்தான் அருவி முழுவேகத்துடன் பீறிட்டுக் கொட்டுவதைக் காணலாம். அருவியின் வாயில்வரை கார்கள் செல்கின்றன. அங்கிருந்து காஃபித் தோட்டங்கள் வழியாகப் பத்து நிமிடம் நடந்து செல்ல வேண்டும்.காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செல்ல வேண்டும் . அருவியை முழுமையாக ரசிக்க தொங்கு பாலம் ஒன்றை அமைத்திருக்கிறார்கள். கால் நனைக்க முடியவில்லை என்றாலும், காண்பதிலேயே அதற்கிணையான மகிழ்ச்சியைக் கொடுக்கிறது இந்த அருவி.அபே நீர்வீழ்ச்சி காண்பதற்கும் புகைப்படம் எடுப்பதற்கும் மிக அழகானது.

காவேரி நிசர்காதமா

காவேரி நிசர்காதமா என்பது காவேரி நதியில் அமைந்துள்ள தீவாகும். இது கூர்க்கில் புகழ்பெற்ற சுற்றுலாத்தலங்களில் ஒன்றாகும். குஷால் நகர் என்னுமிடத்தில் காவிரி ஆறு இரண்டாகப் பிரிந்து, பின் மீண்டும் இணைகிறது. இதற்கு இடைப்பட்ட சில ஏக்கர் நிலம் சிறிய தீவு போல் காட்சியளிக்கிறது. அடர்ந்த மூங்கில் தோப்புகள், சந்தனம் மற்றும் தேக்கு மரங்கள் நிறைந்து பரந்து விரிந்த 64 ஏக்கர் நிலப்பில் இந்தத் தீவு அமைந்துள்ளது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செல்லலாம்.1988 ஆம் ஆண்டு வனத் துறையால் இந்தத் தீவு சுற்றுலாத் தலமாக உருவாக்கப்பட்டது. இந்தத் தீவை அடைய ஒரு தொங்கும் கயிற்றுப் பாலம் உதவுகிறது. இந்தத் தீவில் மான் பூங்கா, முயல் பூங்கா ,மயில் பூங்கா ,அர்ச்சிட் மலர்ப் பூங்கா  ஆகிய பூங்காக்கள் அமைந்துள்ளன. இங்கு கிளிகள், மரங்கொத்திகள் மற்றும் பட்டாம்பூச்சி வகைகள் ஆகியவற்றையும் காணலாம். யானை மற்றும் படகுச் சவாரிகள் இங்கு உள்ளன. பயணிகள் குறிப்பிட்ட பாதுகாப்பான இடங்களில் நீரில் இறங்க அனுமதிக்கப்படுகின்றனர். இங்கு மரத்தின் மேல் அமைக்கப்பட்ட காட்டேஜ்களும், வனத்துறையினர் நடத்தும் விருந்தினர் விடுதியும் உள்ளன. இங்கு ஒரு சிறு உணவகமும் உள்ளது. காவிரி ஆற்றைக் கடக்க, தொங்கு பாலம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. சிறுவர்களுக்கான பூங்காவில் விளையாடி மகிழலாம். அழகிய காவிரியை ரசிக்கலாம். குடகு மக்களின் பாரம்பர்யத்தை உணர்த்தும் வகையில், குடகு மக்கள் பாரம்பர்ய உடையில் நடனமாடும் சிலைகள் பூங்காவில் அமைக்கப்பட்டிருந்தன.நிசர்கதாமா காட்டில் வீறு நடை போட்டு இயற்கையை ரசிக்கலாம்.

பைலகுப்பே


பைலகுப்பே நம்ட்ரோலிங்’ திபெத்திய புத்த துறவிகளின் மடாலயம். சீனா திபெத்தை ஆக்கிரமித்த காலத்தில் திபெத்திலிருந்து வெளியேறிய இந்த அகதிகள் தற்சமயம் இந்தக் குடியிருப்புகளில் வாழ்கின்றனர். `தங்கக் கோயில்’ என அழைக்கப்படும் இதுதான் இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய திபெத்தியன் புத்த சமூகம். இங்குள்ள பத்மசம்பவா, சஹாயமுனி, அபிதாப புத்தா ஆகிய புத்தர் சிலைகள் பிரமிப்பூட்டுகின்றன. எங்கு திரும்பினாலும் வண்ணமயமான புத்தர் சிலைகள், கோயில் சுவர்கள் முழுக்க நுணுக்கமான ஓவியங்கள்...எனக் காணக் காண சலிப்பதில்லை இந்தப் புத்த மடாலயம். சுவர்களில் வடிக்கப்பட்ட ஓவியங்கள் எல்லாம் புத்த மதத் தத்துவங்களை விவரிப்பவை என்கிறார்கள்.
தென்னிந்தியாவில் முழுக்க முழுக்க திபெத்திய கட்டிடக்கலைப் பாணி மற்றும் பரம்பரியதுடன் இந்த புத்த துறவிகளின் மடாலயம் அமைந்துள்ளது. மடாலயத்தில் தங்க வண்ணத்தில் மின்னும் பத்மசாம்பவா, புத்தா, அமிதாயுஸ் போன்ற உருவச் சிலைகள் நுண்ணிய சிற்பத் திறனுடன் வடிவமைக்கப்பட்டுப் பார்வையாளர்களைக் கவர்கின்றன. புத்தரின் வாழ்க்கைக்குறிப்புகளையும் மற்றும் வஜ்ராயணப் பௌத்த மரபு சார்ந்த கடவுள் ஓவியங்களையும் காணலாம். பைலகுப்பேயில் விவசாய நிலங்கள், திபெத்திய மடலாயங்கள், சுற்றுலா பயணிகளுக்கான திபெத்திய உணவகங்கள் மற்றும் கைவினைப் பொருட்களுக்கான கடைகள் என்று எல்லாம் உள்ளன.

ஓம்காரேஸ்வரா கோவில்

சிவனுக்காக 1820 ஆம் ஆண்டு ராஜா இலிங்கராஜேந்திராவால் கட்டப்பட்ட, ஓம்காரேஸ்வரா கோவில் அமைந்துள்ளது. .இது மடிகேரியின் பாரம்பரிய சுற்றுலாத் தலமாகும். கோவில் கருவறையில் நீங்கள் காணும் இலிங்கம் காசியிலிருந்து கொண்டுவரப்பட்டதாம். இக்கோவில் கோதிக் மற்றும் இஸ்லாமிய பாணி கட்டிடக்கலை அமைப்புகளுடன், நடுவில் ஒரு பெரிய குவிமாடமும், நாலாபுறமும் நான்கு உயர்ந்த ஸ்தூபிகளையும் (minarets) பெற்றுள்ளது. இஸ்லாமிய மசூதிபோல் காட்சியளிக்கும் இந்தக் கோயில், இஸ்லாமிய, கோதிக், கேரளா என மூன்று வகையான கட்டடக்கலை இணைந்து கட்டப்பட்டிருக்கிறது. சுவர்கள் அழகிய ஓவியங்களாலும், சாளரங்கள் பஞ்சலோக வேலைப்பாடுகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

கோவிலின் எதிரில், நீர்வரத்து வழியுடன் கூடிய, ஒரு பெரிய குளம் உள்ளது. இக்கோவிலில் சிவராத்திரி, ஆடம்பரத்துடனும் உற்சாகத்துடனும், கொண்டாடப்படும் ஒரு பெரிய திருவிழாவாகும். கோவிலின் வரலாறு செப்புத்தகடுகளில் பொறிக்கப்பட்டு வாசற்கதவு நிலைமேல் பதிக்கப்பட்டுள்ளது.

தலைக்காவேரி

பிரம்மகிரி மலைத்தொடரின் சரிவில், அமைந்துள்ளது.
தலைக்காவிரிமடிகேரி வருபவர்கள் தவறாமல் செல்லும் இடம் தலைக்காவிரி. மடிகேரியில் இருந்து 48 கி.மீ தொலைவில் உள்ள இந்த இடம்தான் காவிரி ஆற்றின் உற்பத்தி இடம் இதுதான். குடகு மக்கள் காவிரி நதியையே பெண் தெய்வமாக வழிபடுகிறார்கள். காவிரி அம்மனுக்குக் கோயிலும் இங்கு உண்டு. இதன் எதிரில் உள்ள குளத்தில் குளித்துக் காவேரி அம்மனை வழிபடுவது இங்கு கடைப்பிடிக்கப்படும் வழக்கம். இக்கோவில் மாநில அரசால் 2007 ஆம் ஆண்டுப் புனரமைக்கப்பட்டுள்ளது. விநாயகருக்கும் அகத்தியருக்கும் இங்கு கோவில்கள் உள்ளன. இங்கு உள்ள அகத்தீஸ்வரர் (சிவன்) கோவிலில் உள்ள இலிங்கம் மிகவும் தொன்மையானது.மிகவும் சுத்தமாகப் பராமரிக்கப்படும் இந்த இடத்தின் சுத்தமான காற்றும், பசுமையான மலைகளும் நமக்குப் பரவசம் தருகின்றன. இதன் அருகே இருக்கும் பிரம்மகிரி மலை ஏறினால், தலைக்காவிரியையும், பசுமை போர்த்திய மலைகளையும் 360 டிகிரி சுற்றளவில் பார்க்க முடியும். ஆன்மிகப் பயணமாகவும், இயற்கையை ரசிக்கும் பயணமாக வும் தலைக்காவிரி கொண்டாடப் பட்டுவருகிறது.

மேற்கு தொடர்ச்சி மலையின் பிரம்மகிரி மலைப்பகுதியில் மலை ஏற விரும்புகிறவர்களுக்கான ஒற்றையடிப்பாதைகள் உள்ளன. இது தவிர புஷ்பகிரி மலைகள், கொட்டேபெட்டா, இக்குதப்பா, நிஷானி மோட்டே மற்றும் தடியான்டமோல் என்ற இடங்களிலும் மலை ஏற்றப் பாதைகள் உள்ளன. சாகச பொழுது போக்குகள் மற்றும் விளையாட்டு பொழுது போக்குகளுக்கும் கொடகு பிரதேசம் ஏராளமான வாய்ப்புகளை வழங்குகிறது. மலை ஏற்றம், கோல்ப், தூண்டில் மீன் பிடித்தல், பரிசல் சவாரி போன்ற பல வெளிப்புற பொழுது போக்கு அம்சங்களுக்கு இங்கு வசதிகள் உள்ளன.


மடிக்கேரிக்குச் சென்னையில் இருந்து செல்வதென்றாலும் கோயம்புதூரிலிருந்து செல்வதென்றாலும் மைசூரு வழியாகத்தான் செல்லவேண்டும். கூர்க் செல்வதற்கு மைசூர் செல்ல வேண்டும் அங்கிருந்து  மடிக்கேரி செல்ல வேண்டும். மடிக்கேரியில் இருந்து பல இடங்கள் தொடங்குகின்றன.
கொடகு பகுதிக்கு அருகில் ரயில் நிலையம் மைசூர் ஆகும். இது கொடகிலிருந்து 118 கி.மீ தூரத்தில் உள்ளது. அருகிலுள்ள மங்களூரில் சர்வதேச விமான நிலையமும் உள்ளது. இங்கிருந்து மற்ற இந்திய நகரங்களுக்கும் வெளி நாட்டு நகரங்களுக்கும் விமான சேவைகள் உள்ளன.

குடகு ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. குடகு நாட்டை ஆண்டுவந்த மன்னரால் உருவாக்கப்பட்ட நகரம் மடிகேரி.  மடிக்கேரியில் பல விடுதிகள் இருக்கின்றன .
இங்கு இருந்து செல்லும் போது பல கூர்க் சுற்றுலா இடங்கள் காணமுடியும். நம்பத்தகுந்த நறுமணப்பொருட்களான சீரகம், ஏலக்காய் மற்றும் பிரிஞ்சி இலை போன்ற பொருட்கள் முதல் உலர்பழங்களான முந்திரி, உலர் திராட்சை போன்றவற்றை உள்ளூர் சந்தைகளில் வாங்கலாம். தரமான காஃபிக்கொட்டை, காஃபிப் பொடி, தேயிலை எல்லாம் இங்கு கிடைக்கிறது. இங்கு தயராகும் சாக்லேட் மிகவும் சுவையுள்ளது. பைலாகுப்பேயில் திபெத்திய கைவினைப் பொருட்களை வாங்கலாம்.கூர்கில் உள்ள  ஹோட்டல்கள் மற்றும் ரிஸார்ட்டுகளில் உங்கள் தங்குமிடத்தைத் தேர்ந்தெடுக்கலாம். எல்லோரும் ஆன்லைன் புக்கிங் வசதியை அளிக்கிறார்கள். உணவு தயாரிப்பு முறைகள் குறிப்பாக அசைவ உணவுகள் மற்ற தென்னிந்திய உணவு மரபுகளுடன் சேர்ந்து சிறப்பான தனித் தன்மையை கொண்டுள்ளன.அரிசி ரொட்டி, கடம்புட்டு, நூல்புட்டு, நெய்ச்சோறு, பன்றி இறைச்சி, மூங்கிலில் வறுத்த இறைச்சி போன்ற கொடவா சைவ, அசைவ உணவு வகைகள் இங்கு விரும்பி உண்ணப்படுகின்றன. பல இடங்களில் கொடவா டாபா உணவு விடுதிகளைக் காணலாம்.

எழில் கொஞ்சும் மலை வாசஸ்தலமான கூர்க் பகுதி பிரத்யேகமான பண்பாடு மற்றும் கலாசார அம்சகளை பெற்றுள்ளது. ஹட்டாரி, மெர்காரா தசரா, கெயில் பொடு (கெயில் முகூர்த்தம் அல்லது ஆயுத திருவிழா) , காவேரி சங்க்ராமனெ அல்லது துலா சங்கராமனெ போன்ற திருவிழாக்கள் இங்கு கொண்டாடப் படுகின்றன. பொதுவாக கொடகு பிரதேசத்தின் மக்கள் கொடவா, துளு, குடியா மற்றும் புண்டா இனத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர். இருப்பினும் கொடாவா எனப்படும் இனத்தை சேர்ந்த பூர்வ குடியினரே இங்கு அதிகம் வசிக்கின்றனர் என்பது குறிப்பிட த்தக்கது. இவர்கள் தங்கள் உபசரிப்புக்கும் வீரத்துக்கும் சிறந்து விளங்குகின்றனர்.

கூர்க் வரும் பயணிகளுக்கு சொர்க்கம் என்றே சொல்லலாம். பல அரண்மனைகள், கோட்டைகள், கோயில்கள், பூங்காக்களும், நீர்வீழ்ச்சிகளும், சரணாலயம் போன்ற பல இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள் உள்ளன.கோடை வெப்பத்திலிருந்து தப்பித்துக்கொள்வதாக இருந்தாலும், இதமான குளிரில் இன்பமாக ஒரு சுற்றுலா செல்ல வேண்டும் என நினைத்தாலும் உங்களுக்கான சரியான சாய்ஸ் கூர்க்தான். ஏனென்றால், இங்கு அதிரடி குளிரும் இல்லை; ஆர்ப்பாட்டமான வெயிலும் இல்லை. கூர்க்கை முழுமையாகப் பார்க்க மூன்று நாள்கள் தேவைப்படும். ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடம் சற்றுத் தொலைவு என்பதால், சொந்த காரிலோ, வாடகை காரிலோ செல்வது நல்லது. இம்மலைப் பிரதேசத்தின் வித்தியாசமான தட்பவெப்பநிலையையும்,வியக்கத் தக்க எழிலையும், பசுமையான வனப்பையும் காண விரும்பினால் ஒருமுறை குடகுக்கு நேரில் சென்று வாருங்களேன்! ஒருமுறை சென்றால் ஆண்டுதோறும் அங்கே சென்று வருவீர்கள் என்பது உறுதி.


Share Tweet Send
0 Comments
Loading...