கோவை சிறுவாணி அணைக்கட்டின் ஆரம்பகால வரலாறு.

கோவை சிறுவாணி அணைக்கட்டின் ஆரம்பகால வரலாறு.

உலகின் இரண்டாவது சுவையான குடிநீர் தரும் கோவை சிறுவாணி அணைக்கட்டின் ஆரம்பகால வரலாறு.

1929-ம் ஆண்டு ஏப்ரல் 29. கோயம்புத்தூர் விழாக்கோலம் பூண்டிருந்தது.

வீதிகள் தோறும் தண்ணீர்க் குழாய்களுக்கு மக்கள் பொட்டு வைத்து, பூக்களை சூட்டி இருந்தனர். பெரும்பாலோரின் கண்களில் ஆனந்த கண்ணீர்.

அன்றுதான் முதல்முறையாக நகரத்துக்கு சிறுவாணி குடிநீர் வந்தது. கோயம்புத்தூரின் பெருமைகளில் ஒன்று சிறுவாணி நீர். ஆனால், அந்தப் பெருமைக்கு பின்னால் 40 ஆண்டுகால போராட்டம் இருப்பது இன்று பலரும் அறியாத விஷயம்.

சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு கோயம்புத்தூர் மாவட்டம் அன்றைய மெட்ராஸ் மாகாணத்தின் ஒரு பகுதி. மெட்ராஸ் மாகாண பொது சுகாதாரத்துறை இணை இயக்குநர் 1927-ம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில், “இந்த மெட்ராஸ் மாகாணத்தின் தண்ணீரில் மிக மோசமான தண்ணீர் எதுவென்றால், அது கோயம்புத்தூரின் தண்ணீர்தான். இந்த மோசமான தண்ணீரால் மக்களுக்கு பொருள் இழப்பும், உடல் நல பாதிப்பும் ஏற்படுகிறது.

மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்குவதில் கோயம்புத்தூர் நகராட்சி தீவிர கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத் தப்படுகிறது” என்று குறிப்பிட்டார்.

நொய்யல் நதி நகரத்துக்கு அருகில் ஓடினாலும் அதை குடிநீராக கொண்டுவரும் திட்டம் எதுவும் அன்று இல்லை. தவிர, அந்த நதியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் வரவில்லை. நகரத்துக்குள் இருந்த சில உப்புத் தண்ணீர் கிணறுகள் மட்டுமே மக்களின் நீர் ஆதாரமாக விளங்கின. தண்ணீர் தேவை குறித்து மக்கள் அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் முறை யிட்டார்கள். அன்று தொடங்கியது குடிநீருக்கான போராட்டம்.

1889-ம் ஆண்டில் சிறுவாணி மலைப் பகுதியில் உள்ள முத்தி குளம் அருவி நீரை கொண்டு வரலாம் என்றார் எஸ்.பி.நரசிம்மலு நாயுடு என்கிற பத்திரிகையாளர். மாவட்ட ஆட்சித் தலைவர், ‘அங்கெல்லாம் மனிதர்கள் செல்வது சிரமம். நீங்கள் ஆய்வு செய்து வந்தால் அரசாங்கம் பரிசீலிக்கும்’ என்றார் அலட்சியமாக. ஏனென்றால் அவ்வளவு அடர்ந்த வனம் அது. பலர் தடுத்தும் கேட்காமல் நரசிம்மலு நாயுடு தனது நண்பர்களுடன் கிளம்பிவிட்டார். மலை அடிவாரத்தில் இருந்து சுமார் 10 கி.மீட்டர் தூரம் மலை ஏறிச் செல்ல வேண்டும்.

யானை, புலி, சிறுத்தை போன்ற விலங்குகள் ஏராளமாக இருந்தன. பல நாட்கள் பல இடையூறுகளைத் தாண்டி முத்தி குளம் அருவியை அடைந்தார் அவர்.

அங்கு ஏராளமான நீர் இருந்தது. ஆய்வு நடத்தி, ஊர் திரும்பியவர், மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து அந்த அருவி நீரை நொய்யலுக்கு திருப்பினால் கோயம்புத்தூரின் தண்ணீர் பிரச்சினை தீரும் என்று அறிக்கை சமர்ப்பித்தார். ஆனால், நிதி ஆதாரம் இல்லை என்று மறுத்தது அரசு. மக்களின் தொடர் போராட்டங்களால் 1892-ம் ஆண்டு ஒரு பொறியாளரை அரசு நியமித்தது. அவர் சிறுவாணி திட்டம் சாத்தியமில்லை என்று சொல்லி, நொய்யல் நீரை பயன்படுத்த திட்டம் தீட்டினார். நதியின் ஒரு பகுதியில் வெள்ளலூர் அணைக்கட்டில் ஓரளவு நீர் இருப்பதால், அங்கிருந்து தண்ணீர் கொண்டு வர திட்டம் தந்தார்.

அதற்கும் நிதி இல்லை என்று அரசு கைவிரித்தது. நொய்யலை மையமாக வைத்தே பல திட்டங்கள் தீட்டப்பட்டு, கழிக்கப்பட்டன.

இதற்கிடையில் கோயம்புத்தூரில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடியது. ஒரு சொம்பு தண்ணீரை சும்மா கொடுப்பதற்கே மக்கள் யோசித்தார்கள். பத்தாண்டுகள் ஓடிய நிலையில் சிறுவாணி திட்டம் மீண்டும் எடுக்கப்பட்டது. இதற்கு காரணம் அப்போது இந்தியா முழுவதும் மின் உற்பத்திக்கான ஆய்வுகள் நடந்து வந்தன. சிறுவாணியிலும் ஆய்வு செய்தார்கள். திட்டம் வெற்றி பெற்றால் மின் உற்பத்தி மூலம் திட்டச் செலவை ஈடுகட்டிவிடலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த சூழலில் தென்னிந்திய ரயில்வே நிறுவனம் (அப்போது அது தனியார் நிறுவனம்) சிறுவாணி நீர் மின் திட்டத்துக்கு உதவ முன்வந்தது. ஏனெனில் கோயம்புத்தூரில் தனது தொழிற் சாலை அமைக்கும் எண்ணம் அந்நிறுவனத்துக்கு இருந்தது. ஆனால் ஆய்வில் சிறுவாணியின் மழைப்பொழிவு குறித்து கேள்வி எழுந்தது. மீண்டும் திட்டம் கைவிடப்பட்டது.

1921-ம் ஆண்டு சி.எஸ். இரத்தினசபாபதி என்பவர் நக ராட்சித் தலைவரானார். அவர் ஏற்கெனவே சிறுவாணி ஆய்வு களில் பங்கு பெற்றவர். இந்த முறை அவரது இடைவிடாத முயற்சியால் திட்டத்துக்கு ஒப்புதல் கிடைத்தது. 1924-ம் ஆண்டு சிறுவாணி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. பணிகள் தொடங்கின.

சாலை, மின்சாரம், தொழில் நுட்பம் எதுவும் இல்லாத சூழலில் நகராட்சியின் நிதிப் பற்றாக் குறையால் அவ்வப்போது திட்டம் திணறியது. யானைகள், புலிகள், அட்டைக்கடி, மலேரியா என தொழிலாளர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டார்கள். கூடவே, திட்டத்துக்கு எதிராக வழக்குகளும் போடப்பட்டன.

மூன்று ஆண்டுகளில் மலை மேலிருந்து குகைப் பாதை மூலம் தண்ணீர் கொண்டு வரும் பணிகள் முடிந்தன. அப்போதுதான் அந்த விபரீதம் ஏற்பட்டது. 1927-ம் ஆண்டு கடுமையான மழை. கூடவே பெரும் நிலச்சரிவு. கட்டுமானங்கள், கருவிகள் எல்லாம் மண் மூடிப்போயின. 40 ஆண்டு கால போராட்டம் வீணாகிப்போனதே என்ற மக்கள் கண்ணீர் விட்டு அழுதார்கள்.

ஆனால், அந்த எண்ணமே திட்டத்துக்கு மீண்டும் உத்வேகமூட்டியது. மீண்டும் பணிகள் தொடங்கின. மக்களும் சேர்ந்து உழைத்தார்கள். 1929-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29-ல் கோயம்புத்தூரின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயமாக இறங்கி வந்தாள் சிறுவாணி. இன்றைக்கு கோயம்புத்தூர் மக்கள் குடிக்கும் சிறுவாணியின் ஒவ்வொரு சொட்டு தண்ணீருக்கும் பின்னால் இவ்வளவு போராட்டங்கள் இருந்திருக்கிறது. தண்ணீரை வீணாக்காதீர்கள்!


Share Tweet Send
0 Comments
Loading...