ஐஸ்வர்யம் தரும் கோலங்கள்

ஐஸ்வர்யம் தரும் கோலங்கள்

தமிழர்களின் பாரம்பரிய பழக்கங்களில் ஒன்றாக கோலமிடுதல் உள்ளது. கோலங்கள் நம் கலாச்சாரத்தின் பிரதிபலிப்பின் பிம்பம். வீட்டின் முற்றத்தின் அழகு படுத்தும் செயல் மட்டும் அல்ல அது பெண்களின் மனநிலையை உடல்நிலையை சீராக்கும் நடைமுறை. அறிவியலுக்கும் அப்பாற்பட்ட மூளையை செயல்படுத்தும் செயலி. மார்கழி மாதம் முழுவதும் வீட்டு வாசலில் வண்ண வண்ண கோலமிடுவது பெண்களுக்கு கிடைத்த பெரும் பாக்கியம். அதன் உச்சமாக பொங்கல் திருநாளில் வீட்டின் முற்றம் மட்டுமன்றி அறைகளிலும் அழகழகு கோலமிட்டு பெண்கள் தங்களது பெருமையை கூடுதலாக்கிக் கொள்கிறார்கள்.

கோலங்களின் நன்மைகள்: கம்பிக்கோலம், பாம்புக் கோலம், தாமரைக் கோலம், புள்ளிக் கோலங்கள், நேர்ப்புள்ளிக் கோலங்கள், தொட்டில் கோலம், புள்ளிகளிடையே வரையும் கோலம், ஊடுபுள்ளிக் கோலங்கள் என கோலங்களில் பல்வேறு வகைகள் உள்ளன. 5 வயதை கடக்கும்போது கோலமிடப் பழகும் சிறுமிகள், 90 வயது முதுமையிலும் தங்களது வீ்ட்டின் முற்றத்தில் ஆர்வத்தோடு கோலமிடுகிறார்கள்.

கோலங்கள் போடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து அறிவோம்:  இல்லத்தில் சுபநிகழ்ச்சி நடப்பதற்கு அடையாளமாக வீட்டின் முன் மாவிலைத் தோரணம் கட்டுவார்கள். மாவிலையில் ஸ்ரீமகாலஷ்மி வாசம் செய்கிறாள். அதனால் சுபநிகழ்ச்சி நடக்கும் இல்லத்துக்கு ஸ்ரீமகாலஷ்மியும் முக்கிய விருந்தினராக வர வேண்டும் என்பதற்கு அழைப்புதான் மாவிலைத் தோரணம். அதுபோலவே கோலங்களும்.

ஒரு வீட்டில் தினமும் கோலம் போடுவதால் இந்த இல்லத்தில் சுபநிகழ்ச்சிகள் நடப்பதற்கு தடையிருக்காது. நன்மைகளும் வந்தடையும். மார்கழி மாதத்தில் வாசலில் அழகழகான கோலம் போடவேண்டும் என்று ஒரு முக்கிய கடமையாகவே நம் முன்னோர்கள் வலியுறுத்தினார்கள். மார்கழி மாத பனிக்காற்று மருத்துவக்குணம் கொண்டது. ஓசோனின் காற்று உடலில்பட்டால், அதிகாலைவேளை, பிரம்ம முகூர்த்தம் காற்று நன்மை என்பதாலும் கோலம் வரையும் மாதமாக இந்த மார்கழி மாதம் இருக்கிறது.

மார்கழி மாதம் என்று மட்டுமல்லாமல் எல்லா நாள்களிலும் கோலம் போடும் போதும், கோலங்களுக்கு மும்மூர்த்திகளின் அருளாசி கிடைக்கச் செய்யும் மகிமையும் இருக்கிறது. அது எப்படியென்றால், கோலமாவின் நிறம் வெண்மை. இது பிரம்மாவை அழைக்கிறது. கோலம் போட்டபிறகு அந்த கோலத்தை சுற்றி காவி நிறமான செம்மை நிறத்தை வரையும்போது அது சிவபெருமானை அழைக்கிறது. கோலம் போட்டு முடித்தபிறகு அந்த கோலத்திற்கு அழகு சேர்ப்பதற்காக பசுஞ்சாணத்தை வைத்து அதில் மஞ்சள் நிறத்தில் பூசணிப்பூவை வைப்பார்கள்.

பசுவின் சாணம் ஸ்ரீமகாலஷ்மியை குறிப்பிடுவதால், ஸ்ரீமகாவிஷ்ணுவையும் அந்த இல்லத்தினுள் அழைக்கிறது. இதனால் இப்படி மும்மூர்த்திகளின் அருளாசியும் நமக்கு கிடைக்கிறது. பசு சாணமும் பூசணிப்பூவும் தினமும் கிடைக்காதபோது, சாதாரண கோலமாவுக்கு பதிலாக பச்சரிசிமாவில் கோலம் போட்டால் மும்மூர்த்திகளின் ஆசி இன்னும் சிறப்பாக கிடைக்கும். நம் இல்லத்தில் சுபநிகழ்ச்சிகள் தடையில்லாமல் நடக்க, நம் முன்னோர்கள் நமக்கு வழிகாட்டியதுதான் கோலங்கள்.


Share Tweet Send
0 Comments
Loading...