இளம் விஞ்ஞானி கீதாஞ்சலி ராவ்!

இளம் விஞ்ஞானி கீதாஞ்சலி ராவ்!

அமெரிக்காவில் வாழும் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர் சிறுமி கீதாஞ்சலி. அவர் கொலராடோ மாகாணத்தில் வசித்து வருகிறார். சிறந்த சிறார் விஞ்ஞானி என்ற பெருமைக்குச் சொந்தக்காரர்.

அறிவியல் தொழில்நுட்பத்தால் சமூக மாற்றம் சாத்தியமா என்ற கேள்வி தான் கீதாஞ்சலியின் கண்டுபிடிப்புகளுக்கு அடிநாதம். Tethys என்ற கருவியை கண்டுபிடித்துள்ளார் கீதாஞ்சலி. சொல்லப்போனால் இந்த கருவிக்கு பெயர் சூட்டியவரும் அவர் தான்.

குடிநீரில் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் காரீயம் கலந்திருப்பதை கண்டறிய இந்த கருவி உதவுகிறது. கார்பன் நுண்குழாய் மூலம் குடிநீரில் கலந்திருக்கும் காரீயத்தை இந்த கருவி கண்டறியும். மரபணு பொறியியல் அடிப்படையில் வலி நிவாரண மருந்துகளுக்கு அடிமையாவதை முன்கூட்டியே கண்டறியும் கருவியையும் கண்டறிந்து அசத்தியுள்ளார் கீதாஞ்சலி.

அதுமட்டுமா, செயற்கை நுண்ணறிவு மூலம் இணைய மிரட்டல்களை கண்டறியும் இணைய நுட்பத்தையும் உருவாக்கியிருக்கிறார் இந்த இளம் விஞ்ஞானி. இவர், 'கைன்ட்லி' என்ற, 'செல்போன்' செயலியை உருவாக்கினார். இது, 'ஆன்லைன்' துன்புறுத்தல்களை, ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்து, பயனாளியை எச்சரிக்கும் திறன் கொண்டது. ‘ஏஐ’ எனப்படும் செயற்கை நுண்ணறிவு திறன் உதவியுடன், இந்த செயலி இயங்குகிறது.அடிப்படையில் அவர் ஒரு பியானோ இசைக்கலைஞராகவும் அறியப்படுகிறார். இந்த இளம் வயதில் சமூக மாற்றத்தை நோக்கி நடைபோடும் அவருக்கு, அமெரிக்க அதிபரின் இளையோர் சுற்றுச்சூழல் விருது ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவின் பிரபல ‘டைம்’ இதழ் நடத்திய போட்டியில் 5 ஆயிரம் போட்டியாளர்களுக்கு இடையே கீதாஞ்சலி ராவ் 2020-ம் ஆண்டின் சிறந்த குழந்தையாகத் தேர்வு செய்யப்பட்டார். இதுகுறித்து கீதாஞ்சலி ராவ் கூறியதாவது:

"நீங்கள் பார்க்கின்ற அனைத்து பிரச்சனைகளையும் கையில் எடுக்காதீர்கள். எது உங்களை அதிகம் பாதிக்கிறதோ அதை கையில் எடுங்கள்"

கிரகித்துக் கொள்ளுங்கள், அதை உங்கள் திறமையால் அலசுங்கள், ஆய்வு செய்யுங்கள், அதன்மீது கட்டமைப்பை உருவாக்குங்கள், தொடர்பு கொள்ளுங்கள் என்ற 5 செயல்பாடுகளை பின்பற்றி வருகிறேன். நான் சில கண்டுபிடிப்புகளை உருவாக்கி உள்ளேன். என்னால் அதை உருவாக்கும் போது யார் வேண்டுமானாலும் அதைச் செய்ய முடியும்.

தற்போது கரோனா வைரஸ் பெருந்தொற்று உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நம்மால் உருவாகாத சில பிரச்சினைகள் உலகில் இருக்கத்தான் செய்கின்றன. அதை தீர்க்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். பருவநிலை மாற்றம், சைபர் புல்லியிங் எனப்படும் ஆன்-லைன் சீண்டல்கள் போன்ற பிரச்சினைகளை நாம் சமாளிக்க வேண்டும்" இவ்வாறு கீதாஞ்சலி ராவ் கூறினார்.


Share Tweet Send
0 Comments
Loading...