நவகைலாயம் குன்னத்தூர்-கைலாச நாதர்- சிவகாமசுந்தரி திருக்கோயில்

நவகைலாயம் குன்னத்தூர்-கைலாச நாதர்- சிவகாமசுந்தரி திருக்கோயில்

நான்காவதாக குன்னத்தூரில் உள்ள அருள்மிகு கோதைபரமேஸ்வரன் என்ற கைலாச நாதர்- சிவகாமசுந்தரி திருக்கோயில். திருநெல்வேலியில் இருந்து 7 கி.மீ. தொலைவில் மேலத் திருவேங்கடநாதபுரம் அருகே உள்ளது. ராகுபகவான் அம்சம்  கொண்ட தலம்.இந்த இடம் சங்காணி சிவன் கோவில் என்று அவ்வூர் மக்களால் அழைக்கப்படுகிறது.

ஒவ்வொரு மனிதனின் ஜாதகத்திலும், ராகு பகவான் 18 ஆண்டுகள் ஆட்சி செய்வார். அந்த சமயத்தில் அந்த மனிதர் ராகு திசையின்போது நடக்கும் சஞ்சாரத்திற்கேற்ப அவரது பலன்கள் மாறுபடும். ராகுவின் தாக்கம் ஒரு மனிதனுக்கு ஏற்பட்டால் அவர் பரிகாரம் செய்ய வேண்டிய தலம் தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள நான்காம் கயிலாயம் என்று அழைக்கப்படும் சங்காணியாகும்.
காணி என்றால் நிலம். செங்+காணி என்றால் செந்நிறத்தில் உள்ள நிலம் என்று பொருள். அதன்படி பொத்தையில் மண் செந்நிறமாக காட்சியளிக்கிறது. மேலும் குன்று போன்ற இடத்தில் இந்த ஊர் உள்ளதால், இந்த ஊர் குன்றத்தூர் எனவும் அழைக்கப்படுகிறது.

தலம்: குன்னத்தூர் (சங்காணி)
அம்சம்: ராகு
நட்சத்திரம்: திருவாதிரை, சுவாதி, சதயம்
மூலவர்: கோத்த பரமேஸ்வரர் என்ற கயிலாயநாதர்
அம்பாள்: சிவகாமி

கோதபரமேஸ்வரர் கோவில் :

பல சிறப்புகளை கொண்ட இந்த ஊரில் கோத பரமேசுவரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இத்தலத்து இறைவன் பெயர் கோதபரமேஸ்வரர் என்கிற கயிலாசநாதர். இறைவி சிவகாமி அம்மன். கோவிலின் தீர்த்தம் தாமிரபரணி. தல விருட்சம் வில்வம். நெல்லையப்பர் கோவிலில் பாதுகாக்கப்பட்டு வரும் செப்பேடு ஒன்றில், இத்திருத்தலத்தின் பெயர் திருநாங்கீசநேரி என்றும், இத்தலத்து இறைவன் திருநாகீசர்(ராகு தலமான திருநாகேசுவரம் போன்று) என்றும் அழைக்கப்பட்டுள்ள செய்தி தெரியவருகிறது.

அகத்திய மாமுனிவரின் முதல் சீடரும், பிரம்மனின் பேரனுமான உரோமச மகரிஷி, தான் முக்தியடைய நவ கயிலாயத்தை உருவாக்கினார். அதில் நான்காம் கயிலாயம் சங்கானி எனும் திருவேங்கடநாதபுரம். இது, ராகு ஸ்தலமாக அழைக்கப்படுகிறது. பழங்காலத்தில் தாமிரபரணி கரையில் கோவில் இருந்ததாகவும், இயற்கை சீற்றத்தினால், தற்போது ஆற்றின் கரையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் கோவில் அமைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

தல வரலாறு :

முற்காலத்தில் உரோமச மகரிஷி பிரதிஷ்டை செய்த சிவனை வணங்கி பலரும் நன்மை அடைந்தனர். ஆனால் பிற்காலத்தில் ஏற்பட்ட இயற்கை மாற்றத்தினால் சங்கானி கிராமமே காணாமல் போய்விட்டது. அந்த சமயத்தில் குன்னத்தூரை குறுநில மன்னர் ஒருவர் ஆண்டு வந்தார். இவருக்கு சொந்தமான செங்கானி அருகில் பொத்தை இருந்தது. இந்த பொத்தையில் அரியவகையான மரம் ஒன்று இருந்தது.

இந்த மரத்தில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூ பூத்து, ஒரே ஒரு காய் காய்த்து, அந்த காய் பழமாகும். இந்த பழத்தை சாப்பிட்டால் நீண்ட ஆயுளும், நோயற்ற வாழ்வும் கிடைக்கும். இதனால் இந்த பழம் மீது அந்த குறுநில மன்னனுக்கு அளவற்ற விருப்பம். அந்த மரத்தை மன்னர் மிகவும் பாதுகாத்து வந்தார். ஒரு சமயம் அந்த ஊரில் வசித்த கர்ப்பிணி பெண் ஒருவர், குளத்தில் தண்ணீர் எடுப்பதற்காக குடத்துடன் சென்றாள். அந்த மரத்தின் அடியில் அந்த பெண் சென்றபோது எதிர்பாராதவிதமாக அந்த அரியவகை மரத்தில் இருந்த பழம், கர்ப்பிணிப்பெண் எடுத்து சென்ற குடத்தில் விழுந்து விட்டது.

அதை கவனிக்காத அந்தப் பெண், வழக்கம்போல் தண்ணீர் எடுத்து விட்டு தனது வீட்டிற்கு சென்று குடத்தை வைத்து விட்டாள். மறுநாள் மரத்தில் இருந்த பழத்தை காணாததை கண்ட மன்னர் திகைத்துப்போனார். யாரோ அந்தப் பழத்தைத் திருடிச் சென்று விட்டனர் என்று எண்ணிய மன்னர், பழத்தை திருடியவர்களை கண்டுபிடிக் குமாறு தன் பணியாளர்களுக்கு உத் தரவிட்டார்.

மன்னரின் உத்தரவையடுத்து சேவகர்கள், அந்த ஊரில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று சோதனையிட்டனர். இறுதியில் கர்ப்பிணிப்பெண்ணின் வீட்டில் இருந்த குடத்தில் அந்தப் பழம் கிடப்பதை கண்டனர். பழத்தினை அந்தப் பெண்தான் திருடிச் சென்று விட்டதாக சேவகர்கள் கருதினர். இதனையடுத்து அந்தப் பெண்ணை மன்னரிடம் அழைத்து சென்றனர்.

அந்தப் பெண்ணிடம், ‘பழம் உனது குடத்தில் எப்படி வந்தது?’ என்றார் மன்னன்.

அதற்கு அந்த பெண்மணி, தனது குடத்தில் அந்த பழம் எப்படி வந்தது என்று தனக்கு தெரியாது என்று கூறினாள். ஆனால் அந்த பெண் கூறியதை மன்னன் நம்பவில்லை. அந்த பெண்ணை கழுவில் ஏற்றுமாறு உத்தரவிட்டான்.

அவளைக் கழுவேற்றும்போது, ‘என்னை கர்ப்பிணிப் பெண் என்றும் பாராமல், செய்யாத தவறுக்கு என்னை கழுவேற்றிய அரசே... இனி இந்த ஊரில் பசு, பெண்கள் தவிர வேறு எவரும் உயிர் வாழ மாட்டார்கள்’ என்று சாபமிட்டாள்.

அந்த கர்ப்பிணிப்பெண் இட்ட சாபத்தின்படி அந்த ஊரே அழிந்து காடாகிப் போனது. அந்த ஊரில் பசுக்கள் மட்டும் வாழ்ந்தன. மேலும் உரோமச முனிவர் பிரதிஷ்டை செய்த சிவலிங்கம் கேட்பாரற்று கிடந்தது. அப்போது சிவபெருமான் தனது திருவிளையாடலை தொடங்கினார்.

அந்த காட்டில் இருந்த லிங்கத்தின் மீது பசுக்கள் எல்லாம் சென்று பால் சொரிந்தன. இதை அறிந்த சேவர்கள் இந்த தகவலை மன்னரிடம் கூற, அவரும் அந்த அற்புத காட்சியைக் கண்டார். உடனே அவர் சிவபெருமானுக்கு கோவில் கட்டினார். அந்த கோவில்தான் தற்போது உள்ள கோதபரமேசுவரர் ஆலயம்.

இந்தப் பகுதியில் உள்ள சிவபக்தர்கள் மூலமாக இக்கோவில் சீரமைக்கப்பட்டு, இங்கு தினமும் இரண்டு கால பூஜைகள் நடைபெற்று வருகிறது. மேலும் சிவராத்திரி, பிரதோஷம் போன்றவை சிறப்பாக நடைபெறும். திருமணம், குழந்தை பாக்கியம், கால தோஷம், நாகதோஷம் போன்றவைக்கு ராகு கால பூஜை செய்யப்படுகிறது.

ஆலய அமைப்பு :

இத்திருக்கோவில் கிழக்கு பார்த்து இருப்பதால் உள்ளே நுழைந்ததும் பக்தர்கள் முதலில் அம்மனை தான் வணங்குகிறார்கள். கருவறைக்குள் விநாயகர், சிவலிங்கம், நந்தி பகவான் ஆகியோர் உள்ளனர். எந்த கோவிலிலும் இல்லாத ஒரு அதிசயம் இக்கோவிலில் உள்ளது. அது என்னவென்றால் மூலவர் கயிலாசநாதர் நெஞ்சில் சர்ப்பம் ஒன்று உள்ளது. இதை எப்போதும் காண முடியாது. அபிஷேக நேரத்தில் மட்டுமே இதைப் பார்க்க முடியும்.

கோவிலுக்கு வெளியில் உள்ள நந்திய பெருமான் எழுந்து நிற்க முயல்வது போல் அபூர்வமாக காட்சியளிக்கிறார். மேலும் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட திருவாச்சியுடன் கூடிய பன்னிரண்டு கரங்களுடன் ஆறுமுக நயினார் சன்னிதி உள்ளது. சண்டிகேசுவரர், பைரவர் ஆகியோர் தனித்தனி சன்னிதிகளில் உள்ளனர். இத்தல மானது ராகுவின் தாக்கத்தால் பாதிக்கப்படுவோர் பரிகாரம் செய்ய வேண்டிய தலமாகும்.

இத்தலத்து இறைவனை வழிபடுவது தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருநாகேசுவரம் சிவபெருமானை வழிபடுதலுக்கு சமமான ஒன்றாகும். வயிற்றுக்கோளாறு, மனநோய், மூலநோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டோர் இத்தலத்து இறைவனை வழிபட இந்த நோய்கள் நீங்குகிறது என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. மேலும் கல்வித்தடை, திருமண தடை, புத்திர தோஷம் ஆகியவைகளையும் நீக்கும் அற்புத தலமாக இக்கோவில் திகழ்கிறது. இந்த ஆலயம் தினமும் காலை 7.30 மணி முதல் 10.45 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 6.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.Share Tweet Send
0 Comments
Loading...