இந்திய தேசிய விருதுகள்

இந்திய தேசிய விருதுகள்

இந்தியாவில் குடிமக்களுக்கு தேசிய விருதுகள் (National Award) வழங்கப்படுகிறது.தேசிய விருதுகளில் முதன்மையானது பாரத ரத்னா (Bharat Ratna) .  இதற்கடுத்து இரண்டாவது உயரிய விருதாக வழங்கப்படுவது பத்ம விபூசண்(Padma Vibhushan)விருதாகும்.

இந்தியாவில் மிகச் சிறந்த தேசிய சேவை ஆற்றியவர்களை பாராட்டி பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது. கலை,அறிவியல்,இலக்கியம் மற்றும் பொதுச்சேவை ஆகிய துறைகளில் சிறந்த சேவை புரிந்தவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.

பாரத ரத்னா

பாரத ரத்னா என்பதற்கு இந்தியாவின் ரத்தினம் எனப் பொருள். ஒருவரை புகழ்வதற்கு இதைவிட சிறந்த வார்த்தை தேவையில்லை என்றே சொல்லலாம்.

தேசிய அளவில் சிறந்த சேவை புரிந்தவர்களுக்கு தேசிய விருது வழங்குவது என 1954 ஆம் ஆண்டில் முடிவு செய்யப்பட்டது. இதற்காக பாரத ரத்னா என்பது 1954 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இவ்விருது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான ஒரு வரையறை உருவாக்கப்பட்டது. ஒரு வட்டவடிவமான தங்கப்பதக்கத்தில் சூரிய சின்னமும் ,பாரத ரத்னா எனவும் எழுதப்பட வேண்டும். தங்கப்பதக்கம் 35மி.மீ வட்டம் கொண்டிருக்க வேண்டும். பாரத ரத்னா என்பது இந்தி மொழியில் எழுதப்பட வேண்டும் எனக் கூறப்பட்டது. எழுத்திற்குக் கீழே மலர் வளைய அலங்காரமும் இருக்க வேண்டும்.

பதக்கத்தின் பின்புறம் அரசு முத்திரையும்,தேசிய வாசகமும் (Motto) இடம் பெற வேண்டும். இதப் பதக்கம் வெள்ளை ரிப்பனில் இணைத்து கழுத்தில் அணிந்துகொள்ள வேண்டும். இதுபோன்று ஒரு விதியை உருவாக்கினர். ஆனால் அதன்படி பதக்கம் தயாரிக்கப்படவில்லை. ஆனால் 1955 ஆம் ஆண்டில் வடிவமைப்பு மாற்றப்பட்டது.

பாரத ரத்னா விருதானது ஒரு தங்கப்பதக்கம். அரச மர இலையில் சூரியனின் உருவமும்,பாரத ரத்னா என்ற சொல் தேவநாகரி எழுத்துகளில் பொறிக்கப்பட்டிருக்கிறது. பாரத ரத்னா விருதினை முதன்முதலில் 1954 ஆம் ஆண்டில் பெற்றவர்கள் முனைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன், சக்கரவர்த்தி இராஜகோபாலலாச்சாரி, சர் சி,வி.இராமன் ஆகியோர் ஆவர்.

பாரத ரத்னா விருது மகாத்மா காந்திக்கு வழங்கப்படவில்லை. ஏனென்றால் 1954 ஆம் ஆண்டில் இருந்த சட்டப்படி மரணம் அடைந்தவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கக் கூடாது. ஆனால் 1955 ஆம் ஆண்டில் சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதன்படி மரணம் அடைந்தவர்களுக்கும் விருது வழங்கலாம் என்பதாகும். அதன்பின் 10 நபர்களுக்கு அவர்கள் இறந்ததற்குப் பின் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

இவ்விருதினை இந்தியர்களுக்கு மட்டும்தான் வழங்க வேண்டும் என்கிற விதிமுறை எதுவும் இல்லை. ஆகவே வெளிநாட்டில் பிறந்தவர்களுக்கும் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் பிறந்து இந்தியாவின் குடியுரிமை பெற்று மக்களுக்கு சிறந்த சேவை புரிந்த அன்னை தெரெசாவுக்கு 1980 ஆம் ஆண்டில் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இதைத் தவிர இந்தியர் அல்லாத இருவருக்கு இப்பரிசு வழங்கப்பட்டுள்ளது. கான் அப்துல் கபார் கானுக்கு 1987 ஆம் ஆண்டிலும், தென்னாப்பிரிக்க விடுதலைக்காகப் போராடி 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த நெல்சன் மண்டேலாவுக்கு 1990 ஆம் ஆண்டிலும் விருது வழங்கப்பட்டது.

பத்ம விபூசன்:

பத்ம விபூசன் என்பது ஒரு தங்கப்பதக்கமும். இத்துடன் ஒரு பாராட்டு சான்றிதழும் வழங்கப்படுகிறது. இது முதன்முதலில் 1954 ஆம் ஆண்டு ஜனவரி 2 அன்று இந்திய குடியரசுத் தலைவரால் ஏற்படுத்தப்பட்டது. எந்த துறையாக இருந்தாலும் அதில் சிறப்பாக விளங்கும் ஒருவருக்கு இவ்விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

பத்ம பூசண்

பத்ம பூசண் (Padma Bhushan) என்பது இந்திய அரசால் வழங்கப்படும் ஒரு விருது. இது முதன் முதலில் ஜனவரி 2, 1954 ஆம் ஆண்டில் இந்தியக் குடியரசுத் தலைவரால் ஏற்படுத்தப்பட்டது. இது இந்திய அரசால் வழங்கப்படும் விருதுகளில் பாரத ரத்னா, பத்ம விபூசண் ஆகிய உயரிய விருதுகளுக்கு அடுத்தபடியாக மூன்றாவது உயர் விருதாகும். எந்த ஒரு துறையிலும் சிறந்து விளங்கும் ஒருவருக்கு இவ்விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

பத்மஸ்ரீ

பத்மஸ்ரீ என்பது இந்திய அரசால் வழங்கப்படும் நாட்டின் நான்காவது உயரிய குடியியல் விருது. கலை, கல்வி, தொழில், இலக்கியம், அறிவியல், விளையாட்டு, சமூக சேவை மற்றும் பொதுவாழ்வில் சிறப்பாக பங்களித்த குடிமக்களுக்கு பதக்கம் ஒன்றும் பாராட்டிதழ் ஒன்றும் கொடுக்கப்படுகிறது. இது முதன் முதலில் ஜனவரி 2, 1954 ஆம் ஆண்டில் இந்தியக் குடியரசுத் தலைவரால் ஏற்படுத்தப்பட்டது. பாரத ரத்னா,பத்ம விபூசன்,பத்ம பூசன் விருதுகளுக்கு அடுத்தபடியாக நான்காவது வரிசையில் அமைந்துள்ளது.


Share Tweet Send
0 Comments
Loading...