சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்

சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்
"போர்க்குணமிகுந்த செயல் முன்னோடிப்
பொதுவுடைமைக்கு ஏகுக அவர் பின்னாடி"

பாவேந்தர் பாரதிதாசனால் இவ்வாறு போற்றப்பட்டவர் யார் தெரியுமா. அவர் தான் ம. வெ.சிங்காரவேலர். முன்னோடியே இல்லாத முன்னோடி அவர். ஆம். எவர் ஒருவர் கற்பித்தல் இல்லாமல், யாரும் வழிகாட்டாமல் தன்னிச்சையாக எழுந்த போராளி.

தமிழ்நாடு ஒரு சிறப்பு வாய்ந்த நிலம். உலகில் எந்த பகுதியில் ஒரு புதிய சிந்தனை பிறந்தாலும் அது தமிழகத்திலும் உதித்தெழும். அந்த வகையில் ரஷ்யா புரட்சியின் பின்னணியில் இந்தியாவில் 1920இல் எம். என். ராய் அவர்களால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டது. ஆனால் அதற்கு முன்பாகவே இந்தியாவில் 3 கம்யூனிஸ்ட் தோன்றி இருந்தார்கள். வட இந்தியாவில் எஸ். எஸ். டாங்கே, மற்றும் முஷாபர் அஹமது. தென்னிந்தியாவில் தோன்றிய முதல் கம்யூனிஸ்ட் நம் சிங்காரவேலர். இந்தியாவில் முதன்முதலில் மே தினம் கொண்டாடியவரும் இவரே. இந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் மாநாட்டுக்கு தலைமை தாங்கியவரும் சிங்காரவேலரே.

1860ஆம் ஆண்டு பிப்ரவரி 18இல் சென்னையில் ஒரு மீனவ குடும்பத்தில் பிறந்தவர் சிங்காரவேலர். திருவல்லிக்கேணியில் பள்ளி படிப்பை முடித்தார். மாநில கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றவர், சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்து 1907ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பதிவு செய்து பணியை தொடங்கினார். சாதிய கொடுமைக்கு எதிராக போராட அயோத்தி தாசரின் பௌத்த சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். அதேவேளையில் காந்தியின் விடுதலை போராட்டத்திலும் தன்னை இணைத்துக்கொண்டு போராடத் துவங்கினார்.

இந்தநிலையில் 1917-ம் ஆண்டு ரஷ்ய மண்ணில் புரட்சி வெடிக்கிறது. கம்யூனிஸ்ட்கள் ஆட்சியைக் கைப்பற்றுகின்றனர். இதைப் பத்திரிகைகளிலும் நூல்களின் வாயிலாகவும் அறிந்துகொண்ட சிங்காரவேலர் மனதிலும் புரட்சிகரச் சிந்தனை துளிர்விடத் தொடங்குகிறது. இயல்பிலேயே, பொதுவுடமை, சமத்துவம், சுய மரியாதை ஆகிய கருத்துகளில் நாட்டம் கொண்ட சிங்காரவேலருக்கு, அதை விஞ்ஞான வழியில் வெளிப்படுத்தும் மார்க்சியத் தத்துவத்தின் மீது ஈர்ப்பு ஏற்படுகிறது.

காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும், கம்யூனிசக் கருத்துகளை தான் செல்லுமிடமெங்கும் எடுத்துச் சென்றார் சிங்காரவேலர். திரு.வி.கவால் தொடங்கப்பட்ட சென்னை தொழிலாளர் சங்கத்தில் இணைந்து பணியாற்றினார். அதுவரை வெறும் ஊதிய உயர்வுப் போராட்டங்களையும் உரிமைகளை கேட்டுப் பெறுகின்ற அமைப்பாகவும் மட்டுமே செயல்பட்டு வந்த தொழிற்சங்கத்தை வேறு ஒரு வடிவத்துக்குக் கொண்டு வந்தார் சிங்காரவேலர். முதலாளிதுவம், மூலதனம் குறித்தும் கம்யூனிசம் குறித்து தொழிலாளர்களுக்கு விளக்கி தொழிலாளர்களின் அறிவுத்தளத்தை விரிவு படுத்தினார்.

1922இல் பீகாரின் கயா பகுதியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பேசிய சிங்காரவேலர் "தோழர்களே. நான் ஒரு கம்யூனிஸ்ட், உலக கம்யூனிஸ்ட்களின் பிரதிநிதி " என்று அறிவித்து இந்திய தொழிலாளர் நலன் குறித்து பேசத்தொடங்கினார்.

ஜாலியன் வாலாபாக் படுகொலையைக் கண்டித்து தன் வழக்கறிஞர் தொழிலைத் தூக்கி எறிந்தவர் சிங்காரவேலர். "இனி எப்போதும் வக்கீல் தொழில் பார்க்க மாட்டேன். என் மக்களுக்காக பாடுபடுவேன்" என்னும் உறுதி ஏற்றார்.  1923-ம் ஆண்டு மே தினம் அன்று `இந்துஸ்தான் லேபர் கிஸான்' கட்சியைத் தொடங்கினார். அதே ஆண்டு சென்னை மெரினா கடற்கரையில் இந்தியாவில் முதன்முதலில் மே தினத்தையும் கொடியேற்றிக்கொண்டாடினார். அதோடு, லேபர் கிசான் கெஜட்’ என்ற பெயரில் ஆங்கிலத்தில் வார இதழையும், `தொழிலாளன்’ என்ற தமிழ் வார இதழையும் ஆசிரியராக இருந்து பதிப்பித்து வெளியிட்டார்.

1925ஆம் ஆண்டு டிசம்பர் 28இல் கான்பூரில் நடந்த முதல் இந்திய கம்யூனிஸ்ட் மாநாட்டிற்கு தலைமை தாங்கினார் சிங்காரவேலர். 1928இல் தென்னிந்திய ரயில்வே தொழிலாளர் போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தினார். இதற்காக இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார். சிறையிலிருந்து மீண்ட அவரை பக்கவாதம் தாக்கியது. இருப்பினும் அவர் தன் எழுத்து மூலம் கம்யூனிச சிந்தனையை இறுதி வரை பரப்பினார். பெரியாரின் குடியரசு இதழில் எழுதினார். கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை மொழி பெயர்த்து வெளியிட்டார்.

சென்னை சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது தமிழ் ஆட்சி மொழியாக பெரிதும் பாடுபட்டார். மதிய உணவு திட்டம் சிங்காரவேலரின் எண்ணத்தில் உதித்ததே. அவரே அந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியவர். 1945 ஜூன் மாதம் சென்னை அச்சுத் தொழிலாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். அதுவே அவரின் கடைசி மாநாடு. 1946, பிப்ரவரி 11இல் உயிர் துறந்தார் சிங்காரவேலர். 


Share Tweet Send
0 Comments
Loading...