சென்னகேசவர் ஆலயம்

சென்னகேசவர் ஆலயம்

கர்நாடகாவிற்கு வருகை தரும் இடங்களில் ஒன்றான பேலூர், 12 ஆம் நூற்றாண்டில் சென்னக்கேஸ்வவா கோவில், சோழர்கள் மீது வெற்றியை நினைவுகூரும் மற்றும் விஷ்ணுவை அர்ப்பணிக்கவும் ஆளுயர் ஹொய்சள வம்சத்தினால் கட்டப்பட்டிருக்கிறது. இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற சிற்பங்கள் நிறைந்த சில அழகிய சிற்பங்களுடன் இது முடிவடையும் ஒரு நீண்ட 103 ஆண்டுகள் ஆனது. 14 ஆம் நூற்றாண்டில் முகலாயத் தாக்குதலைத் தாண்டி அதன் தலைநகரம் அங்கு அமைந்திருந்ததால், பேயூரில் ஹொய்சள சாம்ராஜ்யத்திற்குச் சொந்தமான பல கோவில்களை நீங்கள் காணலாம்.

பேலூர் கர்நாடகத்தின் ஹசன் மாவட்டத்தில் உள்ள ஒரு ஊர்.இது ஒரு காலத்தில் ஹோய்சால மன்னர்களின் தலைநகரமாக விளங்கியது. இங்கு உள்ள சென்னகேசவ ஆலயம் மிகவும் கலை நயம் மிகுந்தது. ஹளபேடு போல இங்கும் அருமையான கலை சிற்பங்களை கண்டு களிக்கலாம். ஹோய்சால பாணியில் அமைந்த கோவில் இது. ஆனால் முகப்பில் உள்ள ராஜகோபுரம் மட்டும் திராவிட  பாணியில்     உள்ளது. இதற்க்கு காரணம் இந்த கோபுரம் மட்டும் பிற்காலத்திலே விஜயநகர மன்னர்களால் எழுப்பப்பட்டது.  சென்னகேசவ என்றால் கன்னடத்தில் அழகான விஷ்ணு என்று பொருள்.

தலபெருமை:

மூலவர் சென்னகேசவர்: சென்னகேசவரின் நெற்றியில் ஸ்ரீசூர்ணம் செந்நிறத்தில் காட்சி தருகிறது. நின்றகோலத்தில் பெருமாள் சேவை சாதிக்கிறார். முகத்தில் பெண்மையின் எழிலும், கண்களில் அருளும் இழையோடுகிறது. மூக்குத்தி அணிந்திருக்கிறார். பாதத்தில் சதங்கையும், கொலுசும் அழகு செய்கின்றன. சங்கு, சக்கரம் இரண்டையும் மேல் இரு கைகள் தாங்கி நிற்கின்றன. வலக்கரத்தில் திருமகள்போல தாமரை மலரைத் தாங்குகிறார். இடக்கரம் கதாயுதத்தை தாங்கி நிற்கிறது. பெரிய பீடத்தின் மேல் 6 அடி உயரத்தில் இப்பெருமாளின் திருவுருவம் விளங்குகிறது. கேசவன் என்றால் தடைகளை நீக்குபவன் என்று பொருள். இக்கோயில் கோபுர கலசத்தைக் காண்பதால் சாபவிமோசனமும், சென்ன கேசவரின் பாதத்தைத் தரிசிப்பதால் பாவ விமோசனமும் உண்டாகும் என்பதை சிகர தரிசனம் சாபவிமோசனம், பாததரிசனம் பாவவிமோசனம் என்று குறிப்பிடுகின்றனர். கோபுரத்தைத் தாண்டிச் செல்லும்போது, கருடாழ்வார் சிறகை விரித்தபடி மூலவர் சன்னதியின் முன் திறந்த வெளியில் நின்றகோலத்தில் சேவை சாதிக்கிறார்.

சென்னகேசவப் பெருமாள் கருவறையும், அதன்முன் அமைந்த அற்புதமான சிற்பத் தூண்களும், பல்வேறு உருவங்கள் செதுக்கப்பெற்ற விதானமும் அந்தக் கோயிலில் இருந்து வெளியே செல்ல அமைக்கப்பட்ட மூன்று வாயில்களும் விஷ்ணுவர்த்தன் காலத்தில் அமைக்கப்பட்டவை. சென்ன கேசவப் பெருமாள் கோயில் வளாகம் முழுவதிலும் நுட்பமான சிற்பங்கள் பரந்து கிடக்கின்றன. யானைகள், குதிரைகள், யாளி உருவங்கள், இதிகாச, புராணக் காட்சிகள், அழகு நங்கையரின் நடனக் கோலங்கள் என்று காணுமிடமெல்லாம் சிற்பங்கள் நம் கண்களைக் கவர்ந்திழுக்கின்றன. ஆண்டாள், சவும்யநாயகி மற்றும் பல கடவுட் திருவுருவங்களை உள்ளடக்கிய வீர நாராயணர் கோயிலும் இங்கே தனியாக உள்ளது.

பேளூர் சிற்பங்களில் காளிங்க நர்த்தனக் காட்சி, வாமன அவதாரம், பிரகலாதன் கதை, கிருஷ்ணனால் வதம் செய்யப்படும் கம்சன், பாற்கடலில் ஆதிசேஷனைப் படுக்கையாகக் கொண்டு பள்ளி கொண்ட ரங்கநாதர் திருக்கோலம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

இவற்றைத் தவிர, கோயிலுக்குள்ளும் வெளியேயும் அற்புதச் சிற்பங்கள் உள்ளன. ஓர் அழகி தன் இடக்கையில் கண்ணாடி வைத்துத் தன் அழகை ரசிக்கும் சில, இடது கையில் வெற்றிலை-பாக்கை மடித்து வைத்துக் கொண்டு வலது கையால் காதலனுக்குக் கடிதம் எழுதும் பெண், இவளது இருபுறத்திலும் பணிப்பெண்டிர் உதவி செய்கிற காட்சி, அலங்காரம் செய்து கொள்ளும் பெண், தொலைவில் உட்கார்ந்திருக்கும் பறவையைக் குறி பார்த்து அம்பு எய்யும் மங்கை, ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் வரும் சூரியன், சிவனும் பார்வதியும் அமர்ந்துள்ள கைலாச பர்வதத்தைத் தூக்கும் ராவணன், மகிஷாசுரனை வதம் செய்யும் சாமுண்டீஸ்வரி... இப்படி ஏராளமான சிற்பங்கள் கண்ணையும் கருத்தையும் கவருகின்றன.

ஆலயச் சுவரில் ஆறு வரிசைகளில் அற்புதச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. முதல் வரிசை: யானைகள், விதம் விதமாகக் காட்சியளிக்கின்றன. இரண்டாம் வரிசை: அபூர்வ சிங்கங்கள் பல விதத் தோற்றங்களில். மூன்றாம் வரிசை: சிப்பாய்களும் குதிரைகளும். நான்காவது வரிசை: விசித்திரப் பிராணியான மகரம் விதவிதமான போஸ்களில். ஐந்தாவது வரிசை: வாத்துகள், அழகழகான காட்சிகளில், இதற்கு மேல் ஆறாவது வரிசை: இந்துக் கடவுளர்கள், அம்பிகைகள்...

வடக்கு வாசலை நெருங்கும்போது இசை வாத்தியங்கள் இசைப்போரின் சிற்பங்கள், ஹொய்சளேஸ்வரர், சாந்தளேஸ்வரர் ஆகியோரின் முன்பாக உள்ள நந்தி மண்டபத்தில் பெரிய நந்திகள் அழகாகச் செதுக்கப்பட்டுக் காட்சியளிக்கின்றன.  இவை தவிர, மேற்கு, தெற்குப் புறங்களிலும் ஏராள சிற்பங்கள்... இந்தக் கோயிலில் தெற்குப் பகுதியில் கோவர்த்தனகிரியைத் தூக்கிக் கொண்டிருக்கும் கிருஷ்ணன், மேற்குப் பகுதியில் கஜேந்திர மோட்சம் ஆகிய சிற்பங்கள் காட்சியளிக்கின்றன. அபிமன்யுவின் மரணச் செய்தி கேட்டதும் தேரிலிருந்து இறங்கி, குளத்தில் நீராடும் அர்ஜுனன் சிற்பம் மற்றும் சிவன், விஷ்ணு சிலைகளையும் காண முடிகிறது.

இந்தியத் தொல்பொருள் துறையின் அலுவலகம் இங்கே இருக்கிறது. அழகான புல் தரை, கோயிலை நோக்கிப் போகும் வழியின் இருபுறமும் பூச்செடிகள், கூப்பிடும் தூரத்தில் அழகான ஒரு ஏரி என்று சுற்றுலா செல்பவர்கள் கண்டு களிக்க - ஹளபேடு ஒரு அற்புதமான ஆன்மிக சுற்றுலாத் தலம்!

ஆன்மிகத்துக்கு ஆன்மிகம், அழகுக்கு அழகு, கலைக்குக் கலை, ரசனைக்கு ரசனை ... இப்படி எல்லாவற்றுக்கும் ஏற்ற இடங்கள்தான் பேளூர் மற்றும் ஹளபேடு கோயில்கள்!

மகரதோரண நுழைவாயில்: நுழைவு வாயிலில் உள்ள துவாரபாலகர்களான ஜெய,விஜயர் மகாவிஷ்ணுவின் அம்சத்தோடு திகழ்கின்றனர். அவர்கள் நிற்குமிடம் மகரதோரண நுழைவாயில் எனப்படுகிறது. வாயிலின் இருபுறமும் யானைகளும், ராஜாராணி சிற்பங்களும், சேடிப்பெண்கள், நாட்டியமாதர் வடிவங்களும் வடிக்கப்பட்டுள்ளன. வாசலைத் தொட்டால் வழுவழுப்பாக இருக்கிறது. இப்பகுதியில் மாக்கல் கிடைத்ததால் நுட்பமான வேலைப்பாடு சாத்தியமானதாகவும், அந்தக்கல் வெயில்,காற்று படும்போது இறுகி வழுவழுப்புத்தன்மை பெறுவதாகவும் சொல்கின்றனர்.

நவரங்க மண்டபம்: மூலவரின் சந்நிதி முன் இருக்கும் நவரங்க மண்டபத்தை அந்தராளம் சுதநாசி என்கின்றனர். இங்கிருக்கும் தூண்களின் வேலைப்பாட்டினைச் சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. நாட்டியப்பெண் தன் முடியைப் பின்னலிட்டு, ஆடை ஆபரணம் புனைவதும், கண்ணாடி பார்த்து திலகமிடுவதும், ஆடைதிருத்தி நடனத்திற்கு ஆயத்தமாவதுமாக பல சிலைகள் உள்ளன. மன்னன் விஷ்ணுவர்த்தனனின் மனைவி சாந்தளாதேவி நாட்டியம், இசையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவள் என்பதால் இம்மண்டபத்தை அமைத்ததாகக் கூறுகின்றனர்.


சவுமிய நாயகி: பேளூரில் வீற்றிருக்கும் தாயார் சவுமியநாயகி. சவுமியம் என்றால் அழகு. தாயாரின் அழகில் மயங்கி சென்னகேசவப் பெருமாள் பாதம் தேய நடையாய் நடப்பதாகச் சொல்கின்றனர். வெள்ளிதோறும் தாயாரோடு பெருமாள் பவனி நடக்கிறது. ஸ்ரீதேவி, பூதேவி தாயாரோடு சனிக்கிழமைகளில் மஞ்சனசேவையில் காட்சி தருகிறார். ஆடியில் சவுமியத்தாயாருக்கு நடக்கும் ஊஞ்சல் சேவை மிகவும் புகழ்பெற்றது.

அனைவரும் சமம்: ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ராமானுஜர் இங்கு வந்தார். அனைத்து ஜாதிமக்களும் சென்னகேசவரை வணங்க ஏற்பாடு செய்தார். இப்பகுதி மக்கள் இவரை குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.   தினமும் மதியம் அன்னதானம் நடைபெறுகிறது.

தல வரலாறு:

விருகாசுரன் பலவரங்களைப் பெற்றான். யாருடைய தலையில் கை வைத்தாலும் அவன் சாம்பலாகிவிடுவான் என்பதும் ஒருவரம். அதனால் அவனுக்கு பஸ்மாசுரன் என்றும் பெயர் வந்தது. பஸ்மம் என்றால் சாம்பல். கண்ணில் கண்டவர்களை எல்லாம் சாம்பலாக்கிவிடத் துணிந்தான். தேவலோகமும் அசுரனால் ஆட்டம் கண்டது. இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் செய்வதறியாமல் மகாவிஷ்ணுவின் உதவியை நாடினர். பெண் பித்தனான அசுரனை அவன் வழியிலேயே சென்று சம்ஹாரம் செய்ய மோகினியாக வடிவெடுத்தார் விஷ்ணு. அசுரனின் முன் சென்று அவனை மயக்கினார். காமவலையில் சிக்கிய அவனை நீராடிவரும்படி கூறினார். அவன் நீராடும் போது, தலையைத் தேய்க்கும்படி கூறவே, மோகினியின் அழகில் தன்னிலை மறந்திருந்த அவன், தலையில் கை வைக்க சாம்பலாகி விட்டான். ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்ற உண்மையை உலகுக்கு உணர்த்த இந்த லீலையை நிகழ்த்தினார் விஷ்ணு. இந்த சம்பவம் நிகழ்ந்த இடத்தில் மகாவிஷ்ணுவுக்கு கோயில் எழுந்தது. அதுவே பேளுர் சென்னகேசவர் கோயில். குடும்பத்துக்காக ஆக்கப்பூர்வமான பணிகளைச் செய்து கொண்டிருக்கும் பெண்கள் இவரை வணங்கி வந்தால், அந்தப் பணிகளை நிச்சயம் வெற்றியடையச் செய்வார்.

பஞ்சநாராயணர் கோயில்: பிட்டிதேவராய மன்னன் இப்பகுதியை பத்தாம் நூற்றாண்டில் ஆண்டு வந்தான். அவன் ஜைனமதத்தைச் சேர்ந்தவன். மன்னனின் மகள் பேய்பிடித்து பைத்தியம் போல இருந்தாள். விஷ்ணுபக்தையான மன்னனின் மனைவி தமிழகத்தில் இருந்து வந்த ராமானுஜரின் உதவியை நாடினாள். ராமானுஜரும் பேயிடம் இருந்து இளவரசியை மீட்டாள். இந்நிகழ்ச்சிக்குப் பின், பிட்டிதேவராயன் தன் பெயரை விஷ்ணுவர்த்தனன் என்று மாற்றிக் கொண்டு தீவிர விஷ்ணுபக்தனாகி ஐந்து கோயில்களைக் கட்டினான். இக்கோயில்கள் பஞ்சநாராயணத்தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. விஷ்ணுவர்த்தன் கட்டியதே பேளூர் கேசவநாராயணர் கோயில். இதுதவிர, கடக் வீரநாராயணர், மேல்கோட்டை செல்வநாராயணர், தலக்காடு கீர்த்தி நாராயணர், குண்டுலபேட்டை விஜயநாராயணர் கோயில்களும் இவனால் கட்டப்பட்டன. சென்னகேசவர் கோயில் மிகவும் கலைநயம் மிக்கதாகும்.

நேர்த்திக்கடன்:

பெருமாளுக்கும், தாயாருக்கும் திருமஞ்சனம் செய்து, புது வஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.


Share Tweet Send
0 Comments
Loading...